தரம் என்னும் சொல்லை எங்கு எப்பொழுது பயன்படுத்தலாம்? உண்மையில் அதை சரியான ‘தரத்தில்’ உபயோகப்படுத்துகிறோமா? நல்ல தரம்வாய்ந்த, அதிகத் தரம்வாய்ந்த, அல்லது குறைந்த தரம்வாய்ந்த என்று உபயோகப்படுத்துவது சரியானதாகுமா? ஏனெனில், தரம் என்றால் தரம் மட்டுமே. அதில் உயர்ந்த தரம் அல்லது தாழ்ந்த தரம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்த வார்த்தைக்கு ஒரு சரியான விளக்கம் கொடுப்பது கொஞ்சம் கடினம்தான். காரணம், ஒவ்வொரு இடத்திலும் இதற்கு ஒவ்வொரு விதமான விளக்கம் கூறப்படுகிறது.
இருப்பினும், எல்லா சூழலிலும் பொருந்தும் வகையில் ஜோசப் ஜுரான் [Joseph Juran] என்னும் ரோமானிய – அமெரிக்கப் பொறியாளர் மற்றும் நூலாசிரியர், தரம் என்னும் சொல்லுக்கு பலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை விளக்கம் என்று கூறுவதை விட, தரத்தின் குணாதிசயங்கள் என்று சொல்வது நன்றாகப் பொருந்தும். எந்தவொரு பொருளும் 1) வாடிக்கையாளரின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தும் 2) குறைபாடுகளிலிருந்து விடுபட்டும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொருளை ‘தரமான பொருள்’ என்று குறிப்பிடலாம்.
ஊரிலேயே மிகவும் பெயர்போன ஜவுளிக் கடையொன்றில் நுழைகிறோம். விலை சற்று அதிகமாக இருந்தாலும் அங்குள்ள உடைகள் நல்ல தரம் வாய்ந்தவை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இருப்பினும், நாம் வாங்கயிருக்கும் ஆடை, தரம் வாய்ந்ததா, இல்லையா என்று அதை பயன்படுத்துவதற்கு முன்பே எப்படிக் கண்டுபிடிப்பது? ட்ரையல் ரூமில் உடுத்திப் பார்க்கலாம். ஆனால், அது மட்டும் போதுமா ஒரு ஆடையின் தரத்தை மதிப்பிட?
ஜுரான் அவர்களின் முதல் விளக்கப்படி, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடையானது உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்று முதலில் சரி பார்த்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, ஒரு சாதாரண சட்டை வாங்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரே ஒரு சட்டைதான் வாங்க வேண்டும்; அதற்காக உங்களிடம் இருக்கும் பட்ஜெட் ஐநூறு ரூபாய் மட்டுமே. கடைசியில் உங்களுக்கு இரண்டு சட்டைகள் பிடித்துப் போய்விட்டன. இரண்டு சட்டைகளின் விலையும் ஐநூறு ரூபாய்தான். ஒன்றில் பாக்கெட் இல்லை, ஆனால், அதன் துணி பல முறை உடுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இரண்டாவது சட்டையில் பாக்கெட் இருக்கிறது. ஆனால், அதன் துணி மிகவும் மெல்லி சானதாகத் தென்படுகிறது. இவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக நாட்களுக்கு உபயோகப்படுத்த வேண்டுமெனில் முதல் சட்டையையும், பாக்கெட் அவசியமாக தேவையெனில் இரண்டாவது சட்டையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு அந்தச் சட்டைகளின் தரத்தை முடிவு செய்வது அதன் தயாரிப்பு முறையல்ல; வாடிக்கையாளரின் தேவைகளே. ஆகையால்தான் தரம் என்பதை நல்லது அல்லது மோசமானது என்று வகைப்படுத்துவது மிகக் கடினம். மற்றும் இங்கு தேவைகள் என்பது, அந்த சட்டைகளில் இடம்பெற்றிருக்கும் விதவிதமான அம்சங்கள் மட்டுமின்றி, நீங்கள் செலவழிக்கவிருக்கும் பணத்தின் அளவும் உள்ளடங்கும்.
இப்பொழுது இரண்டாம் விளக்கத்துக்கு வருவோம். குறைபாடுகளிருந்து விடுபட்டு இருத்தல். முன் கூறிய அந்த இரண்டு சட்டை உதாரணத்தையே மறுபடியும் எடுத்துக்கொள்வோம். எப்பொழுதும் போலவே அவை உங்களுக்குப் பொருந்துகிறதா இல்லையா என்று முதலில் ட்ரையல் ரூமில் சரி பார்த்திருப்பீர்கள். பின்பு, எங்கேயாவது ஓட்டையோ, கறையோ அல்லது சிறு கிழிசலோ இருக்கிறதா என்றும் பார்த்திருப்பீர்கள். இவையெல்லாம் சரி பார்த்த பின், இன்னொரு முக்கியமான செக் பாய்ன்ட் ஒன்று உள்ளது. எல்லா தையல்களும் முழுமையாக தைக்கப்பட்டிருக் கின்றனவா, இரண்டு ஸ்லீவ்களின் நீளமும் சமமாக இருக்கிறதா, அனைத்து பட்டன்களின் வண்ணம் மற்றும் அளவு எல்லாம் ஒன்றுதானா, பட்டன்களும், அவற்றை நுழைக்கப் பயன்படும் பட்டன் ஹோல்கள் எல்லாம் சரியாக தைக்கப்பட்டிருக்கின்றனவா, சட்டையை நடுவின் மடித்துப் பார்க்கையில் எல்லாப் பகுதிகளும் சமச்சீர் தோற்றம் [symmetrical appearance] போல தென்படுகிறதா போன்ற விஷயங்களையும் சரி பார்க்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றை கவனிக்கத் தவறினாலும் கூட, தரமான ஆடையை வாங்க தவறிவிடுவோம். பிற்காலத்தில் ஆசையாசையாக அதை உடுத்தும் போதும் ஏமாற்றமடையக்கூடும்.
யாரும் தரமில்லாத பொருளை வாங்க விரும்பு வதில்லை. ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அது எந்த அளவுக்கு உகந்ததென்றும் தரமானதா என்றும் சரி பார்ப்பது அவசியமாகும். அதுமட்டுமின்றி நீங்கள் வாங்கவிருக்கும் பொருளின் தரத்தை பற்றி உங்களைத் தவிர வேறு யாராலும் பொருத்தமான விளக்கம் தரஇயலாது. காரணம், அதைப் பயன்படுத்தப் போகும் நபரும் நீங்களே. உங்களுக்குப் பொருந்தும் தனிப்பட்ட தரத்தின் விளக்கத்தை அமைப்பதால், உங்களுடைய பொருட்களுக்கு நீங்களே எஜமானராக முடியும். இது ஆடைகளுக்கு மட்டுமின்றி, எல்லாவிதப் பொருட்களுக்கும் பொருந்தும்.