பெரியோர்கள் மற்றும் சான்றோர்களைப் பார்க்கையில், காலில் விழுந்து வணங்கு! ஆசீர்வாதம் வாங்கு என்று சொல்வதின் காரணம் என்ன?
ஆசீர்வாதம் என்பது நமது "கலாச்சாரத்தோடு" ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அவர்களின் ஆசி கூடுதல் சிறப்பு தருமெனக் கூறுவார்கள். தவிர, காலைத் தொட்டு வணங்குவதில் கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான அடிப்படை இரண்டும் உள்ளன.
மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்றும் சொல்லலாம். குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுந்து வணங்குவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூல காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்பதற்காக, நன்றி தெரிவிக்கும் விதமாகும்.
பெரியோர்கள் மற்றும் வயதானவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும்போது நம்மிடம் சக்தி அதிகரித்து பெரும் பலத்தைக் கொடுக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், மனிதர்களின் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை பயன்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் பழக்கம்.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும்போது, அவர்களின் காலைத்தொட்டு ஆசி பெறுவதற்கான காரணம், அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது என்பதே. காலைத் தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. காரியம் ஆகவேண்டி காலில் விழுபவர்கள் அநேகம். இதைத் தடுக்க இயலாது.
மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது. பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது என்கிற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.
பலவகை ஆசீர்வாத வாழ்த்துக்கள்:-
நம்மிடம் ஒருவர் ஆசி கேட்கும்போது, மனப்பூர்வமாக எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்தலாம். ஆசீர்வாதம் பெறுவதும், செய்வதும் சக்தியை அதிகரிக்கும்.
பெண்களுக்கு:-
(தீர்க்க சுமங்கலி பவ) தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.
ஆண்களுக்கு:-
(தீர்க்காயுஷ்மான் பவ) நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் அல்லது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தலாம். பூணூல் அணிந்த பலர் "அபிவாதயே" எனும் மந்திரம் சொல்லி, சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது வழக்கம். இது அதிக பலனை அளிக்கக் கூடியதொன்றாகும்.
மணமக்களுக்கு:-
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தலாம்.
குழந்தைகளுக்கு:-
நோய் நொடியின்றி கல்விச்செல்வம் பெற்று நலமுடன், வளமுடன் வாழ்கவென வாழ்த்தலாம்.
பெரியோர்களிடம் ஆசி பெற்றே மார்க்கண்டேயன், ஆஞ்சநேயர் போன்றோர் இன்னும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என ஆன்றோர்கள் கூறுகின்றனர்.