ஹரிதுவார் - ரிஷிகேஷ், பத்ரிநாத், மற்றும் கேதார்நாத், யாத்திரை அனுபவங்கள்!

பயணம்
ஹரிதுவார் - ரிஷிகேஷ், பத்ரிநாத், மற்றும் கேதார்நாத், யாத்திரை அனுபவங்கள்!
Published on

செப்டம்பர் 20ஆம் தேதி காலை 8 மணிக்கு சென்னை டு டெல்லி டெல்லி டு டேராடூன் ஏர்போர்ட் சென்று அங்கிருந்து டாக்ஸி பிடித்து மாலை 4 மணி அளவில் ஹரித்வார் சென்றோம். எங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் ட்ரெயினில் கிளம்பி இருபதாம் தேதி இரவு 9 மணிக்கு ஹரித்வார் வந்தடைந்தனர். எங்களுக்கு ஹரித்வாரில் தங்க வேண்டிய இடத்தை முன்னமே வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்ததால் அங்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை 6 மணி அளவில் ஹரித்துவார் ஆரத்தி பார்க்க கிளம்பினோம். கங்கா மாதாவின் ஆரத்தி தரிசனத்தை காண கண்கள் கோடி போதாது. பிறகு இரவு டிபனை முடித்துக் கொண்டு ரூம் திரும்பி நன்கு உறங்கி காலை குழுவினரோடு அறிமுகப்படுத்திக் கொண்டு அனைவரும் முதலில் கங்கா ஸ்நானம் செய்து திரும்பினோம். டிபன் சாப்பிட்டதும் ஹரிதுவாரில் உள்ள கோவில்களை தரிசிக்க கிளம்பினோம்.

முதலில் பவானி மந்திர் சென்றோம். அங்கு அழகிய பெரிய மகாமேரு. அதற்குப் பின்புறம் பவானி அம்மன். மகாமேருவை சுற்றி நவக்கிரகங்கள் , கால பைரவர் என அமைந்த மிக அற்புதமான கோவில் இது.

பிறகு ராமேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம் . ராமேஸ்வரத்தில் இருப்பது போலவே நீரில் மிதக்கும் கல், ராமேஸ்வரர் ஸ்படிகலிங்கம், அம்பாள் ஆகியவற்றை தரிசித்து திரும்பினோம். மாலை தக்ஷன் யாகம் செய்த இடம் சென்றோம். மிகப்பெரிய பிரம்மாண்டமான கோவில். தக்ஷனின் யக்ஞகுண்டம், ஸதிதேவி குண்டத்தில் இறங்கிய இடம் சிவனுக்கு ஹவிர் பாகம் தராமல் யாகம் செய்த இடம். ஆகியவற்றை தரிசித்தோம்.

க்ஷன் யாகம் செய்த இடத்தை தரிசித்து விட்டு சரியாக ஆரத்தி சமயத்தில் கங்கைக் கரையை அடைந்தோம். இரண்டாவது முறையாக ஆரத்தி தரிசனம் செய்து திரும்பினோம்.

டுத்த நாள் ரிஷிகேஷ் யாத்திரை தொடங்கியது. இது இந்துக்களின் புனிதமான இடமாக போற்றப்படுகிறது . ஹரித்துவார் போலவே இங்கும் ஆரத்தி நடக்கிறது. மக்கள் கூட்டம் எப்போதும் உள்ள இடம். ராம் ஜூலா தொங்கு பாலம். 15 நிமிடங்கள்  ஆகிறது பாலத்தை கடக்க .கிளாஸ்மந்திர் - கண்ணாடியாலான சிவன், விஷ்ணு, சரஸ்வதி, அம்பாள் என மிக அழகாக உள்ளது. ரிஷிகேஷில் சிவானந்தா ஆசிரமம், பரமாத் நிகேதன் ஆசிரமம் போன்ற ஆசிரமங்களை கண்டு தரிசித்து மகிழ்ந்தோம்.

த்ரிநாத் , கேதார்நாத் ,கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற சார்தாம் யாத்திரை செல்வதற்கான தொடக்க இடம் இதுதான். இங்கிருந்துதான் மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. நாங்கள் 50 பேர் கொண்ட குழு இரண்டு பஸ்ஸில் பயணித்தோம். இரவு பிபல்கோடி என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கி காலையில் ஜோஷிமத்(Joshimath) சென்றோம்.

