

அறிவியல் நுட்பங்களினால் புதுப்புது மருந்து வகைகளும் கண்டுபிடிக்கப்படுவதால் நம்மிடையே தொன்றுதொட்டு இருக்கும் மருத்துவகுணம் மிக்க மூலிகைகளையும் மரங்களையும் மறந்து விடுகிறோம். அவைகள் தேவைப்படும் சிறப்பு தினங்களில் மட்டுமே அவற்றின் சிறப்பை அறியாமலேயே பயன்படுத்துகிறோம். இதோ ஆடியின் விசேசமான தேங்காய் சுட உதவும் இந்த அழிஞ்சில் குச்சிகள் போல. இதன் சிறப்புகள் காண்போமா?
அழிஞ்சில் இந்தியப் பகுதியில் காணப்படும் ஒரு மூலிகைத் தாவரமாகும். அனைத்துவகை நிலங்களிலும் வளரக்கூடியது. நம் தமிழகம் முழுவதும் உள்ள புதற்காடுகளில் தானாகவே சுமார் 20 அடி உயரம் வரை வளரும் இந்த அழிஞ்சில் மரம் அங்கோலம், இளங்கி, அணைஞ்சு என மூவகைப் பெயர்களில் விளங்குகிறது இந்த மரம். இது நீண்ட இலைகளுடைய முள் உள்ள சிறு மரம் ஆகும். அதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் சிவப்பு, கருப்பு, வெள்ளை, போன்ற பூக்களை உடைய மரங்கள் உள்ளது. இவற்றில் சிவப்பு பழங்கள் உள்ள மரம் மருத்துவ குணம் உடையதாக கருதப்படுகிறது.
இந்த மரமானது பங்குனி சித்திரை மாதங்களில் பூத்துக்குலுங்கும். இந்தப் பூக்கள் நறுமணத்துடன் இருக்கும். ஆனிமாதத்தில் இதன் காய்கள் பழுக்கிறது. பழுத்த பழங்கள் கீழே விழுந்து அதன் விதைகள் மீண்டும் நகர்ந்து ஏறி அடி மரவேரிலும் அதன் கிளைகளிலும் ஒட்டிக்கொள்வது அதிசயம். உடலில் தோன்றும் சிறு சிறு கொப்புளங்கள் போல் மரம் முழுவதும் பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொண்டு இருப்பது மரங்களின் வரலாற்றிலேயே காணக் கிடைக்காத அற்புதமாகும். இதன் அனைத்துப் பகுதிகளும் இந்தியப் பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் கபநோய்கள், விஷக்கடிகள், கொப்புளம், உடல் சூடு, வயிற்றுப் புழுக்கள், மலச்சிக்கல், சொறி சிரங்கு போன்ற அனைத்து தோல்நோய்கள், மூட்டு வலி, கீழ்வாதம் பாதவெடிப்பு பாத எரிச்சல் முகப்பரு ஆகியவற்றுக்கு அற்புத நிவாரணியாகிறது. இந்த மரத்தின் வேர் பட்டை விதைகள் ஆகியவை அவற்றில் ஆயுர்வேதம் குறிப்பிட்ட சில மட்டும் இங்கு.
அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை உடலில் தடவி வர தோல் நோய்கள் நீங்கும்.
சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத்தூள் 100 மில்லி கிராம் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சம அளவு கலந்து பொடி செய்து 200 மில்லி கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொழுநோய் நீங்கும்.
அழிஞ்சில் இலையை அரைத்து ஒரு கிராம் அளவு காலை, மாலை குடித்து வர கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
அழிஞ்சில் வேர் பட்டையை நன்கு உலற வைத்து பொடிக்கவும். பின் இதனை 100 மில்லி கிராம் வீதம் காலை, மாலை என ஒரு வாரம் வரை கொடுத்து வர விஷக்கடிகளான பாம்பு, எலி, வெறிநாய், தொழுநோய், கிரந்திப் புண், ஆகியவை குணமாகும்.
அழிஞ்சில் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் கொடுக்க வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.
இப்படி நிறைய மருத்துவ பயன்கள் இருந்தாலும் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரையின்படி இதை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
மேலும், உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் சத்து அதில் இருப்பதாலேயே அந்தக் குச்சியுடன் சுடப்படும் தேங்காயின் சத்தும் இணைந்து ஆடியின் சீதோஷ்ண நிலையைத் தாங்கும் வலிமையை அல்லது எதிர்ப்புச்சக்தியை நமக்குத்தருகிறது என்பதால்தான் அறிவியல் ரீதியாக முன்னோர் இந்தக் குச்சியைப் பயன்படுத்தி வந்துள்ளதை அறிகிறோம்.
அழிஞ்சில் மரத்தின் விதைகள் நகர்ந்து மரத்தில் ஏறி அன்னையை ஒட்டிக்கொள்வது போல் பல இன்ப துன்பங்களைக் கடந்து பக்குவப்பட்ட நாமும் இறைவனை நோக்கிச்சென்று அவனிடம் சரணடைய வேண்டும் என்பதை ஆன்மீக ரீதியாகவும் உணர்த்துகிறது இந்த மரம். ஆதிசங்கரர் படிய சிவானந்த லஹரியில் 61 ஆம் ஸ்லோகத்தில் இந்த மரத்தினை சான்றாக்கி உவமைகளுடன் பக்தி குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் குறிப்பிடும் அங்கோல மரமே அழிஞ்சில் மரமாகும். தமிழ்நாட்டில் பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்ன காவனம் சிவன் கோவிலின் தல மரம் ஆகவும் செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சிறப்பும் அழகும் சேர்க்கும் அற்புத தலமரமாகும் விளங்குகிறது இந்த மரம்.