

கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு சில வருடங்களாக இஞ்சியைத் தோல் எடுத்த பிறகே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். எப்போதோ உறவினர்களுல் யாரோ ஒருவர் சொல்ல செவி வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டது இஞ்சித் தோலில் நச்சுத் தன்மை இருப்பதால் இனி எப்போது சமைத்தாலும் இஞ்சியை முற்றிலுமாகத் தோல் நீக்கித்தான் பயன்படுத்த வேண்டும் என்று . அது அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஆனால், சமீப காலமாக சமையலுக்கு இஞ்சி பயன்படுத்தும் போதெல்லாம் மீண்டும் சில கேள்விகள் எழத்தொடங்கின.
நிஜமாகவே இஞ்சித் தோல் நச்சுத்தன்மை கொண்டது தானா?
இஞ்சியைத் தோல் நீக்காமல் சமைத்தால் என்ன ஆகக்கூடும்?
அம்மா, பாட்டி எல்லோரும் இஞ்சியைத் தோலோடு தானே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்? அப்போதெல்லாம் இந்தக் தக் குழப்பம் நமக்கு இல்லையே? இப்போது மட்டுமென்ன எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் இஞ்சியைப் பற்றி இப்படி யோசிக்கிறோம் என்றிருந்தது.
அப்போது ஒரு உண்மை புலப்பட்டது. அது என்னவென்றால்,முன்பெல்லாம் எப்போதாவது அசைவம் சமைக்கும் போதோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்படும் அளவுக்கு அடர்த்தியாக மசாலாப் பொருட்களை சமையலில் உபயோகிக்கும் போதோ மட்டும் தான் இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால், இப்போது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகோ சமையலறையில் இஞ்சி இல்லாவிட்டால் ஒரு கை உடைந்தது போல கையறுநிலைக்கு ஆளாகி விடுகிறோம்.
இன்னும் சில வீடுகளில் சும்மாவேனும் சுக்குக் காப்பி போல வெந்நீரில் இஞ்சியைப் போட்டு வேக வைத்து அனுதினமும் வடிகட்டி அருந்தாமல் இருந்தாலே அதிசயம் எனும் வகையில் இப்போது இஞ்சியின் தேவை பெருகி விட்டது!
ஆகவே, நாம் இன்னும் காலம் தாழ்த்தாமல் இஞ்சித் தோல் குறித்த கட்டுக்கதையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து விடுதல் நலம் எனத் தோன்றியது.
இஞ்சி தோல் அபாயகரமானதா?
“முற்றிலும் இல்லை. இஞ்சி தோல் உண்ணக்கூடியது தான். இதில் நன்மை பயக்கும் பாலிபினால்கள் தனித்துவமான சேர்மங்களாக உள்ளன, அத்துடன் தோலி தான் இஞ்சியின் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் அதிக அளவிலான நார்சத்து மிகுந்திருக்கிறது.”- என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயோமெடிசின் துறையில் Ph. டி பட்டம் பெற்றவரான கஞ்சன் கோயா. இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டிகிரேடிவ் நியூட்ரிஷன் மூலம் ஹெல்த் கோச்சிங் சான்றிதழ் பெற்றவர் இவர்.
அவரது கூற்றுப்படி, இஞ்சி தோலில் எந்த விதமான நச்சுத்தன்மையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை, இருப்பினும் இஞ்சியை அதிக அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது, குறிப்பாக வெறும் வயிற்றில் இஞ்சி சாறு அருந்துவது அல்லது இ்ஞ்சி கலந்த உணவுகளை உண்ணும் போது வயிற்றுப் பகுதியில் அசௌகரியம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம் என்று தெரிய வருகிறது.
சரி, அப்படியானால் தினசரி சமையலில் இஞ்சி பயன்படுத்தப்படுவதற்கான வரையறை என்ன?
தினமும் இஞ்சி சாப்பிடுவது பாதுகாப்பானதே, ஆயினும் நிபுணர்கள் நாளொன்றுக்கு 3 முதல் 4 கிராம் வரை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். தவிர, கர்ப்பிணிகள் எனில் தினமும் 1 கிராம் எடுத்துக் கொண்டால் போதும், அதற்கு மேல் வேண்டாம் என்கிறார்கள். காரணம், ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் இஞ்சியை உட்கொள்வது, ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்துவது சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சமையலில் போது இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
சாஸ்கள், சாலடுகள், சிக்கன், மீன் அல்லது இன்னபிற கடல் உணவுகள் சமைக்கும் போது இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கியும், நன்றாக மசித்தும் பயன்படுத்தலாம். அது உணவின் சுவையை மட்டுமல்ல வாசனையையும் அதிகரிக்க உதவும். தேநீரில் பயன்படுத்துகையில் தோல் நீக்காது கல் உரலில் ஏலக்காயுடன் நசுக்கிப் போட்டால் போதும் வாசம் ஏழு ஊரைக்கூட்டும். இஞ்சியின் மெல்லிய காரச்சுவை நாக்கிலும், தொண்டையிலும் உறைக்கும் போது அது தரும் இதமும், புத்துணர்வும் அலாதியானது. இஞ்சி தேநீர் அருந்தி பரவசமாகப் பொருத்தமான நேரம் அதிகாலை அல்லது அந்தி மாலை!
கெட்டுப்போன இஞ்சியைக் கண்டுபிடிப்பது எப்படி?
இஞ்சியின் தோற்றம், வாசனை, அமைப்பு என மூன்று விஷயங்களை வைத்து நம்மிடம் இருக்கும் இஞ்சி ஃப்ரெஷ்ஷானதா அல்லது கெட்டுப்போனதா? எனக் கண்டுபிடித்து விட முடியும்.
வாசனை: இஞ்சியின் நறுமணம் அவ்வளவு காரமாக இல்லாமலோ அல்லது சற்றே மட்கிப் போன வாசனையாக இருந்தாலோ இஞ்சி கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.
தோற்றம்: நீங்கள் வாங்கி வைத்த இஞ்சி அடர் மஞ்சள் நிறமாகவோ, பழுப்பு அல்லது சாம்பல் நிறமாகவோ மாறத் தொடங்கினல் அது கெட்டுப் போன இஞ்சி என்று பொருள்.
அமைப்பு: புதிய இஞ்சி கெட்டியாகவும் உறுதியானதாகவும் இருக்கும், அதுவே நாட்பட்டு பழசாகி விட்டால் மென்மையாகவோ அல்லது தொடுவதற்கு மிருதுவாகவோ மாறி விடும், அது இஞ்சி மோசமாகிவிட்டதற்கான அறிகுறியாகும்.
அவ்வளவு தான்!
இனி நீங்கள் மெனக்கெட்டு இஞ்சிக்கு தோல் சீவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியும் இஞ்சி தோல் குறித்த அச்சம் இருப்பின் தோலுடன் சமைத்து விட்டு கடைசியில் வடிகட்டித் தூக்கிப் போட்டு விடுங்கள்.