Joshimath:.   உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட நாலு பீடங்களில் ஒன்று. மற்றவை சிருங்கேரி, பூரி, துவாரகா.105வது திவ்ய தேசம். தலவிருட்சம் இலந்தை மரம். ஆதிசங்கரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட நரசிம்மமூர்த்தி. குளிர் காலத்தில் பத்ரிநாத் பெருமாளின் சிங்காசனம் இந்த கோவிலில் தான் எடுத்து வந்து பூஜை செய்யப்படும். தீபாவளி முதல் அட்சய திருதியை வரை குளிர்காலத்தில் இங்கு தான் பூஜை நடைபெறும். உற்சவமூர்த்தியை (உத்தவர்) பாண்டிகேஸ்வர் என்ற இடத்தில் உள்ள கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள். நரசிம்ம மூர்த்திக்கு வலப்புரம் பத்ரி நாராயணரின் முகமும், உத்தவர், குபேரர், சண்டிமாதேவி மூர்த்திகளும் இடப்புறம் கருடன், ராமர், லக்ஷ்மணன் , சீதையின்  விக்கிரகங்களும் இருக்கின்றன. சுற்றி வரும்போது படிகளில் ஏறி மேலே செல்ல ஆதிசங்கரரின் சிலை, சிங்காசனம் , சுவரில் ஸ்லோகங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி வரும் போது சாளக்கிராமத்தால்  ஆன ஆஞ்சநேயர் , ரங்கநாதர், வாசுதேவர் ,காளி மாதா, சிவன் ஆகிய தெய்வ சன்னதிகளும் உள்ளன. பார்க்க வேண்டிய ஸ்தலம். இங்கு எங்கும் மலை சூழ்ந்து நிறைய மரங்களும் இருப்பது கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன் நிறைய குருவிகளையும் பார்க்க முடிகிறது.

Sankara Mutt: ஜோஷிமத்தில் சங்கர மடம் செல்லும் இடத்திற்கு அருகில் பவிஷ்ய கேதார்நாத் மந்திர் உள்ளது. கேதார்நாத்தில் சிவன் எப்படி இருப்பாரோ அதேபோல் இங்கு காட்சி தருகிறார். அதைத் தாண்டி சிறிது தூரம் சென்றால் கற்பக விருட்சம் அடர்ந்து பறந்து விரிந்து காணப்படுகிறது. இது 2,500 வருடங்கள் பழமையானது. இந்த மரத்தின் அடியில் நின்று எது வேண்டினாலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு அருகில் ஆதிசங்கரர் சன்னதி உள்ளது. மேலே செல்ல சங்கர மடம் பெரிய கட்டடங்களுடன் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Badrinath Temple: அங்கிருந்து பஸ் பயணமாக நரநாராயணரை தரிசிக்க பத்ரிநாத் சென்றோம். நாங்கள் சென்ற நாள் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை. அப்படி ஒரு கூட்டம். அவன் அருளால் நன்கு தரிசனம், ஆரத்தி என கிடைக்கப்பெற்றது. 108 திவ்ய தேசங்களில் பத்ரிநாத்தும் ஒன்று. இது கடல் மட்டத்திலிருந்து 10,800 அடி உயரத்தில் உள்ளது. பத்ரி என்ற சொல்லுக்கு ’இலந்தை மரம்’ என்று பொருள். இங்கு நிறைய இலந்தை மரங்கள் வளர்கின்றன. இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரம் தான். பாகவத புராணத்தின்படி ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர் உத்தவர் இறுதியில் பத்ரிகாசிரமத்தில் தங்கி தவமிருந்து மோட்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. கோவிலின் மூலவர் விஷ்ணுவின் அம்சமான நரநாராயணர் சாளக் கிராமத்தால் ஆனவர். கோவிலின் முன்புறம் அலக்நந்தா ஆறு ஓடுகிறது. கோவில் அருகில் வெந்நீர் ஊற்று உள்ளது. இதில் ’சல்பர்’அதிகம் இருப்பதாகவும் உடலுக்கு மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. நாங்கள் இதில் நன்கு குளித்தோம். கொதிக்க கொதிக்க நீர் உள்ளது. அந்த குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது.

