திமுக மகளிர் உரிமை மாநாடு...தேசிய மாநாடானது ஏன்? அதன் தாக்கம் என்ன?

மகளிர் உரிமை மாநாடு
மகளிர் உரிமை மாநாடு

சென்னையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று தி.மு.க மகளிரணியின் சார்பில் மிகப் பெரிய அளவில் `மகளிர் உரிமை மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. திமுகவின் இந்த மாநாடு வெறும் அக்கட்சியின் மகளிர் அணியின் மாநாடாக மட்டுமல்லாமல், ’இந்தியா’ கூட்டணியில் தேசியளவில் அறியப்பட்ட பெண் தலைவர்களை அழைத்ததன் மூலம் தேசிய மாநாடக கவனம் ஈர்த்துள்ளது.

1929- சுயமரியாதை மாநாடு

தந்தை பெரியார் தலைமையில் செங்கல்பட்டில் 1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பெண்களுக்கான சுயமரியாதை மாநாட்டை நினைவுப்படுத்தும் வகையில் இந்த திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டின் தாக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாநாட்டில்தான் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சமயம்/மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சுயமரியாதை திருமணம், விதவை மறுமணத்துக்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பெண்களை ஒன்றுதிரட்டி 94 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த மாநாடும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இன்றளவும் பேசுப்பொருளாக உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக தி.மு.கவின் மகளிரணி சார்பில் ஒரு மாநாடு நடத்த தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தாலும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியாததால், அதுவே ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறிவருவதால், இதனை மகளிர் உரிமை மாநாடாக நடத்த முடிவுசெய்தார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி.

யார் யார் கலந்துகொண்டார்கள்?

இதற்காக ’இந்தியா’ கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைக்க திட்டமிட்டார். இதன் அடிப்படையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி, தேசியவாத ஜனநாயக கட்சியின் செயல் தலைவரும், எம்.பியுமா சுப்ரியா சுலே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா  முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில அமைச்சருமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை மையப்படுத்தி பாஜகவை எதிர்த்து தேசியளவில் 28 அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்கட்சிகள் ஒருங்கிணைத்துள்ள இந்த கூட்டணிக்கு ’இந்தியா’ கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை பட்னா மற்றும் பெங்களூருவில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் பாஜகவை வீழ்த்துவதற்கான இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக ’இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டம் எது என்றால், அது திமுக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மகளிர் உரிமை மாநாடுதான்.

33 % இடஒதுக்கீடு- பின்னணி

இம்மாநாடு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒரு யுக்தியாக பார்க்கப்பட்டாலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மையப்படுத்தியே நடைபெற்றது. மத்தியில் 9 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி, அதனை குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளது.

மகளிரின் பல்லாண்டுகால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், பிரச்சனை இங்குதான் ஆரம்பமானது. மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது எப்போது அமல்படுத்தப்படும்? தனது ‘இலக்கை’ எப்போது அடையும்? என்பது கேள்விகுறியாக மாறியுள்ளது.

இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ள ஒரு பகுதிதான். அதில், நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரே 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை மாநாடு
மகளிர் உரிமை மாநாடு

இதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2024ம் ஆண்டிலா அல்லது 2029ம் ஆண்டா, 2034ம் ஆண்டா அல்லது அதற்கு பின்னர் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. எந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீடுபெண்களுக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக யாரிடமும் சரியான பதில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

76 ஆண்டுகால சுதந்திரத்திற்கு பிறகும் பெண்களுக்கு அரசியல், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தளங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு (நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும்) எப்போது நாட்டில் அமல்படுத்தப்படும் என்ற கேள்வி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது. இதனால்தான், எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கண் துடைப்பு நாடகம் என விமர்சனம் செய்கின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

இந்நிலையில்தான், சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாடு, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை காலதாமதமின்றி அமல்படுத்தகோரி வலியுறுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, ”காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து வந்து, ஏற்றத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாக மட்டுமல்ல, இந்தியப் பெண்களின் மாநாடாக அமைந்துள்ளது என்பதை நான் பெருமையோடு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார் ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கடந்தகாலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஒரு ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணுக்கு நிதி உதவி செய்யும் திட்டம், பேருந்துகளில் விடியல் பயணம், பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம், இப்போது மகளிர் உரிமைத் தொகை என்றுஇப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டும் நமது திராவிட மாடல் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவும் நாளே, மகளிர் உரிமை பெற்ற நாளாக அமையும் என்றார்.

பொதுவாக பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கான சலுகை, உதவி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு பல்லாண்டுகளாக மறுக்கப்படும் அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பங்களிப்பு என்பது சலுகையோ உதவியோ அல்ல; அது பெண்களுக்கான உரிமை என்பதை தன் பேச்சின் மூலம் நினைவுப்படுத்தி உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கனிமொழி கூறியதாவது...

மாநாட்டில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, ” இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர்.  தமிழ்நாட்டில் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் கல்வி இல்லை, எதிர்காலம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் பெண்களுக்கு உருவாக்கியுள்ளது.

பெண்கள் 50 சதவீத வாக்குகளை வைத்துள்ளார்கள். ஆனால், திட்டங்கள் எதிலும் பெண்களின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. பெண்கள் ஒடுக்கப்படும், ஒதுக்கப்படும் நிலைதான் நீடிக்கிறது. 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வரமுடியாத மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்" என்றார்.

மகளிர் உரிமை மாநாடு
மகளிர் உரிமை மாநாடு

சோனியா காந்தி மற்றும் ப்ரியாங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், ”இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள். ஆனால், இந்த போராட்டத்தில் நீண்டதூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும்” என்றார்.

ப்ரியாங்கா காந்தி, ”பெண் ஏன் அடிமையானாள்’’ என்ற புத்தகத்தை தந்தை பெரியார் எழுதினார். சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கேதான் உருவானது. ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்கிறாள் என்று கேள்வி கேட்கும் நிலை இன்றும் உள்ளது. மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் எல்லோரும் இங்கு நின்றுகொண்டிருக்கிறோம். இந்திய பெண்கள் இனியும் நேரத்தை வீணாக்க முடியாது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வரவேண்டும். என்றார்.

மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட ’இந்தியா’ கூட்டணியின் இதர தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

மகளிர் இடஒதுக்கீடு உரிமையை மையப்படுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட மகளிர் உரிமை மாநாடு, வெவ்வேறு தளங்களில் பெண்களின் பொருளாதார உரிமைகளை பற்றி பேசியுள்ளது. அதேபோல், அரசியல் ரீதியாக பெண்களின் முன்னேற்றத்திற்காக இப்படிப்பட்ட மகளிர் உரிமை மாநாட்டை இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு நடத்தப்பட்டால் அது அரசியல் ரீதியாகவும், பெண்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான திருப்புமுனை மாநாடுகளாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com