நோய் எதிர்ப்பு சக்தி தரும் சத்தான உணவுகள்!

ஆரோக்கியத் தகவல்
நோய் எதிர்ப்பு சக்தி தரும் சத்தான உணவுகள்!

லிமையான பாதுகாப்பு உள்ள வீடுகளில் திருடர்கள் நுழைய முடியாது. அதே போல நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளவர்களை அடிக்கடி நோய்கள் தாக்காது. நாம் வாழும் சூழலும் வாழ்க்கை முறையுமே நம் நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையை தீர்மானிக்கிறது. இவற்றில் உணவு முக்கியமானது. எந்தெந்த உணவுகளால் நமக்கு என்னென்ன சத்துகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வைட்டமின் ஏ அவசியம். பாலிஷ் செய்யப்படாத முழு தானியங்கள்,  பருப்பு வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள், கோஸ் போன்ற இலை காய்கறிகள் ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது. 

வைட்டமின்  பி6 , பி12 போன்றவையும் அவசியம். பயறு வகைகள், கீரைகள் ,பழங்கள், கொட்டை வகைகள், சோயா பால், பால்பொருள்கள், மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் இவை கிடைக்கின்றன. 

நோய் எதிர்ப்பு சக்திக்கு பிரதானமானது வைட்டமின் சி. ஆரஞ்சு ,எலுமிச்சை, கொய்யா,கிவி, நெல்லிக்காய், காலிபிளவர், தக்காளி, குடமிளகாய், புதினா ஆகியவற்றிலிருந்து இது நமக்கு கிடைக்கிறது. 

தாவர எண்ணெய்கள், பச்சை இலை காய்கறிகள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் ஆகியன சாப்பிடுவதால் வைட்டமின் ஈ கிடைக்கிறது. முட்டை, மீன் மற்றும் பால் பொருட்களிலிருந்து வைட்டமின் டி கிடைக்கறது. தினமும் சிறிது நேரம் வெயிலில் நிற்பதாலும் நம் உடலின் வைட்டமின் டி அளவை அதிகரிக்கலாம். 

மினரல்களும் நம் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக செயல்பட அவசியம். தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள் பசலைக்கீரை, மீன்ஃ கோழி இறைச்சி, ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றில் இரும்புச் சத்து மிகுந்துள்ளது. 

மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் இறைச்சி, பூசணி விதை போன்ற விதைகள் முந்திரி போன்ற கொட்டைகள், முட்டை , முழு தானியங்கள், தயிர், காளான், ப்ராக்கோலி போன்றவற்றில் ஜிங்கு நிறைய உள்ளது. 

காளான், இறைச்சி, மீன், முட்டை, முழு தானியங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.

மஞ்சள், மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, கிரீன் டீ ஆகியவற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளது.

நம் குடலுக்குள் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இவை ஆரோக்கியமாக இருந்தால் தான் நன்கு உணவு செரிமானம் ஆரோக்கியமாக நடைபெறும். அப்படி எல்லாம் இயல்பாக நடந்தால்தான் உயிர் காக்கும் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். பழங்கள்  காய்கறி ,கீரைகள், தானியங்கள், பருப்புகள், மீன் என ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால்தான் இந்தக் குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்குள் எந்த நோய் தொற்று ஏற்பட்டாலும் அதை எதிர்த்து போராடுவதில் இந்த பாக்டீரியாக்கள் உதவுகின்றன. 

எனவே நன்கு சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள். உணவு சமைக்கும்போது ருசியை போலவே உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டுவிடும் நியதியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போதுமான அளவு சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். 

அதிக உப்பும் கொழுப்பும் சேர்த்த உணவுகள், துரித உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட செயற்கை பானங்கள், போன்றவை நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த வகையிலும் உதவுவது இல்லை. அதற்கு பதிலாக உலர் பழங்கள், முளைகட்டிய பயிறு, கொட்டை வகைகள் போன்றவற்றை நொறுக்குத் தீனிகளாக சாப்பிடலாம். பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கலாம். உணவில் எப்போதும் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைவாகவே இருக்கட்டும் . இரண்டு, மூன்று வாரங்கள் இதைக்  கடைப்பிடித்தால் அப்புறம் இதுவே ஆரோக்கியமான பழக்கமாக மாறிவிடும். உணவைப் போலவே முக்கியமானது தண்ணீர். தினமும் போதுமான தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். நோய் எதிர்ப்புச் சக்தி சிறப்பாக செயல்படுவதற்கு உணவுப் போலவே மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா, தியானம் ,இசை கேட்பது, மனதுக்கு பிடித்த பொழுது போக்குகளில் ஈடுபடுவது என மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். கவலைகளில் மன அழுத்தம் கொண்டால் அது நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கும். 

ஆதலால், மீண்டும் கொரோனா தொற்று  பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் நோய் எதிர்ப்பு சக்தியே. எத்தனை தடுப்பு மருந்துகள், குணப்படுத்தும் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் இது போன்ற வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே என்பதை நினைவில் வைத்து  நன்கு உண்டு, உறங்கி ஆரோக்கியம் காப்போமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com