சுட்டெரிக்கும் வெயிலில் பட்டுப்போன்ற தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி?

சுட்டெரிக்கும் வெயிலில் பட்டுப்போன்ற தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி?

கொளுத்தும் கோடையில் சமையலறையில் வேலை செய்யும் பெண்களின் தலைமுடியில் இருந்து வியர்வை ஆறாகக் கொட்டும். அதே போல வெயிலில் வெளியே செல்லும் அனைவருக்குமே தலைமுடி வியர்வையில் நனைந்து ‘நச நச’ வென்றிருக்கும். சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து விட்டு வரும் போது தலைமுடி அதிகமாக பாதிக்கப்படும். நம் கூந்தலுக்கு சிறப்புக்  கவனம் எடுப்பது மிக அவசியம். இல்லையெனில் முடி உதிர்வு, வறண்டு போதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

கோடையில் கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமானது, கூந்தலை வாரம் மூன்று முறை அலசுவது தான். இதனால் அதிகமான வியர்வையால், தலையில் அதிகப்படியான அழுக்குகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலையும் நன்கு சுத்தமாக இருக்கும்.

இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனர்:

முடியின் தன்மைக்கு ஏற்ற அதிக இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.  இயற்கையாகவே வறண்ட கூந்தல் இருப்பவர்கள் அதிக மாயிஸ்ச்சர் இருக்கும் ஷாம்பூவை தேர்வு செய்ய வேண்டும். அடிக்கடி ஷாம்பூவை பயன்படுத்தும் சூழலில், மைல்டான அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தலாம்

இயற்கையான பொருட்களைக் கொண்டு கூந்தலை அலசும் முறைகள்:

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கூந்தலை நன்கு பராமரிக்க முடியும். வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து உலர வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். முட்டையின் வெள்ளை கருவுக்கு முடியின் வேரை வலிமையுள்ளதாக மாற்றும் தன்மை உண்டு. தலைமுடி மென்மையாகவும் பொலிவோடும் இருக்கும்.

கற்றாழையில் இருந்து ஜெல் எடுத்து, நீரில் நான்கைந்து முறை நன்கு அலசி விட்டு, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் கூந்தலை அலசுங்கள். இவை கூந்தலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
அதே போல வாரம் இரு முறை, நல்லெண்ணெய்யை சுட வைத்து அதனுடன் சில  துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து முடியின் வேர்க்கால்களில் மென்மையாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பட்டுப் போல மின்னும் தலைமுடி.

இரவு நேர கூந்தல் பராமரிப்பு:

கல் நேரங்களில் வெளியே செல்லும் போது தலையில் எண்ணெய் தடவிக்கொண்டால் முகத்தில் எண்ணெய் வழிந்து, முடியில் அழுக்கு சேரும். எனவே  இரவு நேரங்களில் படுப்பதற்கு முன் நல்ல வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்யை கலந்து முடியில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் கூந்தலின் வேர்கள் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.  கூந்தலுக்கு பொருத்தமான ஹேர் சீரத்தை உபயோக்க வேண்டும்.ஹேர் சீரம்  கூந்தலுக்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை அளித்து, வேர்ப் பகுதியை வலிமையடைய செய்வதுடன்,  நல்ல பள பளப்பையும் கொடுக்கும்.

பகல் நேர கூந்தல் பராமரிப்பு:

வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது கூந்தலை ஒரு கைக்குட்டை ஸ்கார்ப், அல்லது தொப்பி போட்டு மூடிக் கொள்ளுங்கள். சூரியனிடமிருந்து வரும் வெப்ப கதிர்கள் நேரடியாக  கூந்தலில் படும் போது அதன் தன்மையையே மாற்றி முரடாக கடினமாக மாற்றி விடும்.

கூந்தலை காய வைக்கும் ஹேர் ட்ரையர் கருவியை உபயோகிக்க வேண்டாம். இதிலிருந்து வரும் வெப்பக் காற்று அதிகப்படியான பாதிப்பை கூந்தலில் ஏற்படுத்தி விடும். கூந்தலை பறக்கவிடும் ப்ரீ ஹேர்ஸ்டைலில் முடி காற்றில் அலைந்து, சிக்குண்டு போகும். லூசான பின்னல், அல்லது கொண்டை மாதிரி ஹேர் ஸ்டைல் நல்லது. கோடையின் வெப்பமான காற்றால் முடியின் நுனிகள் எல்லாம் வெடித்து பிளவு ஏற்பட ஆரம்பித்து விடும். எனவே பிளவுபட்ட முடிகளின் நுனியை வெட்டி விட வேண்டும்.

ஆரோக்கியமான கூந்தலுக்கு ஏற்ற உணவுகள்:

கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுவகைகள் எடுத்துக்கொள்வது மிக அவசியம். வைட்டமின் ஏ நிறைந்துள்ள கேரட் சாறு, கேரட் கீர், இயற்கையான ஹேர் கண்டிஷனர்களாக செயல்படுகிறது. முடி உதிர்வை தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த கேரட் உதவும்.

​ஆளி விதைகள் முடி உதிர்வை சமாளிக்க சிறந்தது. இதில், ஒமேகா 3, வைட்டமின் பி 1, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இதை உணவில் சேர்த்து வருவது சேதமடைந்த முடிக்கு நிரந்தமாக தீர்வு அளிக்கும்.

புரதம் நிறைந்த பருப்பு வகைகள் ஃபோலிக் அமிலம் கொண்டவை. இது முடியின் வேர்களுக்கு ஆக்ஸிஜனின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. ​

​தயிரில் இருக்கும் புரதம், மற்றும் வைட்டமின் பி 5 மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. அதே போல ஆரஞ்சு, மாம்பழம், தர்பூசணி, பெர்ரி போன்ற பழங்கள் முடி தண்டுக்கு இரத்தத்தை வழங்கும் நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது.

மிக முக்கியமாக கோடையில் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிப்பதன் மூலம் தலைமுடியை  ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com