

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!!! இந்த பழமொழியை நாம் எல்லோருமே கேட்டிருப்போம்.
அகம் என்றால் என்ன?? அகம் என்றால் உட்புறம்..
அகத்தின் அழகு என்று சொல்லும் போது இரண்டு விதமான அகங்களை எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒன்று மனத்தின் அகம், இன்னொன்று உடலின் அகம். பொதுவாக மேலோட்டமாக இந்த பழமொழியின் விளக்கத்தைப் பார்த்தால் நம்முடைய மனத்தின் அகத்தில் உள்ளதை நம்முடைய முகமானது காட்டிக் கொடுக்கும்.
அதாவது நம் மனதிற்குள் இருக்கும் கவலை, சந்தோஷம், துக்கம், கோபம் போன்ற எதுவாக இருந்தாலும் நம் முகத்தோற்றமானது அதை அழகாக எடுத்து காட்டி விடும். ஆகவே தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் இதற்கு மருத்துவ ரீதியாகவும் விளக்கமிருக்கிறது. தெரியுமா உங்களுக்கு??
அதாவது நம்முடைய உடலின் அகத்தில் எந்தவிதமான பிரச்சனை ஏற்பட்டாலும் அதை வெளிபடுத்துவதும் இந்த முகம் தான். உதாரணத்திற்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டால் நம் முகத்திலுள்ள மூக்கின் மூலமாக தெரிந்துவிடும்.
உடலின் அகத்தில் அதிக உஷ்ணமிருந்தால் முகத்திலும் வாயிலும் புண்கள் வரும். கண்களும் சிவப்பாகும். ஏதாவது இன்ஃபெக்ஷன் இருந்தால் காதுகளிலும் கண்களிலும் அதன் விளைவை காணலாம். இரத்த சோகை இருந்தால் நாக்கில் தெரியும். ஆகவே உடலில் உள்ள குறைகளை நம் முகத்திலுள்ள ஐம்புலன்களின் மூலமாக உணர்ந்து கொள்ளலாம்.
இந்த காரணத்தினால் தான், மருத்துவர்களும் நமக்கு உடல் நிலை சரியில்லாத போது, முதலில் நம் முகத்திலுள்ள கண்கள், காது, நாக்கு போன்றவற்றை தான் முதலில் சோதனை செய்வார்கள். முகத்தை பரிசோதிக்கும் போதே அவர்களுக்கு ஒரளவிற்கு பிரச்சனை புரிந்து விடும்.
ஆக மொத்தத்தில் நம்முடைய மனமும் உடலும் நன்றாக நல்ல எண்ணத்தோடு இருக்கும் பட்சத்தில் நம்முடைய முகமானது அழகாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் வயதானாலும் கூட பார்ப்பதற்கு இளமையாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுடைய உடல் அகம் மற்றும் மன அகம் இரண்டுமே அழகாக இருக்கிறது.
இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் நம்முடைய முகத் தோரணையை வைத்து நாமே நம்மை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான உடலோடு தூய்மையான எண்ணத்தோடு வாழ்ந்தால் நீங்களும் பார்ப்பதற்கு இளமையாகவே இருப்பீர்கள்!!!