நாங்கள் இருந்த தினத்தில் 4  டிகிரி குளிர். குளிரில் நடுங்கி போனோம் . அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. நல்ல மழை குளிருக்கு பல் அடித்துக் கொள்ள நெஞ்சு பகுதி வட வடவென்று அடித்துக் கொண்டது. இத்தனைக்கும் ஜெர்கின், ஸ்வெட்டர், உல்லன் தொப்பி அணிந்தும் குளிர் நன்கு தெரிகிறது .

இக்கோவில் தீபாவளி அன்று மூடப்பட்டு அட்சய திருதியை அன்று திறக்கப்படும். நாங்கள் போவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக நல்ல மழை. அங்கங்கு land slide ஆகி கற்களை அப்புறப் படுத்திக் கொண்டிருந்ததை பார்த்தோம் . நல்ல வேளை நாங்கள் போனபோது அப்படி எதுவும் ஆகவில்லை.

Rudraprayag -Mandakini and Alaknanda Sangamam: ருத்ரபிரயாக் பஞ்சப் பிரயாகைகளில் ஒன்று. மற்றவை தேவப் பிரயாகை, கர்ணப்ரியாகை ,நந்தபிரயாகை, விஷ்ணு பிரயாகை. அலக்நந்தாவும் மந்தாகினி ஆறும் சங்கமம் ஆகும் இடம். இங்கிருந்து 86 கிலோமீட்டர் தூரத்தில் தான் கேதார்நாத் உள்ளது. 42 கிலோமீட்டர் தூரத்தில் குப்த காசி உள்ளது. ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் புனித நீராடுதல் என்பது இந்துக்களின் நம்பிக்கை . இங்கு தான் ஹரிதாஸ் கிரி சுவாமிகள் குளிக்க வந்து ஜல சமாதி ஆனார். அதனால் இப்பொழுதெல்லாம் இங்கு யாரையும் குளிக்க விடுவதில்லை.

Vishnu Prayag: அலக்நந்தா டௌலி கங்கா (Douliganga) சங்கமம் ஆகும் இடம்.

Mana Village -India's last Village: நாங்கள் போன சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. நானும் என் கணவரும் டோலியில் சென்றோம் .அங்கு கணேஷ் குகை, வியாசர் குகை ,சரஸ்வதி தாம், சரஸ்வதி ரிவர் ஆகியவற்றை தரிசித்தோம் .சரஸ்வதி நதி ’ஓ’ என்ற இரைச்சலுடன் மலைப்பாறைகளின் இடுக்குகளில் இருந்து கொட்டுகிறது. நல்ல குளிர். மழையில் நனைந்து கொண்டே சென்று பார்த்தோம்.

Devaprayag Bhagirathi river Alaknanda Sangamam: இங்கு ராமர் கோவில் சென்றோம். நிறைய செங்குத்தான படிக் கட்டுகள். எறிச்சென்று தரிசித்தோம் .இங்கு பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகி கங்கை ஆறு என்ற பெயரில் பிரம்மாண்டமாக ஓடுகிறது . இங்கு நிறைய பேர் பூஜை சங்கல்பம் என்று செய்கின்றனர்.

