இன்பா...
இன்பா...

இன்பாவுக்கு வந்தது இன்பம் தரும் செய்தி!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் மிக எளிய குடும்பம் அது. அம்மா ஸ்டெல்லா, பதினைந்து ஆண்டுகளாக பீடி சுற்றும் தொழிலாளி. உடன் பிறந்த அண்ணன் பாலமுரளி, அண்ணி கௌசல்யா என அந்த மூவரின் ஊக்கமும் ஒத்துழைப்பும், கூடவே தன்னுடைய விடாமுயற்சியும் சேர்ந்ததால்தான் இதனைச் சாதிக்க முடிந்தது இவரால். அவருக்கு இப்போது வயது இருபத்து ஐந்து. UNION  PUBLIC  SERVICE  COMMISSION எனப்படும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வுகளில், தொடர்ந்து இரண்டு முறை தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாகத் தேர்வினில் பங்கேற்று தேர்ச்சியடைந்து வெற்றி பெற்றுள்ளார் – இன்பா!

Q

உங்களின் பள்ளிக் கல்வி எங்கு பயின்றீர்கள்?

A

வாசுதேவநல்லூரில் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். பின்னர் தென்காசியில் எம்கேவிகே மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளியில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றேன். அப்போது 1200க்கு 1140  மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அம்மா வீட்டில் பீடி சுற்றி மிகச் சொற்ப அளவே வருவாய் ஈட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப்போல நானும் ஆகி விடக் கூடாது என்று, பள்ளிக் கல்வியில் இருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படித்து வந்தேன்.

தனது தாயாருடன் இன்பா...
தனது தாயாருடன் இன்பா...
Q

பின்னர் உயர் கல்வி?

A

கோவையில் CIT பொறியியல் கல்லூரியில் நான்காண்டுகள் விடுதியில் தங்கிப் படித்து, பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றேன். அதில் தேர்ச்சி பெற்றிருந் தாலும் எனக்கு ஐடி துறையில் பணியாற்றிட விருப்பம் இல்லை. பிளஸ் டூ தேர்ச்சி பெற்றதில் இருந்தே, மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிட வேண்டும் என்று என் மனதுக்குள் ஒரு வைராக்கியம். அதுவே எனது கனவாகவும் இருந்தது. 2௦2௦ல் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்ச்சி பெற்றதும், மத்திய அரசுப் பணிகளின் தேர்வுகளுக்காக என்னைத் தயார் செய்துகொள்ளத் தொடங்கிவிட்டேன்.

Q

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க என்ன செய்தீர்கள்?

A

சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து, அங்கு தேர்வுகளுக்காகப் படிக்கத் தொடங்கினேன். ஒரு வருடம்தான். மேலும், அப்போது கொரோனா காலம் வேறு. அதனால் ஆன்லைனில் கூகுல் மீட் வகுப்புகள் என்று வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. 2௦21ல் முதன்முதலாக யூபிஎஸ்சி எக்ஸாம் எழுதினேன். அதில் நான் தேர்ச்சி பெறவில்லை. அதனால் என்ன? நான் மனம் தளரவில்லை. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நான் வந்து விட்டேன். வீட்டில் இருந்தே படிக்கத் தொடங்கினேன். 2௦22ல் மீண்டும் தேர்வு எழுதினேன். அதிலும் நான் தேர்ச்சி அடையவில்லை.

இதையும் படியுங்கள்:
மாலை நேர சோர்வே... போ போ போ!
இன்பா...
Q

சரி. இத்துடன் போதும் என்று விட்டு விட்டீர்களா?

A

அது எப்படி? ஊரில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, அது பெரும் கனவு அல்லவா? அந்த இரண்டாண்டுகளில் செங்கோட்டையில் அரசு நூலகம் ஒன்றில் என்னை முழுமையாக அடைக்கலமாக்கிக் கொண்டேன். அரசுப் பணித் தேர்வுகளுக்கென ஏற்கனவே இரண்டு மூன்று பேர் அங்கு, புத்தகங்கள் எடுத்துப் படித்துக்கொண்டிருந்தனர். அதன் அரசு நூலகர் ராமசாமி எங்கள் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, எங்களின் தேவைகளுக்கானப் புத்தகங்களை எல்லாம் வெளியில் இருந்து வாங்கி வந்து எங்களை உற்சாகப்படுத்தினார்.

Q

அடுத்து என்ன செய்தீர்கள்?

A

“2௦23ல் மூன்றாவது முறையாகத் தேர்வெழுதி, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இந்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தான் அடுத்து நேர்முகத் தேர்வின் உள்ளே போக முடியும். 2௦23 டிசம்பர் வெளியான தேர்வு முடிவுகளில் நான் தேர்ச்சி அடைந்திருந்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்பட்டிருந்தேன். 2024 ஏப்ரல் 16 அன்று நேர்முகத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிலும் நான் தேர்ச்சி பெற்றிருந்தேன். இரட்டிப்பு மகிழ்ச்சி! முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இந்த இரண்டிலும் ஒருவர் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்தான் ரேங்க்குகள் மதிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் அகில இந்திய அளவில் நான் 851 ஆவது ரேங்க் பெற்றிருக்கிறேன் என்ற இனிய செய்தியைக் கேட்டவுடன் குடும்பமே ஆனந்தத்தில் திளைத்தது. எனது பணிக்கான பயிற்சிக்குப் பின்னர் IRS  INDIAN  REVENUE  SERVICE  எனப்படும் மத்திய அரசின் ரெவென்யூ அலுவலகங்களில் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட இருக்கிறேன். இதனை என் அம்மா ஸ்டெல்லா,  அண்ணன் பாலமுரளி, அண்ணி கௌசல்யா, நூலகர் ராமசாமி மற்றும் எனக்கு ஊக்கம் அளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

செங்கோட்டையில் வசித்து வரும் இன்பாவுக்கு மங்கையர் மலர் மற்றும் கல்கி ஆன்லைன் சார்பாக வாழ்த்துகள், பாராட்டுகள்.

logo
Kalki Online
kalkionline.com