பாலைப் பாதுகாப்பது எப்படி?

பாலைப் பாதுகாப்பது எப்படி?
Published on

பாலை கெட்டு விடாமல் வைத்து அடுத்த வேளைக்குப் பயன்படுத்துவது மிகக் சுடினமானது சுத்தமான பவுடர் கலக்கப் படாத பாலாக இருந்தாலும் கெடாமல் வைத்திருப்பது பிரச்னையே. சுத்தமான கலப்படம் செய்யப்படாத பால் கிடைப்பது அரிதாகிவிட்ட இக்காலத்தில் பிரச்னையின் தீவிரம் அதிகரித்துள்ளது.

ஃபிரிட்ஜில் பால் வைத்தால் கெடாமல் இருக்கிறது என்பது உண்மை. ஃபிரிட்ஜில் வைத்தாலும்,  குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குமேல் வைக்கப்பட்ட பாலைப் பயன்படுத்தக் கூடாது.

கோடைக்காலத்தில், காலை, மாலை இரு வேளைகளிலும், பால் வாங்குவது நல்லது. கூடிய வரையில், பழைய பால், புதிய பால் இரண்டையும் கலக்காமல் இருப்பது நல்லது. உடனே பயன்படுத்துவது என்றால் கலக்கலாம்.

பாலைக் கெடாமல் வைத்திருக்க வேண்டுமென்றால், பால் வைக்கப்படும் பாத்திரம் நன்றாகச் சுத்தம் செய்யப் பட்டதாக இருக்க வேண்டும். சிலர் பால் வைக்கும் பாத்திரத்தைப் பாலுக்கு மட்டும் உபயோகிப்பதில்லை. பால் மீதி ஆனால் அதே பாத்திரத்தில் தயிர் உறை ஊற்றிவிடுவதுமுண்டு இம் மாதிரியான காரணங்களில், பால் விரைவில் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்து கழுவிச் சுத்தம் செய்த பிறகு பாத்திரத்தில் நிறைய நீர் ஊற்றிக் கொதிக்க விடுவது நல்லது. அல்லது பாத்திரத்தை நன்றாகக் கழுவி நல்ல வெயிலில் வைத்து மறுபடியும் கழுவுவது நல்லது.

பால் பாத்திரத்தைக் கழுவிவிட்டுத் துணியால் துடைக்ககூடாது. எனென்றால் துணி சுத்தமாக இல்லாவிட்டால் பாத்திரத்துக்குள் கிருமிகள் உற்பத்தி ஆகலாம். கைவிட்டு சரியாகக் கழுவ முடியாத பாத்திரத்திலோ அல்லது சீசாவிலோ பாலை வைக்கக் கூடாது. பால் செம்பு அல்லது சீசாவைக் கழுவும்போது அவைகளின் உள் பாகத்தின் அடியில் பால் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்று கவனிப்பது நல்லது.

பாலை வாங்கியவுடன் காய்ச்சி விடுவது நல்லது. உபயோகிக்க எடுக்கும்போது மறுபடியும் காய்ச்சி உபயோகிப்பது நல்லது. பாலைக் காய்ச்சிய உடன் படுத்தப் போவதில்லை. என்றல் ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன்னால் நன்றாகக் குளிரச் செய்து பிறகு வைக்க வேண்டும். தெர்மோஸ் ஃபிளாஸ்க்கிலும் வைக்கலாம். ஃபிரிட்ஜ் தெர்மோஸ் ஃபிளாஸ்க் இல்லா விட்டாலும் பாலைப் பாதுகாக்க இதோ ஓர் எளிய முறை : ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, பால் வைத்திருக்கும் பாத்திரத்தை அதில் வைக்கவும் பால் பாத்திரத்தை ஒரு சுத்தமான துணியைப் போட்டு மூடவும். இத்துணியின் நுனி, பாத்திரத்திலுள்ள நீரைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பால் மிகச் சூடாக இருந்தால், பாத்திரத்திலுள்ள நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

பால் வைத்திருக்கும் பாத்திரத்தை எப்போதும் மூடியே வைக்க வேண்டும். சிலர் பால் வாங்கியவுடன், காய்ச்சும் வரை, பால் பாத்திரத்தைத் திறந்தே வைத்திருப்பார்கள். காய்ச்சாத பால், வெகு வேகமாகக் கிருமிகளை ஈர்க்கும் சக்தியுடையது. அதிகம் வெப்ப காலமாக இருந்தால், பாலில் ஒரு சிட்டிகை, சோடா பை கார்பனேட் போட்டுக் காய்ச்சுவது பாலைக் கெடாமல் பாதுகாக்கும்.

ருவேளை நம் கவனக்குறைவால் பால் புளித்துப் போய்விட்டாலும், பாலைக் கொட்டிவிட வேண்டாம். அடுப்பில் வைத்து பாலில் உள்ள நீர் வற்றும் வரை நன்றாகக் கிளறவும். பிறகு சர்க்கரை கலந்து ஒரு தடவை கிளறி இறக்கவும். இது மிகச் சுவையான தின்பண்டம்.

பால் திரிந்து விடாமல், கொஞ்சம் அதிக நேரம் தங்கிவிட்ட பாலாக இருந்தால், அதைக் காய்ச்சி அதில் எலுமிச்சை ரசம் பிழியவும்., பிறகு இப்பாலை ஒரு துணியில் சிறிய மூட்டையாகக் கட்டித் தொங்கவிட்டால், அதிலுள்ள நீரெல்லாம் வடிந்துவிடும். இத்துணி மூட்டையைத் தொங்க விடும்போது அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து வடியும் நீரைப் பிடித்து, இந்நீரை, பருப்பு வேக வைப்பதற்கோ அல்லது காய்கறி வேக வைப்பதற்கோ பயன்படுத்தலாம்.

நீர் வடிந்த பிறகு, துணியில் கட்டியாகத் தங்குவது பால் கட்டி.  இதைத் துணியிலிருந்து எடுத்து இரண்டு தட்டையான தட்டுக்கள் இடையில் வைத்து அதன்மேல் பாரமான எதையாவது வைக்கவும். பிறகு அதை எடுத்துப் பார்த்தால் பால் கட்டி, தட்டின் மேல் பரவலாக இருக்கும். அதை, வில்லைகள் போட்டு, அந்த வில்லைகளைக் காய்கறியோடு சேர்த்துப் பொறியல் செய்யலாம். மசாலாக் குழம்பிலும் சேர்க்கலாம். வாணலியில் கடுகு வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்துப் பிறகு அதோடு பால் வில்லைகளைச் சேர்த்துத் தேவையான உப்பு சோத்து சிற்றுண்டி தயாரிக்கலாம். இது சிறு பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பண்டமாகும்.

சில சமயங்களில் எதிர்பாராத விதமாக பால் மீந்து வருவதுண்டு பாலை அதிக நேரம் வைத்துக்கொள்ள முடியாததால், அதைத் தயிராக மாற்றிவிடுவது நல்லது. வெப்பமான காலங்களில், பாலில் உறை ஊற்ற மிகச் சிறிய அளவு தயிரே போதுமானது. உறை ஊற்ற எடுத்துக் கொள்ளப்படும் தயிரோ. மோரோ பழையதாக இருக்கச் கூடாது. பழையதாக இருந்தால் தயிர் ருசியாக இருக்காது.

பால் மீந்துவிட்டால், ரொட்டி தயாரிக்க மாவு பிசையும்போது, தண்ணீருக்குப் பதிலாகப் பாலைப் பயன்படுத்தலாம். இந்த முறையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, பூரி, சமோசா போன்றவை மிகவும் ருசியாக  இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com