மருத்துவ பிதாமகன் தன்வந்திரி!

மருத்துவ பிதாமகன் தன்வந்திரி!
Published on

நோயில்லாத வாழ்வுக்காக நாம் வழிபட வேண்டிய விசேஷ தெய்வம் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம். உலகைக் காத்து ரட்சிக்கும் பரம்பொருளான ஸ்ரீ மகா விஷ்ணு, தன்வந்திரி பகவான் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

தேவர்களுக்குப் பூரண வாழ்வை வழங்குவதற்காகத் திருப்பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலில் இருந்து காமதேனு, ஐராவதம்,  கௌஸ்துபமணி, மகாலக்ஷ்மி போன்ற மங்கலமான அம்சங்களுடன் தன்வந்திரி பகவானும் அவதரித்தார் என்று புராணங்கள் கூறும். இவர் தன் திருக்கரத்தில் வைத்திருக்கும் கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை உண்டதனால்தான் தேவர்கள் பூரண ஆயுளைப் பெற்றார்கள். எனவே, தன்வந்திரி பகவானை ‘மருத்துவத்துறை யின் பிதாமகர்’ என்பர்.

எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும்  தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை உட்கொள்ளலாம். தவிர, தன்வந்திரி பகவான் பிரத்தியேகமாக எழுந்தருளியிருக்கும் சில ஆலயங்களில், கிடைப்பதற்கு அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லேகியம் போன்ற ஒரு பதார்த்தத்தைப் பிரசாதமாக பக்தர்களுக்குத் தருகிறார்கள்.  இது போன்ற பிரசாதங்கள் சிறப்புமிக்கவை. நாம் வசிக்கும் வீட்டிலேயே சிறந்த பண்டிதர்களை வைத்து தன்வந்திரி ஹோமம் செய்யலாம்.

‘தன்வந்திரி’ என்பவர் யார்?

பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடையவேண்டும் என்பதற்காக, முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார் பிரம்மன். ‘சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கிய மானவர் தன்வந்திரி’ என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. அதனால் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை தன்வந்திரியை வழிபடுவது நல்லது.

* அநு என்னும் அரசனின் புத்திரராக தன்வந்திரியைப் பற்றிக் குறிப்பிடுகிறது பிரம்ம புராணம். இந்த தன்வந்திரி, பரத்வாஜ முனிவரிடம் ஆயுர்வேதத்தை முழுவதுமாகக் கற்று, அதை எட்டு வகை நூல்களாகப் பிரித்துத் தன் மாணவர்களுக்கு உபதேசித்தாராம்.

* காசியம்பதியில் வாழ்ந்த அரசன் காசிராஜனுக்கு நீண்ட நாட்களாகப் புத்திரர்கள் இல்லை. எனவே, அவன் புத்திர பாக்கியம் வேண்டி, மகாவிஷ்ணுவைத் துதித்தான். மகாவிஷ்ணுவே, காசிராஜனின் புத்திரராக - தன்வந்திரியாக அவதரித்தார். இவரே பூலோக தன்வந்திரி.  சுசருதர் இந்த தன்வந்திரியின் மாணாக்கராகத் திகழ்ந்தாராம்.

* தீர்க்கதமரது புத்திரராக தன்வந்திரி அவதரித்து, வைத்திய சாஸ்திர நூல்களை இந்த உலகத்துக்கு அளித்தாராம். இவர் எழுதிய நூல்கள்: தன்வந்திரி நிகண்டு, வைத்திய சிந்தாமணி, சிமிட்டு ரத்தினச்சுருக்கம், கலைஞானம் போன்றவை.

* ‘தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தவர்’ என்கிறது மத்ஸ்ய புராணம். தன்வந்திரியை வைத்திய ராஜா, ஆதர்ச மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது. 

தன்வந்திரி எப்படி இருப்பார்?

சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி; செவ்வரியோடிய கண்கள்; வெண்சங்குக்கோடுகளுடன் கூடிய கழுத்து; பரந்த மார்பு; பட்டு பீதாம்பரம், மலர்மாலைகள் தரித்த ஆபரணத் திருமேனி; நான்கு திருக்கரங்கள்; மேல் இருதிருக்கரங்களில் சங்கு - சக்கரம் தரித்துக் காணப்படுவார்; கீழ் இருதிருக்கரங்களில் ஒன்றில் அட்டைப் பூச்சியையும், மற்றொன்றில் அம்ருத கலசத்தையும் தாங்கிக் காணப்படுவார். வேலூர், வாலாஜா பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் பகவான், அட்டைப்பூச்சிக்குப் பதிலாக ‘சீந்தில்’ என்ற மூலிகைக் கொடியை ஏந்தியபடி காணப்படுகிறார்.

ஸ்ரீ தன்வந்த்ரி மகா மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

தன்வந்த்ரயை அம்ருத கலச ஹஸ்தாய

ஸர்வாமய விநாசனாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீமஹாவிஷ்ணுவே நவ:

தன்வந்திரி பகவான் எழுந்தருளி இருக்கும் சந்நிதிகளின் முன்னால் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். தவிர, நம் வீடுகளிலும் இதை ஜபிக்கலாம். எப்படி தெரியுமா? பஞ்சபாத்திரம் அல்லது வேறு ஏதாவது ஒரு டம்ளரில் (பித்தளை அல்லது தாமிரம்) சுத்தமான நீரை நிரப்பி வைத்து, ஒரு தர்ப்பைப்புல்லை வலது கையில் பிடித்துக் கொண்டு அதன் நுனி, ஜல பாத்திரத்தில் படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் மேலே சொன்ன மகா மந்திரத்தை 108 முறை உள்ளார்ந்த பக்தியுடன் ஜபித்தால், அந்த பலனானது நீரில் இருக்கும். பிறகு, இந்த நீரை நாம் பருகியும், வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த நீரை உட்கொள்ளவும் கொடுக்க வேண்டும். நம்மை வாட்டி வதைக்கின்ற உடல், மனம் சார்ந்த நோய்கள் பறந்தோடி விடும்.

தன்வந்திரியின் பூஜைக்குரிய இலைகள்:

துளசி, ஆலிலை, அரச இலை, வில்வம், விஷ்ணு கிராந்தி, நாயுருவி, மருக்கொழுந்து, பூர்ஜ இலை, தேவதாரு இலை போன்றவை.

பூஜைக்குரிய பூக்கள்:

செவ்வந்தி, செண்பகம், பிச்சி, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னைப்பூ, மந்தாரை போன்றவை.

தன்வந்திரிக்கு இஷ்டமான பிரசாதம்!

மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான ‘கோதுமை அவலேஹம்’ என்ற  கோதுமை அல்வா அல்லது சுக்குவெல்லம் செய்து தன்வந்திரிக்கு நைய்வதிப்பது சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com