- எம்.முத்துக்குமார்.
உணவு, உடை, வாழ்விடம், வாழ்க்கைமுறை போன்ற அனைத்தையும்விட, மனநிலை என்பதுதான் உடல்நிலையை மாற்றும் மிக முக்கியக் காரணி.
நல்ல எண்ணங்களையே நினைக்க வேண்டும். நமது எண்ணங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். அதாவது, மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகள், எதிரில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியவேண்டும். அப்போதுதான், நமது ரத்தத்தின் தூய்மை கெடாது. நோய்களும் அண்டாது. நம் முன்னோர்கள் நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் பெற்று வாழ்ந்ததற்கு இதுபோன்ற ஆரோக்கியமான மனநிலையே முக்கிய காரணமாகும்.
ஆனால், இன்றைக்கு நம் நிலை என்ன? உள்ளூர பயம் வரும்போது வீர வசனங்களும், கடுங்கோபத்தில் சிரித்தும் பேசி வாழ வேண்டியுள்ளது. இப்படி பல சாகசங்கள் செய்து, சில வழிகளில் பணத்தைப் பெற்று, பல வழிகளில் பல பேருக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, தூக்கம் வராமல் சிரமப்படுவதா வாழ்க்கை?
ஒவ்வொரு மனிதனும் தனது மனநிலை என்ற கண்ணாடியின் மூலமே இந்த உலகைப் பார்க்கிறான். அதற்கேற்ற பலன்களை இந்த உலகத்திலிருந்து அறுவடை செய்கின்றான்.
உதாரணமாக, ஓர் இடத்தில் சாந்தமான பசுவும், துள்ளித் திரியும் அதன் கன்றும் இருக்கின்றன. அதைப் பார்க்கும் நல்லியல்புள்ள ஒருவர், காமதேனுவாய் போற்றி மகிழ்வார்.
ஒரு விவசாயி, உழவுப் பலன்களைக் கணக்கிட்டு மதிப்பார். ஒரு பால்காரர், பணத்தில் லாபம் வருமா எனப் பார்ப்பார். வியாபாரியோ, கன்றைப் பிரித்து விற்றால் லாபம் கிடைக்குமா என்று பார்ப்பார். ஒரு கசாப்புக் கடைக்காரரோ எவ்வளவு இறைச்சி தேறும் என்றுதான் பார்ப்பார். இதிலிருந்து மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அறிவியல் வளர்ச்சி என்பது, ஏதாவது ஒரு வகையில் இயற்கைக்கு எதிராகச் செயல்படுவதாகும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் அணுசக்தி மின்சாரமும் அணுகுண்டு பேரழிவும்போல் பயன்கள் குறைவாகவும், கெடுதல்கள் அதிகமாகவும் இருக்கும். தற்போதைய சமுதாயம், அறிவியல் ரீதியாக வாழ்க்கையில் உயர வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. அப்போது பலருக்கு, நடைமுறை இடையூறுகளாலும், நேர நிர்வாகத்தாலும் வெற்றி பெறுவது பாதிக்கப்படுகிறது. அதனால் ஆழ்மனத்தில் பயமும் தடுமாற்றமும் ஏற்பட்டு, பதற்றம், கோபம் போன்றவையாக மாறி முடிவில் நோயாகிறது. மெய்ஞானக் கல்வி பெற்றவர், தாமரை இலைத் தண்ணீர்போல். இது போன்ற சூழ்நிலைப் பாதிப்புகளின்றி அடுத்தடுத்த வேலைகளைத் தொடருவார்.
ஒரு குழந்தையின் தலையாயக் கடமை தன் பெற்றோரை பேணிக்காப்பதுதான். தற்போது பெற்றோர் என்னவோ, பல சிரமங்களுக்கிடையில் பெரிய படிப்புகளில் பெரிய செலவில் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால், முதியோர் இல்லங்களும், நட்சத்திர மருத்துவமனைகளும், சொத்து வழக்குகளுமே பெருகி வருகின்றன. நம் குழந்தைகளுக்கு உண்மையையும், அன்பையும், மனித நேயத்தையும் முதன்மையாகக் கற்றுத் தருவதற்குப் பதிலாக, தொழில் நுட்ப அறிவையும், நுண் கருவி களையும் பற்றிப் படிக்க வைக்கிறோம். அவர்களும் அவற்றை மட்டுமே நம்பி வாழ முயற்சிப்பதுதான் இந்த சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம்.
நாம், இயற்கைச் சங்கிலியை அறுத்துக்கொண்டு, தொழில் நுட்பத்தை நம்பித் தனியாக இயங்கி வெற்றி பெறவே முடியாது. வெற்றிபோல் தெரிவதெல்லாம் வீக்கமே தவிர வளர்ச்சியில்லை. உலகில் மனோவேகத்துக்கு இணை எதுவுமில்லை. அதனால் எந்தத் தொழில் நுட்பமும், கருவிகளும் அந்த மனத்துக்கு ஈடு கொடுத்து அதனை ஆரோக்கியமாய் வைக்கப் பயன்படாது.
பெரிய பாறைக்குள் இருக்கும் தேரையானது. அங்கு எப்போது. எப்படிச் சென்றது? யாருடைய கருணையினால் அது உயிர் வாழ்கிறது?
ஓறரிவு உயிரான தென்னை மரம்கூட ஆன்மாவின் வடிவெடுத்துதான், அந்த வான்பொருளைத் தேடி, அதனை நோக்கி வளர்கிறது. தேங்காயும் அதே ஆன்ம வடிவிலேயே உள்ளதையும், அதன் முக்கண்களையும் கண்டு, உணர்ந்து, புரிந்து கொள்ளவில்லையாயின் நமது ஆறாவது அறிவால் என்ன பயன்? உயிரற்ற அணுவில் இருக்கும் எலக்ட்ரான்கள் முதல் அண்ட பேரண்டங்கள் வரை வட்ட, நீள்வட்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளாகத் துல்லியமாக இயங்குகின்றன என்பது சாதாரணமானதா? எந்தவொரு கருவியுமின்றி இத்தனைக் கோடி பிரமாண்வ இயக்கங்கள் ஒழுங்காக இயங்கும்போது. இவற்றை இயக்கும் மையப் புள்ளி ஒன்று இருக்குமல்லவா?
அதனால் தூசியளவுகூட பெறாத நமக்கு விருப்பு வெறுப்பு எதற்கு? உடலின் சூட்சுமச் சுரப்புகள் அனைத்தும் இறையாற்றலைப் பெற்று செழிப்படைந்து பூர்ண மன, உடல் நலத்தோடு நீடு வாழ எளிய வழி ஒன்று உண்டு. அது நமது செயல்களையும் அதன் பலன்களையும் முழுவதுமாக அந்தப் பேரொளியின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துச் சரணடைவதே!
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜூலை 2012 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்