ஃபேஷன் உலகின் முக்கியச் சொற்கள்!

ஃபேஷன் உலகின் முக்கியச் சொற்கள்!

வ்வொரு மனிதருக்கும் பெயர் என்று வைப்பது அவரை தனித்துவமாக அடையாளம் கண்டுகொள்ளத்தான். முகமும் வெளித் தோற்றமும் நபருக்கு நபர் முழுவதும் வேறாக இருந்தாலும், பெயர் என்பது மிகவும் முக்கிய மானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. நம் வீட்டில் ஒரு செல்லப் பிராணி இருந்தால் கூட, அதையும் ஒரு க்யூட்டான பெயர் சொல்லித்தான் அழைப்போம். அதே போல், ‘ஃபேஷன்’ உலகிலும் சில முக்கியமான வார்த்தைகள் உள்ளன. பல நேரங்களில் அவை தவறான வார்த்தைப் பிரயோகத்தில் சிக்கித் தவிக்கின்றன. சிலவற்றின் அர்த்தங்கள் இதோ: 

1.   ஃபைபர் [Fiber]: இதை நார் அல்லது நார்பொருள் என்றும் அழைப்பர். எந்தவொரு நூல் அல்லது துணி செய்வதற்கும் மூலப் பொருளாக விளங்குவது இந்த ஃபைபர் தான். மிகவும் மெல்லிய தன்மை கொண்ட இந்தப் பொருள், இயற்கையாகவும் செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. காட்டன், லினென், உல்லன்/கம்பளி [woollen], பட்டு, சணல் போன்றவை இயற்கை ஃபைபர்கள். பாலியெஸ்டர், நைலான், அக்ரிலிக், ஸ்பான்டெக்ஸ் [spandex], ரேயான் [rayon] போன்றவை செயற்கை ஃபைபர்கள்.

2.   நூல் [Yarn]: ஃபைபரில் இருந்து தயாரிக்கப்படும் அடுத்த பொருள் தான் யார்ன் எனப்படும் நூல். இந்த நூலைத்தான் துணி தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இதன் அடர்த்தி பயன்பாட்டிற்கு ஏற்ப மாறுபடும். சாதாரணப் புடவை, சட்டை போன்ற ஆடைகளை உற்பத்தி செய்ய மிக மெலிதான நூலும், ஜீன்ஸ் போன்றவைகளுக்கு சற்று தடிமனாகவும், பெட் ஷீட், ஸ்க்ரீன் போன்றவைகளுக்கு மேலும் தடிமனான நூலும் உபயோகப்படுத்துகின்றனர்.

3.   துணி [Fabric]: நூலில் இருந்து அடுத்த கட்டத்தை அடைவது துணி. இது மூன்று வகைப்படும். அவை, வோவன்–நெய்யப்பட்ட [woven], நிட்டட் – பின்னப்பட்ட [knitted] மற்றும் நெய்யப்படாத – நான் வோவன் [non-woven] துணிகளாகும். இந்த நான்-வோவன் மட்டும் நேரடியாக ஃபைபரிலிருந்து வலை போல ஒன்று சேர்ந்து இரசாயனத்தாலோ, சூட்டினாலோ, இயந்திரத்தாலோ துணியாக தயாரிக்கப்படுகிறது. தறிகள் வோவன் துணிகளையும், நிட்டிங் மெஷின் பின்னப்பட்ட துணிகளையும் தயாரிக்கின்றன. புடவை, சுடிதார், சட்டை, பேண்ட், ஸ்கர்ட் போன்றவை வோவன் துணிகளிலிருந்தும், ஸ்வெட்டர், கம்பளி, டீ-சர்ட், லெக்கின்ஸ் போன்றவை நிட்டட் துணிகளிலிருந்தும், மருத்துவப் பாதுகாப்பு உடைகள், மாஸ்க் இன்டர்லைனிங் துணி [interlining fabric] போன்றவை நான்-வோவன் துணிகளிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

4.   உடை / ஆடை [Garment]: துணிகளை ஒன்றாக இணைத்து செய்யப்பட்டு நம் உடலில் உடுத்தப் பயன்படுத்தும் பொருள் உடை அல்லது ஆடை எனப்படுகிறது. வெளிப்புறச் சூழலிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவதற்காக முதன் முதலில் ஆடைகளை உபயோகித்தனர். பின்னர், அதுவே ஒரு முக்கியமான செயல்பாடு அம்சமாக நம் தோற்றத்தில் பங்கெடுத்து கொண்டது. உள்ளாடைகள், தொப்பிகள், கிளவ்ஸ், சாக்ஸ் முதலிய வஸ்துகளும் இதில் அடங்கும்.

5.   ரெடி-டு-வேர் [Ready-to-wear]: ரெடி மேட் ஆடைகளை ரெடி-டு-வேர் என்றழைப்பர். கடையில் வாங்கியவுடன் எந்தவொரு மாற்றமும், புதிய தையலும் இன்றி உடுத்தப்படும் உடைகள் இந்த வகையை சேர்ந்தவை. இக்காலத்தில், பெரும்பாலானவர்கள் ரெடி-டு-வேர் உடைகளை விரும்பி வாங்குகின்றனர். 

6.   சிலுவட் [Silhouette]: ஒரு உடையின் அல்லது ஒருவரின் முழுத் தோற்றத்தின் அவுட்லைன் தான் சிலுவட் எனப்படுகிறது. லூஸ் ஃபிட் [loose fit], டைட் ஃபிட் [tight fit], ஸ்ட்ரைட் ஃபிட் [straight fit], ஸ்லிம் ஃபிட் [slim fit], ரெகுலர் ஃபிட் [regular fit] மற்றும் ரிலாக்ஸ்டு ஃபிட் [relaxed fit] போன்ற சொற்கள் நம் உடை நமக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை உணர்த்துகின்றன.

7.   ஸ்டேட்மென்ட் பீஸ் [Statement piece]: நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும் எந்தவொரு பொருளும் ஸ்டேட்மென்ட் பீஸ் எனப்படும். இது நம் உடையின் டிசைனாக மட்டும் தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் ஆடையின் வண்ணம், நாம் அணிந்திருக்கும் வித்தியாசமான காதணிகள், தொப்பி, ஒப்பனை, வளையல்கள், நெக்லஸ், பாதணிகள், கையில் வைத்திருக்கும் புது வித கைப்பை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மொத்தத்தில் மிகவும் புதிதாகவும், மாறுப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com