அட்சய திருதியைக்கு தங்கத்தட்டுவடை செட்… சேலத்தில் ருசியான புதுமை!

தங்கத்தட்டுவடை...
தங்கத்தட்டுவடை...

ட்சய திருதியை அன்று தங்கம் போன்ற செல்வம் சேர்க்கும் பொருள்களை வாங்க அனைவரும் விரும்புவார்கள். சமீப காலமாக இந்த நாளின் சிறப்புகள் பெருகி வருகிறது. அட்சய திருதியை முன்னிட்டு ஏராளமான சலுகைகளை தங்கம் மட்டுமின்றி அனைத்து பொருள்களிலும் தந்து வருகிறது வணிக உலகம்.

சிறப்பு நாளில் சிறப்பாக சிந்தித்து புதுமைகளை புகுத்துபவர்களும் உண்டு. அந்த வகையில்  தமிழகத்திலேயே முதன்முறையாக சேலத்தில்   அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள  துருவன் தட்டுவடை செட் கடையில் அட்சய திருதியை அன்று தங்கத்தில் தட்டுவடை செட் அறிமுகமாகிறது. இந்தத் தகவல் சேலம் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம். அட்சய திருதியை அன்று குன்றிமணி தங்கமாவது  வாங்க வேண்டும் என்பது மக்களின்  விருப்பம். ஆனால் இன்று தங்கத்தின் விலை மிக உச்சத்தில் இருப்பதால் தங்கம் வாங்க இயலாதவர்களின் மனக்குறை போக்க தங்கத்தையே உண்ணும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார் துருவன் தட்டுவடை செட் ஸ்ரீதர். எப்படி வந்தது இந்த ஐடியா? தங்க தட்டுவடை செட் எப்படி செய்யப்போகிறார்? கேள்விகளுடன் அணுகினோம் ஸ்ரீதரை.

"நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் புதுமையாக எதையும் செய்ய வேண்டும் என நினைப்பேன்.  தட்டுவடை செட்டுகளுக்கு பெயர் பெற்றது சேலம். முன்னால் நகை வியாபாரத்தில் இருந்தேன். கடந்த 3 வருடமாகத்தான் தட்டுவடை செட் கடை வைத்துள்ளேன். 40 முதல் 50 வகையான செட்டுகளை செய்கிறேன்.

ஸ்ரீதர்...
ஸ்ரீதர்...

ஒவ்வொரு வருடமும் ஏதேனும் புதுமையாக செய்ய வேண்டும் என நினைப்பேன். பல தேடல்களுக்குப் பின் இந்த வருடம் தங்கத்தட்டுவடை செட் செய்ய முடிவெடுத்தேன். இது மக்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் மிக கவனமாக இதை பலமுறை முயற்சி செய்த பின்னே தருகிறேன்.

24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட உண்ணக்கூடிய கோல்டு ஷீட்   (Gold sheet) தற்போது கிடைக்கிறது. அதை இந்த தங்க தட்டுவடை செட் தயாரிக்க பயன்படுத்துகிறேன்.

இரண்டு தட்டு வடைகளுக்கு நடுவில் வழக்கம் போல் கேரட் பீட்ரூட் மாங்காய் துருவல்களுடன் முந்திரி, பேரிச்சம்பழம், பாதாம்பருப்பு, கிஸ்மி பழம் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பருப்பு வகைகளை வைத்து தட்டுவடை செட்டின் உள்புறம் வழக்கமாக தடவும் காரச் சட்னிகளுக்கு பதிலாக காஷ்மீர் குல்கந்தை தடவி நான்கு தட்டுவடை செட்டுகளுக்கு மேல்புறத்தில் இந்த கோல்ட் ஷீட்டை வைத்து " தங்கத் தட்டுவடை செட்டாக" இதுவரை  மக்கள் உண்ணாத ஒரு அலாதி ருசியில்  தயாரித்து தர உள்ளோம். விலையும் வாங்கக் கூடியதாகவே இருக்கும். அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் நன்மை என்றால் தங்கத்தையே சாப்பிட்டால் மிக மிக நன்மைதானே?" என்கிறார் ஸ்ரீதர்.

இதையும் படியுங்கள்:
ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
தங்கத்தட்டுவடை...

இந்த தட்டுவடை செட்டுக்கு வழக்கம்போல் சேலம்  தட்டுவடை செட் பிரியர்களிடையே  அமோக வரவேற்பு உள்ளது. தங்க தட்டுவடை செட் சாப்பிட விரும்புவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் தனது தொழிலில் அவ்வப்போது புதுமைகள் செய்து வரும் ஸ்ரீதர்.

அட்சய திருதியைக்கு இது போன்று சிந்தித்து தங்கள் தொழிலை பெருகச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com