ஹலோ உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை!

ஹலோ உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை!

வர் ஒரு பெரிய உலகப் புகழ் பெற்ற கம்பெனியின் ஜெனரல் மானேஜராக இருப்பார். நாலு இலக்கம் சம்பளம்.  திரைப்படங்களில் வருவது போல, ‘டக் டக்’கென பூட்ஸ் ஒலிக்க அலுவலகத்திற்குள் நுழையும்போது எல்லோரும் எழுந்து நிற்பார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள் இவரிடம் ஆலோசனை கேட்க ‘கியூ’ வரிசையில் நிற்பார்கள்.

இந்த மகா அன்மினிஸ்ட்ரேட்டர் வீட்டுக்குப் போகட்டும்...

மனைவி மாடியில் பெட்டில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். அம்மாக்காரி பூஜையறையில். மகன் புல்லட்டில் நண்பர்களுடன் ஊர் சுற்றுதல். மகள் ‘ஸ்பெஷல் கிளாஸ்’ (ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கும்.)

இது தன்னுடைய ‘தொழிலில்’ வெற்றி பெற்று வீட்டில் தோற்ற ஆணின் கதை. பெண்ணும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

பொருளாதார நிலைகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் வெற்றிகரமான வெளியுலக மேதை வீட்டில் இருண்ட உறவுகளுடன் சோர்வாக வாழ்கிறான் நம்முடைய அன்றாட வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.

வீட்டில் நிம்மதியின்றி டென்ஷனுடன் வாழ்கின்ற குடும்பங்கள்தான் அதிகமாகிவிட்டன. இதற்கெல்லாம் அடிப்படை காரணம்…

‘நம்மை இவர்கள் புறக்கணிக்கிறார்களோ?’ என்ற பயம்.

இந்த மூன்று வார்த்தைகளை அவரவர் கோணத்திலிருந்து நினைத்துப் பாருங்கள். ‘ஸ்விட்ச்’ போட்டது போல ஒரு வெளிச்சம் தெரியும்.

வேலைக்குச் சென்று மாலையில் திரும்பும் ஒரு பெண் தன்னை யாராவது கவனிக்க மாட்டார்களா என ஏங்குகிறாள்.

வீட்டிலிருக்கும் பெண், தான் வீட்டு வேலைகளே செய்து வருவதால், தன்னை மற்றவர்கள் அலட்சியமாக நினைக்கிறார்களோ என்ற பயம்.

வெளியுலகிலே வீர முழக்கமிட்டு விட்டு வீட்டிற்கு வரும் கணவன், தனக்கு வெளியில் அத்தனை மரியாதை கிடைத்ததே. வீட்டில் இவள் ‘நைநை’ என அரிக்கிறாளே... ஆஃப்டர் ஆல் இவளுக்கு என்ன தெரியும் என் பெருமை என எரிச்சல்.

ஹலோ வெளியுலகில் வெற்றி கண்டவரே, உங்களை உங்கள் மனைவி கணவனாகப் பார்க்கிறாள். ஆபீசில்தான் ஜெனரல் மானேஜர். அதே தோரணையோடு வீட்டிற்குப் போனால்...

அதே போலத்தான் பெண்களும். தான் சிறந்த சூப்பரிண்டெண்ட். நான் சிறந்த பேங்க் மானேஜர். என்னை எல்லோரும் எப்படி மதிக்கிறார்கள். இந்த மாமியார்க்காரி என்னைத் துச்சமாகத் தரையில் தேய்க்கிறாளே என எரிச்சல்.

ஹலோ என் அன்புள்ள சகோதரி, மாமியாருக்கு நீங்கள் மானேஜரல்ல. மருமகள்தான் கொழுக்கட்டை ‘ஷேப்’பாக வரவில்லையென்றால் கொஞ்சம் முணுமுணுக்கத்தான் செய்வாள். வீட்டுக் காரியங்களில் நீங்கள் ஜூனியர்தானே!

எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறார்கள். வெளியுலக வாழ்க்கை மூளையால் செயல்படுவது. இல்லறம் மனதால் சிந்திக்கப்பட வேண்டியது. வெளியுலகில் திறமையைப் போற்றுகிறார்கள். குடும்பத்தில் அன்பைத்தான் விரும்புகிறார்கள். வெளியுலகில் சாதுர்யங்கள் வியக்கப்படுகின்றன. வீட்டில் நெகிழ்ச்சியும், விட்டுக் கொடுத்தலும் வரவேற்கப்படுகின்றன.

இரண்டு வாழ்க்கையையும் கோடு கிழித்தாற்போல பிரித்துக்கொள்ளுங்கள்.

வெளியுலகில் மிகச் சுலபமாக மதிக்கப்படும் நான் வீட்டில் ஏன் சீரழிகிறேன்?

1. அதே பணியை, மரியாதையை எதிர்பார்க்கிறேனா?

2. ஆபீசில் என் சீனியர்களிடம் அட்ஜெஸ்ட் செய்தகொண்டு போகிறேன். அதை வீட்டில் செய்கிறேனா?

3. எல்லாவற்றையும் மூளையைக் கொண்டு கணக்கப் போடாமல் மனதால் யோசிக்கிறேனா?

4. அவர்கள் பக்கம் நின்று நியாயத்தை யோசிக்கிறேனா?

சிந்தியுங்கள். ஏன் இவர்களை வெல்ல முடியவில்லை?

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

படிக்காத, வெளியுலக ‘நியூஸ்’ தெரியாத உங்க அம்மா வெற்றிகரமாக குடும்பம் நடத்தி இருக்கிறார். புரோபசர் அப்பாவுக்கு அவளை விட்டு ஒரு நிமிஷம் இருக்க முடியாது. பிள்ளையும், மாட்டுப் பெண்ணும் பேரக் குழந்தைகளுமாகக் கொழிக்கிறாள்.

இவள் எப்படி ஜெயித்தாள்?

யோசியுங்கள்.

குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் பட்டம், பதவி உதவாது.

அப்புறம்?

அன்புதான்!

இது, ஹலோ உங்களுக்கு மட்டும் சொன்னதில்லை. குடும்ப அங்கத்தினர்கள் அத்தனை பேருக்கும்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com