மகளிர் தினம்...
மகளிர் தினம்...pixabay.com

தையலை உயர்வு செய்த பாரதி!

மார்ச் - 03 சர்வதேச மகளிர் தினம்!

‘மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்’ அல்லும் பகலும் உழைப்பவர், கல்லும் கனியக் கசிந்துருகித் தெய்வத்தை வேண்டித் தொழுபவர் பெண் என்றெல்லாம் பெண்மையின் பெருமையை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிகவும் அழகாக கூறியிருக்கிறார்.

காலந்தோறும் பெண்மையும், பெண் மக்களும் போற்றி, புகழப்பட்டு வந்திருப்பதற்கு ஏராளமான நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு.

புராண காலத்தில் பாஞ்சாலி, சாவித்திரி, சீதாப் பிராட்டியார்; தமிழ் இலக்கியங்களில் மணிமேகலை, கண்ணகி; சங்க காலத்தில் ஒளவையார், காக்கைப் பாடினியார்; பக்தி இலக்கியங்களில் திலகவதியார், மங்கையர்க்கரசியார் மற்றும் வெள்ளையர்களுடன் சண்டையிட்டு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஜான்ஸிராணி, லக்ஷ்மிபாய் போன்ற பெண்மணிகளை என்றுமே மறக்க இயலாது.

20ஆம் நூற்றாண்டில், பெண்மையை உயர்த்திப் பிடித்த பலருள், மகாகவி பாரதியார் முன்னோடியாக திகழ்ந்தவர்.

“ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை’ என்றவர், தனது புதிய ஆத்திச்சுடியில் ‘தையலை உயர்வு செய்’ என்கிற வரி ஒன்றினை எழுதி வைத்தார்.

சமூகத்திலிருந்த தடைக்கற்களை உடைத்து முன்னேறி பெண்களால் சாதிக்க முடியுமென்பதை, ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர். தலை கவிழ்ந்தார்” என்கிற பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

அன்றைய காலகட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் கல்லூரிக்குச் சென்று பயின்ற முதல் பெண்மணியாக விளங்கினார்.

முத்துலெட்சுமி ரெட்டி
முத்துலெட்சுமி ரெட்டி

நன்கு படித்த பெண்கள் விலை கொடுத்து வாங்கியபிறகு தொழுவத்திற்குச் செல்லும் மாடுகளாக வாழ மாட்டார்கள் என்பதை,

“மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டவந்தே, வீட்டினிலெம்மிடம் காட்ட வந்தாரதை வெட்டி விட்டோமென்று கும்மியடி” என்று கூறியதோடு, பெண்களுக்கு மட்டுமே கற்புநிலை என்று இருந்ததை ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் பொதுவில் அதை வைப்போம். ஆணென்ன உசத்தி? பெண்ணென்ன தாழ்த்தி? எனப் பாடினான்.

காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து வாழும் பெண்ணின் வாழ்வு இனிப்பதோடு, இல்லறமும் சிறக்கும் என அழகாகக் கூறுகிறான் பாரதி.

இதையும் படியுங்கள்:
50வயதில் சிறந்த தொழிலதிபராக விளங்குவது எப்படி?
மகளிர் தினம்...

மேலும் விடுதலை பெற்று புது யுகத்தில், புதுமைப் பெண்ணாக வரும் ‘தையல்’ நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டவளாக இருப்பதோடு, பழமையை மறக்க மாட்டாள் என்றும் ஆணித்தரமாக பாடுகிறான்.

ஆண்கள் வகித்த அத்தனை பதவிகளிலும் அதாவது, பிரதமராக, அமைச்சராக, முதல்வராக, மருத்துவராக, ஆசிரியராக, வீரராக என இன்று பெண்கள் கோலோச்சிக்கொண்டு இருப்பது நிஜம்.

கவி பாரதி நம்மிடையே இல்லையெனினும், தையலை உயர்வு செய்து பாடிய மகத்தான செயல் இன்று பலித்திருக்கிறதென்பது நிதர்சனம். கண்கூடாக அனைவரும் பார்க்கிறோம்.

அன்று அடிமைப் பெண்ணல்லோ!

இன்று புதுமைப் பெண்ணல்லோ!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com