ஆடிப்பெருக்கும், அருகம்புல்லும், அருமைப்பாட்டியும்!

ஆடிப்பெருக்கும், அருகம்புல்லும், அருமைப்பாட்டியும்!

டி மாதம் வந்துட்டாலே சேலம் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் அதுலேயும் சேலத்திலேயே பிறந்து சேலத்திலேயே வளர்ந்து சேலத்திலேயே இருக்கிற என்னைப் போன்றவங்களுக்கு இன்னும் மகிழ்ச்சி தான்l. அம்மாயி என்று அழைக்கும் பாட்டி (அம்மாவின் அம்மா) வீடு தான் எங்களுக்கு எல்லாம் வேடந்தாங்கல் . ஆடி பண்டிகை வந்துட்டாவே அம்மாவோட பிறந்த அக்கா தங்கச்சிங்க அவங்களோட குழந்தைங்க அப்படின்னு நாங்க எல்லாரும் சேர்ந்துட்டா  வீடு அமர்களப்படும். 

ஆடி ஒன்னுன்னு ஆளுக்கு ஒரு தேங்காயை கையில கொடுத்து மொட்டை மாடியில் கொண்டு போயி கொஞ்சம் கோலமாவையும் செங்கல்பொடி மாவையும் கொடுத்துட்டாங்கனா நாங்க வரைக்கும் அந்த தேங்காயே “என்ன விடு”ன்னு சொல்ற அளவுக்கு உரசி அதுல யாரு நல்லா உரசி இருக்காங்கன்னு சொல்லி அதற்கு ஒரு பாராட்ட பாட்டிகிட்ட வாங்குறதுல இருக்க ஒரு சுகம் இருக்கே...ஆஹா...

அடுத்து இந்த ஆடி 18 வந்துட்டா ஆள் ஆளுக்கு ஒரு காசு எடுத்துப்போம் அந்த காசு கூட அருகம்புல்ல பறிச்சிட்டு வந்து தலையில வச்சு தலைக்கு தண்ணி ஊத்தணும் அப்படிங்கறது எங்க பாட்டியோட உத்தரவு . இதுக்கு வரிசையா எல்லாரும் பாத்ரூம்ல தலைக்கு தண்ணி ஊத்துவது பையில காசோட ரெடியா இருக்கும் அப்ப எல்லாம் வந்து மூணு வயசு குழந்தையில இருந்து 30 வயசு அம்மா வரைக்கும் எல்லாம் ஒண்ணாவே குளிக்கிறது பழக்கம் பெரிய பாத்ரூம் அதுல லைனா நிக்கணும்.  அதுல கிழக்காலே பார்த்து முக்காலி போட்டு சுடுதண்ணி விழாவி வச்சு ஒவ்வொருத்தருக்கும் அந்த காசையும் அந்த அருகம்புல்லையும் வெச்சு காவிரிக்கு நன்றி சொல்லி தலையில தண்ணீர் ஊற்றுவாங்க.

மூணு (கனு) இலைகள் இருக்கிற மாதிரியான அருகம்புல்ல தான் பறிச்சிட்டு வர சொல்லுவாங்க. இதை பறிக்கிறதுக்கு நாங்க ரோட்டோரமா போயி வரிசையா போட்டிப்  போட்டு  பறிக்கிறது ஒரு விளையாட்டா இருக்கும். பாருங்க அதை எடுத்துட்டு வந்து பாட்டு கிட்ட காமிச்சா ஆஹா அதுக்கு ஒரு தனி பாராட்டு கிடைக்கும். ஆனா ஒன்று காசும் புல்லும் எதுக்கு வெச்சு ஊத்தறீங்க அப்படின்னு நானும் என்னோட அஞ்சு வயசு என் பத்து வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கேன் இப்ப எனக்கு 55 வயசு ஆச்சு இப்ப என் பேத்தி கேக்குறா.

நானா தெரிஞ்சுகிட்ட ஒரு பதில் இது. ஆடியில மகாபாரத போர் வந்தது இல்லையா? ஆடி ஒன்னுல இருந்து ஆடி 18 வரைக்கும் மகாபாரத போரோடத் தொடர்ச்சியா அதனுடைய நினைவாகத்தான் இந்த மாதிரி சம்பிரதாயங்கள் எல்லாமே வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். எப்படினா  ஆடி ஒன்று அன்னிக்கு அசுரர்களை வதம் செய்யற மாதிரி தேங்காய் சுட்டு பிள்ளையாருக்கு படைச்சிட்டு ஒரு வெற்றிக்கான வழிபடுதலா ஆரம்பிச்சிருக்காங்க.

