பெண்கள் விரும்பி அணியும் ஆபரணங்களில் ஒன்றாக முத்து நகைகள் உள்ளன. முத்துக்கள் உலகின் வெப்பமான கடல் பகுதிகளில் மட்டும் அதிகமாக உருவாகின்றன.
ஓடுகள் பெற்றுள்ள கடல் உயிரினங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் முத்து சிப்பி. இவை 2.5 செ.மீ முதல் 1 மீ வரை வளரக்கூடியவை.
சிப்பிக்கள் தங்களின் எதிரிகளோ, திடப்பொருளோ, அல்லது மணலோ புகுந்துகொண்டால் அதிர்ச்சியில் தங்கள் புறத்தோல் பகுதியில் 'நாக்ரே' என்ற பொருளை உருவாக்குகின்றன. அந்த எதிரி பொருள் மீது பல படலங்களாக ‘நாக்ரே' சூழ்ந்து உருவாகும்.
முத்துக்களும் அவற்றின் தரமும்
சிப்பியிலிருந்து முத்துக்களை பிரித்தெடுக்கும்போது முட்டை வடிவிலான முத்துக்களைவிட உருண்டையான தோற்றம் உடைய முத்துகளுக்கே மதிப்பு அதிகம். அதிகமான வெப்பம், தூசி, ஈரத் தன்மை போன்ற வற்றினால் முத்து பழுது படவும் வாய்ப்பு உண்டு.
இயற்கை முத்துக்கள்
அவிகுலிடி சிப்பிகளிலும், யூனியனி என்னும் மட்டிகளிலும், உற்பத்தி ஆகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும். அதிக ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும்கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை ஆகும்.
உயர் தர முத்துக்கள் எப்படி உருவாகின்றன? கடலில் உள்ள சில ‘புல்லுருவிகள்' (தம்மால் நேரடியாக உணவுப் பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்து இருப்பவை) சில நேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறி சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு சிப்பியானது நாக்கர் திரவத்தை அதன்மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்த 'புல்லுருவி' மடிந்துவிடும். அதன்மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இந்த முறைப்படி சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகி விடுகிறது. இதன் மதிப்பு அதிகமாகும்.
முத்துக்களின் வகைகள்
அக்கோயா முத்து, நன்னீர் முத்து, தகித்தியன் முத்து, தென்கடல் முத்து ஆகியவை முத்துக்களின் வகைகள். இவை அரிதாகவே கிடைக்கின்றன. சில கடல் நீரில் உருவானவை. அவை உருவாவதைப் பொறுத்து அதன் இயல்புகள் வேறுபடுகின்றன.
அகோயா முத்துக்கள்
இவை கிளாசிக் முத்துக்கள் என்றும் அழைக்கப்படும். இவை வெள்ளை, கிரீம், போன்ற சாயல்களில் வருகின்றன. ‘முத்துக்களின் இழைகள்’ என்ற சொல் அகோயா முத்துக்களின் பிரபலமான நெக்லஸுக்காக உருவாக்கப்பட்டது.
நன்னீர் முத்துக்கள்
இளஞ்சிவப்பு, லாவெண்டர் மற்றும் பீச் போன்ற வெளிர் வண்ணங்களில் வருகின்றன. பல நன்னீர் முத்துக்கள் ‘பரோக்' வடிவத்தைக் கொண்டுள்ளன. மேலும், அவை ‘பரோக்’ முத்துக்கள் என்றும் அழைக்கப்படலாம்.
தகித்தியன் முத்து
இவை கருப்பு, பச்சை, தங்கம், பழுப்பு, போன்ற உலோக நிறங்களில் வருகின்றன. அதன் உலோக பளபளப்பு மற்றும் வடிவம் காரணமாக தகித்தியன் முத்துக்கள் நெக்லஸ் செய்வதற்கு சந்தையில் அதிக தேவையில் உள்ளன.
தென்கடல் முத்துக்கள்
கச்சிதமான உருண்டையான இவை ‘ரோல்ஸ் ராய்ஸ் ஆஃப் பேர்ல்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை வெள்ளை, தங்கம் போன்ற நிறங்களில் வருகின்றன.
கூடுதல் தகவல்:
முத்து நகைகளை அணிவதால் மனஅழுத்தம் குறையும். முத்துக்களில் காணப்படும் இரும்பு, துத்தநாகம், செலினியம், கால்சியம் போன்ற தாதுக்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
முத்துக்களின் நன்மைகளைப் பெற விரும்புபவர்கள் உண்மையான முத்துக்கள் பதிக்கப்பட்ட அணிகலன் களைக் கண்டறிந்து வாங்குவது பயன் தரும்.