

பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வங்களாக விளங்கி அருள்புரிந்து வருபவை - பெண் தெய்வங்கள் தான்! அந்த வகையில் திரௌபதி அம்மனுக்கும் எண் ணற்ற தமிழகக் கிராமங்களில் ஆலயங்கள் உள்ளன.
திரௌபதி அம்மன் பிரதானமான தெய்வமாக இருக் கக்கூடிய ஆலயங்களில் ஏனைய தெய்வங்களாக - தர்ம ராஜா, அரவான், பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களும் தனித் தனி சன்னிதிகளில் அமைந்திருக்கும்.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் இலங்கையின் சில பகுதி களிலும் திரௌபதி வழிபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தன் பக்தர்களை அன்புடன் காத்து, தான் குடிகொண்டுள்ள கிராமத்தையும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களையும் காத்து அருள்புரியும் திரௌபதி மேல் அதீதமான பக்தியும் நம்பிக்கையும் கிராமத்தவர்களிடம் அதிகம் இருக்கிறது.
நீதிக்கும் நியாயத்துக்கும் உதாரணமாக இருந்து, அதர்மத்தை எதிர்த்த திரௌபதி, தங்களுக்கும் நல்லது செய்வாள் என்ற எதிர் பார்ப்புதான் கிராமத்து மக்களுக்கு. ஒப்பற்ற காவல் தெய்வமாகவும், கண் கண்ட தெய்வ மாகவும் வணங்கப்படுகிற திரௌபதி அம்மன், பாரதத்தின் போற்றப்படக் கூடிய இதிகாசமான மகாபாரதத்தில் வருகிற ஒரு பாத்திரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தான் சாதாரண ஒரு பெண் என்பதையும் தாண்டி, ஒரு தெய்வ சக்தி என்பதை அவ்வப்போது நிரூபித்திருக்கிறாள் திரௌபதி.
பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பாரதப் போர் மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற வேளையில் பஞ்சபாண்டவர்களுக்கு ஒரு ஐயம் வந்து விட்டது - வெற்றி தங்களுக்குக் கிடைக்குமா என்று. இந்த ஐயத்தை கிருஷ்ண பரமாத்மாவிடமே கேட்டார்கள்.
அப்போது, ‘உங்கள் ஐந்து பேருக்கும் மனைவியாக இருக்கிற திரௌபதி, இந்த உலகையே காக்கின்ற அன்னை. அவள் இருக்குமிடம் என்றைக்குமே தோல்வி யைத் தழுவாது. அவள் காளியின் மறு வடிவம்’ என் பதை அவர்களுக்கு உணர்த்தினாராம் கிருஷ்ணர்.
இன்றைக்கும் கிராமங்களில் சொத்துப் பிரச்னை, வயல் வரப்புத் தகராறு, பொருட்கள் காணாமல் போன விவகாரம் என்று வரும் போது பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் வேண்டி, திரௌபதியின் சன்னிதியை சரண் புகுவார்கள். அங்கு குறையைக் கொட்டி விட்டால், அவள் நல்ல தீர்ப்பு வழங்குவாள்.
திரௌபதி ஆலயங்களையும், அவளது மகிமைகளையும் பார்ப்பதற்கு முன்னர், ‘யார் இந்த திரௌபதி?’ என்று தெரிந்து கொள்வோமா?
பாஞ்சால தேசத்து மன்னன் துருபதன் தன் குடிமக்கள் பாராட்டும் விதத்தில் நன்றாகவே ஆட்சி செய்து வந்தான். தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்கின்ற கவலையைத் தவிர, துருபதனுக்கு எந்தக் குறையும் இல்லை. எனவே, சிவபெருமானின் அருளாசிப்படி, பிரமாண்டமான ஒரு யாகம் செய்தான். அந்த யாகத் தீயில் இருந்து உதித்தவர்கள்தான் த்ருஷ்டத்யும்னன் என்ற மகனும், திரௌபதி என்ற மகளும்.
