

நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு நல்ல தூக்கமே!. இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது ஒருவருக்கு குறைவான மனச் சோர்வினைக் காட்டுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் 100 ஆண்டுகளுக்கு வாழ வேண்டுமா? தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிறார்கள் சீனாவின் போர்ட்லேண்ட் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் 8 மணி நேர இரவுத் தூக்கம்(Sleep) அவசியம் என்கிறார்கள்.
பொதுவாக தூக்க விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் ஒரு மணி நேரம் அதிகமாக தூங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பெண்கள் விஷயத்தில் தூக்கத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. குடும்ப சூழல் மற்றும் பிள்ளைகளை கவனிக்க என்று அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து விட்டு, தூக்கத்தை தொலைக்கிறார்கள் அதன் விளைவுகள் தெரியாமல். சரியான அளவு பெண்கள் தூங்கவில்லை என்றால் என்ன நடக்கும் பார்ப்போம்.
தினமும் தூங்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவது தான் ஆரோக்கியமானது. அதனை விடுத்து ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் தூங்குவதும், ஒரு நேரத்தில் எழுவதையும் வழக்கமாக வைத்திருந்தால் அவர்களுக்கு 26 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஒட்டாவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மன அழுத்தம் பலவிதமான தொந்தரவுகளை தருகிறது அதில் இதுவும் ஒன்று. மாதவிடாய் நேரத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் அது அந்த பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக வலியை ஏற்படுத்துவதாக சீனா மற்றும் இங்கிலாந்து மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த தூக்கமே மன அழுத்தத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.
பெண்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் அவசியம், சிறு தூக்க குறைபாடு கூட அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிபடுத்தி தேவையற்ற மற்ற பெரிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பெண்களுக்கு 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள்.
தூக்க குறைபாடு உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தைவான் நாட்டு மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உலகில் 10 ல் ஒரு பெண் குழந்தை பிறப்பு விஷயத்தில் சிக்கலை சந்திக்கிறார்கள். அதில் கருப்பை குறைபாடு மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் இவற்றிற்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள்.
அழகாக தோன்றுவதற்கும் ஆரோக்கியமான தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டு நாள் சரியாக தூங்கவில்லை என்றால் நீங்கள் அழகாக தெரிய மாட்டீர்கள் என்கிறார்கள் ராயல் சொசைட்டி ஆராய்ச்சியாளர்கள். இரவில் அடிக்கடி தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு எலும்புகள் பலவீனமடையும் என்கிறார்கள் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மையானது, மங்கிய பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்தால், தீவிர கண் நோய்க்கு வழிவகுக்கும்.
இரவு ஷிப்ட்களில் அதிக காலம் வேலை செய்யும் பெண்களுக்கு அவர்களின் உடற் கடிகாரம் பாதித்து அதனால் அல்சர், இதய நோய்கள், வளர்சிதை மாற்ற குறைபாடு மற்றும் சில வகை கேன்சர்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அப்படி வேலை பார்ப்பவர்களின் நினைவுத் திறனையும், சிந்திக்கும் ஆற்றலையும் குறைக்கிறது என்கிறார்கள் லண்டன் சுவான் சீ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஆரோக்கியமான உணவு மற்றும் தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சியாலும் கூட பெண்களில் சிலருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது ஏன் தெரியுமா? அதற்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் உடலில் கொழுப்பு எரிப்பு செயல் முறையை மெதுவாக்கும், வளர்சிதை மாற்றத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தி ஹார்மோன் சமநிலையை உருவாக்கும் இதனால் உடலில் கொழுப்பு சேர ஆரம்பித்து உடல் எடை அதிகரிக்க வழிவகை செய்யும் என்கிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)