அதே மாதிரி முடியுற அன்னைக்கு அருகம்புல் அப்படிங்கறது வந்து விநாயகர் பெருமானுடன் சம்பந்தப்பட்டது. மருத்துவ குணமிக்க அந்த புல் இந்த ஆடி மாசத்துல வரக்கூடிய புது வெள்ளம் அதாவது புது தண்ணீரினால் நமக்கு வரக்கூடிய நோய் எது நோய்களை தீர்க்கக்கூடிய சக்தி  அந்த அருகம் புல்லுக்கு இருக்கு அப்படிங்கிறப்ப அந்த அருகம்புல்ல நீங்க சும்மா சாப்பிட சொன்னீங்கனாலோ அல்லது சும்மா எடுத்துட்டு வாங்கனா எடுத்துட்டு வர மாட்டோம். ஆக இந்த நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கணும் அப்படிங்கறதுக்காகவே தலையில் அந்த அருகம்புல்ல படற மாதிரி வச்சு தண்ணி ஊத்திருக்காங்க அப்படிங்கறது என்னுடைய சுய கருத்து. இது தப்பு அப்படினா எதற்காக ஏன் அப்படிங்கிறது யாராவது தெரிஞ்சா தயவு செய்து எழுதுங்க காத்துட்டு இருக்கோம். ஏன்னா சரியான தகவலுக்காக... அப்பதான் நானும் என் பேத்திக்கு சரியா சொல்ல முடியும்.

காசு எதுக்கு? எல்லா சுகதுக்கங்கள் உலகத்தின் மாயைகள் அனைத்தையும் விலக்கிட்டு நாம ஆன்மீக ரீதியா ஆன்மா பக்கம் திரும்பனும். அதை எப்படி உணர்த்தறது? பொருள் அதாவது செல்வத்தின் குறியீடா காசு இருக்குது. அதையும் நீ விட்டு வா அப்படிங்கற மாதிரி அதை தலையில வச்சு தண்ணி ஊத்திட்டு அந்த காசை கொண்டுபோய் இறைவன் இடம் அதாவது பிள்ளையார் கோவிலில் அந்த காசை கொண்டு போய் போட்டுருவோம். இதுதான் வந்து காசுக்கான காரணம்னு நான் நினைக்கிறேன்.

அதனால எங்க பாட்டி பண்ணின அலும்பு இருக்கே எதை தொட்டாலும் சாமி கண்ணுக்குத்திடும் சாமி கண்ணு குத்திடும் சொல்லி சொல்லியே எங்களுக்கு இந்த பழக்கத்தை எல்லாம் இதுவரைக்கும் எங்க மனசுல ஊறின பழக்கமாக்கிட்டு போயிட்டாங்க. அந்த காலத்து பழக்கத்துக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் தான். ஆனா இந்த காலத்துல என் பொண்ணுகிட்ட நேத்தே நான் காசு வச்சு குளி அப்படின்னு சொல்லி இருந்தேன் இன்னைக்கு அவ அழகா குளிச்சிட்டு வந்துட்டா. ஆஹா பரவால்ல நாம சொன்னா பேச்ச கேட்டுக்கிட்டாளேனு சந்தோசமா  பார்த்தா “அடடா காசே வச்சு குளிக்கலாமா தலை எல்லாம் ஒரே அரிப்பா இருந்ததா அதனால குளிச்சேன் அப்படின்னாளே” பார்க்கலாம்.

அது ஆச்சா என் பேத்திக்கு தலைல காசும் புல்லும் பறிச்சிட்டு வந்து குளிக்கவைத்தேன். அவளுக்கு என்ன ஒரு சந்தோசம். சுபாமா இந்த காசு எதுக்கு? சுபாம்மா இந்த புல்லு எதுக்கு சுபாமா? அப்படின்னு கேட்ட கேட்டு நாங்க எப்படி எங்க பாட்டிய கேள்விகளால அரிச்சு எடுத்தோமோ அதே மாதிரி என் பேத்தியும் படுத்தறா. என் பாட்டியோட நிலைமை இப்போது தான் எனக்கும் புரியுது  ஆனாலும் பாட்டி கிரேட்தான்.

அட இருங்க இருங்க அந்தக் காசைக் கொண்டு போய்கோவில்ல போடலனா பிள்ளையார் கனவுல வந்து தந்தத்தால குத்திடப் போறாரு போட்டுட்டு வந்துடறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com