யாகத் தீயில் இருந்து பிறந்தவள் என்பதால் ‘யாகசேனி’ என்றும், அவதரிக்கும்போது கரிய நிறத்தவள் என்பதால் ‘கிருஷ்ணை’ என்றும், பாஞ் சால தேசத்தின் இளவரசி என்பதால் ‘பாஞ்சாலி’ என்றும் திரௌபதி அழைக்கப்பட்டாள்.
முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள்தான் திரௌபதி. இதற்கு அடுத்த பிறவியில் மன்னன் காசிராஜனுக்கு மகளாகப் பிறந்தாள். அப்படி வளர்ந்து வருகின்ற பருவத்தில் சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். நித்தமும் சிவபெருமானை பக்திப் பெருக்குடன் துதித்தாள்.
திருமணம் புரியவேண்டிய பருவம் வந்ததும், சிவபெருமானைக் குறித்து தவம் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் இவளது தவத்துக்கு மனமிரங்கிய சிவபெருமான் அருள்புரிய ஆர்வம் கொண்டார். அவள் முன் தோன்றி, தரிசனம் தந்தார்.
“என்ன வரம் வேண்டும் உனக்கு?” என்று கேட்டார் சிவன்.
காசிராஜனின் புத்திரி மிகுந்த பயபக்தியுடன், “கயிலைவாசனே... ஒரு பெண்ணின் வாழ்க்கையை செழுமைப்படுத்துவது தாம்பத்தியம்தான். எனவே, எனக்கு நல்ல குணங்களைக் கொண்ட கணவர் அமைய வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்” என்று பணிந்து வணங்கினாள். இவளது விதி வசத்தால், வரத்தை இறைவன் செவிமடுத்தாரே தவிர, பதில் கூறவில்லை.
‘ஓ... நாம் கேட்டதை சிவபெருமான் கவனிக்கவில்லை போலிருக்கிறது’ என்று கருதி, காசிராஜனின் புத்திரி மீண்டும் தன் வரத்தைச் சொன்னாள்.
இரண்டாவது முறை கேட்டும், இறைவனிடம் இருந்து பதில் இல்லை. மீண்டும் சொன்னாள். பதில் இல்லை. இப்படி ஐந்து முறை சொன்ன பிறகுதான், ஒரு புன்னகையுடன் சிவபெருமான் இவளைப் பார்த்தார். பிறகு, சொன்னார்: “கவலை வேண்டாம். நீ கேட்டபடியே நல்ல குணங்கள் அமையப் பெற்ற ஐந்து கணவர்கள் உனக்கு அமைவார்கள்.”
காசிராஜனின் புத்திரி திகைத்துப் போய் இறைவனைப் பார்த்தாள். “ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருவரை மட்டுமே கணவராக அடைய விரும்புகிறேன். ஆனால், தாங்கள் ஐந்து கணவர்கள் என்று அருள்புரிகிறீரே?”
“நீ ஐந்து முறை இந்த வரத்தையே மீண்டும் மீண்டும் கேட்டதால், இப்படிப்பட்ட ஒரு வரம் கிடைத்துவிட்டது. இது உனது அடுத்த பிறவியில் அமையும்” என்று சொல்லி, பொசுக்கென்று மறைந்து போனார் இறைவன்.
காசிராஜனின் புத்திரியே அடுத்த பிறவியில், யாகத் தீயில் துருபதனின் மகளாக அவதரித்தாள். தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்களை கணவர்களாக அடையப் பெற்றாள்.
தீயில் இருந்து அவதாரம் செய்தவள் என்பதால், திரௌபதி ஆலயங்களில் தீமிதி உத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெறும். தங்கள் ஊர் திரௌபதி ஆலயத்தில் திருவிழா நடக்கும்போது அந்த ஊர் மக்கள் எங்கு வசித்தாலும், சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள். திருவிழாவில் ஒரு சில நாட்கள் கலந்து கொண்டு திரௌபதிக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தி விட்டுப் புறப்படுவது இன்றைக்கும் வழக்கமாக உள்ளது.