இந்தியப் பெண்களின் உடல் நலம்!
இந்தியாவில் மகளிர் நலம் (Women's health) என்பது அவர்களது வாழ்விடம், சமூகப் பொருளாதார நிலை, பண்பாடு போன்ற பல காரணங்களினால் உருவாவது. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, அனேகம் பேர், தங்கள் உடல் நலத்தைவிட குடும்பத்தினரின் நலத்திலேயே பெரிதாக கவனம் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு எத்தனை பாதிப்புக்கள் வருகின்றன… எப்படி அவர்களைத் தங்கள் நலத்திலும் கவனம் எடுக்கச் செய்வது? இது குறித்து மகப்பேறு நல மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ் அவர்களிடம் சில சந்தேகங்களைக் கேட்டோம்…
இந்தியாவில் பெண்களுக்கு அவர்களது ஆரோக்கியம் குறித்த பல பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக நீங்கள் நினைக்கும் சிலவற்றை சொல்லமுடியுமா டாக்டர்?
முதல் பாதிப்பாக அவர் குறிப்பிட்டது அனீமியா என்னும் ரத்த சோகை. இரண்டு வகை அனீமியாக்கள் பெண்களைப் பாதிக்கின்றன. மாத விடாய் காலத்து உதிரப்போக்கு காரணமாக வரும் அனீமியா. இதற்கு நிறையப் பேர் மருத்துவம் செய்துகொள்வதில்லை. கிராம மகளிரிடம் அதிகம் காணப்படுகிறது. மற்றது ஊட்டச் சத்து குறைபாடு அனீமியா. பொதுவாக நம் பெண்கள் குடும்பத்தில் எல்லோரும் உண்டபிறகு, மீதம் இருப்பதைச் சாப்பிடும் வழக்கம் பல குடும்பங்களில் இன்றும் உள்ளது. வளரும்போதே, மகன்களுக்கு அதிகம் உணவு அளிப்பதும், பெண் குழந்தைகளுக்குக் குறைவாக அளிப்பதும் பழக்கத்தில் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம்தான்.
இதற்கு தீர்வு எடுக்கப்பட்டு வருகிறதா டாக்டர்?
2018இல் தொடங்கப்பட்ட ‘ரத்த சோகை முக்த் பாரத்’ திட்டம், ரத்த சோகையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான ஆயுஷ்மான் பாரத் பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டத்தின்கீழ் ரத்த சோகையின் தடுப்பு அம்சத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. மகளிரின் Hb அளவைத் தொடர்ந்து கண்காணித்து, ரத்த சோகைக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகப்பேறு தொடர்பான பாதிப்புக்கள் என்னென்ன?
திருமணம் முடிந்ததுமே கர்ப்பம் அடைந்துவிட வேண்டும் என்ற சமூக நிலைப்பாடு காரணமாக அனேக குடும்பங்களில், குறிப்பாக சிறு வயதில் திருமணம் ஆகும் பெண்கள் உடல் மனரீதியாக தயார் ஆகும்முன்பே, தெளிவான புரிதல் வரும்முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். தனக்கு எப்பொழுது குழந்தை வேண்டும் என்ற முடிவை அவர்கள் சுயமாக எடுக்கமுடியாது. குடும்பத்தினரின் தீர்மானம்தான் இன்றும் பல இடங்களில்.
குறைப் பிரசவம், கர்ப்பம் கலைதல், குழந்தை இறந்தே பிறத்தல் இப்படி சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. குழந்தை வேண்டாம் என்று சிலர் முடிவெடுத்து சட்டரீதியாக அல்லது யாருக்கும் தெரியாமல் கருக் கலைப்பு செய்து, சரியாக செய்யாமல் இறந்து போகிற பெண்களும் உண்டு.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பல்வேறு உடல், உணர்ச்சி மாற்றங்களுக்கு உள்ளாகிறாள். கர்ப்ப கால சிக்கல்களைத் தவிர்க்க, தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். ஆரோக்கியமான உணவை உண்பது பல சிக்கல்களைத் தடுக்கும். பச்சைக் காய்கறிகள், மெல்லிய புரத உணவு, பழங்கள் நார்ச்சத்து உணவு இவை உடலுக்கு நன்மை தரும். குழந்தை பிறந்தபிறகு பாலூட்ட வேண்டுமல்லவா? ஆதற்கும் உடலில் சத்து வேண்டுமே.
இந்தியாவில் பெண்களுக்குப் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருக்கிறதா டாக்டர்?
செர்விகல் கேன்சர் எனப்படும் கர்ப்பபை வாய் புற்று நோய் மற்றும் மார்பகப் புற்று நோய் இந்தியப் பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் அதிக பாதிப்பைத் தருவது.
பாப் ஸ்மியர்(Pap Smear), மமோகிராம் (Mammogram) சோதனைகள் மூலம் இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், நிறைய மகளிருக்கு இது குறித்த விழிப்புணர்வோ, அணுகுமுறையோ இல்லை. முற்றிய பிறகு மூன்றாவது அல்லது நான்காவது ஸ்டேஜில்தான் மருத்துவரிடம் வருகிறார்கள்.
பெண்களிடம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது?
பெண்களிடம் நேருக்கு நேர் பேச வேண்டும். குறிப்பாக கிராமங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசி, பாதிக்கப்படும்முன் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
சத்தான உணவு சாப்பிடுவதின் அவசியம், ஏதாவது பிரச்னை இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தலின் நன்மைகள் இவையெல்லாம் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கிராம பஞ்சாயத்தாரிடம் பேச வேண்டும். சில என்ஜிஓ அமைப்புக்கள் இந்தப் பணிகளை முன்னெடுக்கிறார்கள். அவர்களுக்கு பணமாகவோ, பணியில் பங்குகொண்டோ உதவலாம்.
பெண்களின் மன நலமும் முக்கியம் அல்லவா?
நிச்சயமாக… நம் நாட்டில் பெண்குழந்தை வளரும்போதே பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. திட்டு, அடித்தல்போன்றவை பல குடும்பங்களில் இன்னும் தொடர்கின்றன. நெருங்கிய உறவினரால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாதல் சிலருக்கு நேரிடுகிறது. பருவ முதிர்ச்சி அடையும் பருவத்தில் வெளி உலகத்தின் கிண்டல் கேலிகள், பாலியல் சீண்டல்கள் இவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் ஒரு பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறாள். மன அழுத்தம் ஏற்படுகிறது. சில குடும்பங்களில், மேலே படிக்க ஆசைப்படும் பெண்களைத் தடுத்து திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் அவளுக்கு மன உளைச்சலைத் தருகிறது. குடும்பத்தையும், குழந்தைகளையும் எவ்வளவு நன்றாக கவனித்தாலும் சரியான அங்கீகாரம் ஒரு பெண்ணுக்குக் கிடைப்பதில்லை.
இதெல்லாம் மன அழுத்தத்தைத் தந்து, பிற்காலத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரக் காரணமாகின்றன. ஆக, சிறு வயதிலிருந்து வயதாகும் வரை இந்தியப் பெண்களுக்கு உடல் நலம் பாதிக்கும் பிரச்னைகள் தொடர்கின்றன