Gurudwara; குப்த காசிக்கு போகும் வழியில் உள்ளது. அதையும் சென்று தரிசித்தோம். ஜோஷி மட்டிலிருந்து பத்ரிநாத் வரும்போது "அனுமன் செட்டி" என்ற இடத்தில் உள்ள பிரபலமான அனுமன் கோவிலும் தரிசித்தோம். பத்ரிநாத்திலிருந்து குப்த காசி வந்து இரவு தங்கினோம் .அடுத்த நாள் காலை 5 மணிக்கு கிளம்பி Helipad வந்தோம் கேதார்நாத் செல்வதற்காக. குப்த காசி to கேதார்நாத் Arrow Helicopter ல் புக் பண்ணி இருந்தோம். காலை 6:40 க்கு ஹெலிகாப்டரில் ஏறி ஏழே நிமிடத்தில் கேதார்நாத் வந்தோம். சூப்பர் பயணம். போனியில் சென்றால் நாலரை யிலிருந்து 5 மணி நேரமாகும். ஆனால் ஹெலிகாப்டரில் ஏழே நிமிடத்தில் இரண்டு மலைகளுக்கும் நடுவே அழகான பயணம் . இயற்கையை, மலையை , அடர்ந்த வனப் பகுதியை கடந்து செல்லும் அழகை ரசித்தோம். 7:00 மணிக்கெல்லாம் கேதாரீஸ்வரரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. நாலு முறை கியூவில் சென்று தரிசித்தும் திருப்தி அடையாமல் அவரை தொட்டு அபிஷேகம் செய்யும் பாக்கியம் வேண்டி நின்றோம். கடைசியாக அதுவும் கிடைத்தது. ஈசனைத் தொட்டு அபிஷேகம் செய்தது அப்பப்பா வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி இது. என்றென்றும் எங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அந்த அற்புதக் காட்சி . என் கணவர் அங்கேயே ருத்ரம் சொல்ல கோவிலை மூன்று முறை வலம் வந்தோம். மன நிறைவுடன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள பெரிய பாறையை தரிசித்து வணங்கி, அருகிலேயே உள்ள ஆதிசங்கரரின் 12 அடி உயர சிலை அமைந்த அவரது சமாதியை வலம் வந்து தரிசித்து பின் திரும்பவும் ஹெலிபேட் வந்து ஹெலிகாப்டரில் கௌரி குண்டு அருகில் வந்து காரில் பயணித்து குப்தகாசியை அடைந்தோம். இரவு தங்கி அடுத்த நாள் உத்தர் காசி செல்ல பயணித்தோம்.

கேதார்நாத் கோவிலுக்கு பின்புறம் உள்ள பெரிய பாறையை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். 2013இல் பெரும் வெள்ளம் வந்து உத்தரகாண்ட் மாநிலமே தத்தளித்தபோது மலையிலிருந்து இந்த பெரிய பாறை உருண்டு வந்து கோவிலுக்கு சரியாக பின்புறம் நிற்க வெள்ளநீர் இரண்டாக பிரிந்து சென்று கோவிலை அதிகம் தாக்காமல் காப்பாற்றியது. அதனை மக்கள் வணங்கி பூஜிக்கின்றனர்.

கோவிலுக்கு பின்புறம் உள்ள பனி மலைகளில் சூரியக்கதிர்கள் பட்டு தங்கம் போல் மின்னியது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இங்கும் தீபாவளி அன்று மூடி அக்ஷய திருதியை அன்று திறப்பார்கள். நந்திக்கும், ஈசனுக்கும் நெய்யபிஷேகம் விசேஷமாக செய்யப்படுகிறது. உள்ளே அகண்ட தீபம் ஏற்றிவிட்டு உற்சவரை கீழே உத்தரகாசிக்கு கொண்டு வந்து பூஜிப்பார்கள் குளிர்காலத்தில். கோவிலுக்கு உள்ளே கிருஷ்ணர், அர்ஜுனன், நகுலன் , திரௌபதி, பீமன் ஆகியோரின் சிலைகள் உள்ளன.

கேதார்நாத்தில் தலைமை அர்ச்சகராக இன்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குருக்கள் தான் வழி வழியாக வருகிறார்கள். கன்னட மொழியில் தான் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன . வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில் இது.

நைட் குப்தகாசியில் தங்கி அடுத்த நாள் காலை உத்தர் காசிக்கு புறப்பட்டோம். அங்கிருந்து கங்கோத்ரி செல்வதாக திட்டம். ஆனால் உத்தரகாசி 40 கிலோமீட்டர் தூரம் இருக்கும்போதே Landslide ஆகி இன்னும் சரி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டதால் ஓரிடத்தில் தங்கி அங்கிருந்து மேற்கொண்டு நகர முடியாமல் இந்தப் பக்கம் 50 வண்டிகள் அந்தப் பக்கம் 100 வண்டிகள் நின்று கொண்டிருக்க சரியாவதற்கு நிறைய நேரம் ஆகும் என்பதால் நாங்கள் அங்கிருந்து டாக்ஸி பிடித்து ரிஷிகேஷ் வந்து இரவு தங்கி காலை டேராடூன் ஏர்போர்ட் சென்று விமானம் ஏறி சென்னை வந்தடைந்தோம். கங்கோத்ரி பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் உண்டு. அடுத்த முறை கட்டாயம் அவன் அருளால் செல்ல வேண்டும்.

Haridwar, Rishikesh, Badrinath and Kedarnath யாத்திரை இனிதே முடிந்தது மனதுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைத்தது. உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்த கோவில்களை தரிசியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com