பழமைவாத கட்டுப்பாடுகள் நிறைந்த அந்நாளில், ஆயுதம் தாங்கி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக, வீதிகளில் இறங்கி போராடிய, வீர மங்கைகளின் சுதந்திர தீயை, எதனைக் கொண்டும் அளவிடமுடியாது.
17-ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வேலு நாச்சியார். ஆங்கிலேயேரை எதிர்த்த போரில், வேலு நாச்சியாரின் உருவாக்கிய தற்கொலை படைத் தளபதியாக இருந்தவர்தான் குயிலி.
தன் உடல் முழுவதும், எண்ணெய் தோய்த்தெடுக்கப்பட்ட பருத்தி ஆடையை சுற்றிக்கொண்டு, ஆங்கிலேயேர்களின் ஆயுத கிடங்கில் குதித்து, தன்னை தானே பற்ற வைத்துக்கொண்டு, ஆயுத கிடங்கை அழித்தார் வீரப்பெண் குயிலி. அவரின் தியாகம்தான், தமிழகத்தில் சுதந்திரத் தீயின் முதல் பொறி...
இந்த தீயை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்தவர், வடநாட்டு வீரமங்கை ஜான்சி ராணி. சீறிப்பாயும் குதிரையில், கையில் வாளேந்தி, ஆங்கிலேயேர்களை எதிர்த்து போரிடும் அவரின் உருவம் வீரத்தின் வெளிப்பாடாகும். தங்களுக்கு அடிபணியாத மக்களை மரத்தில் கட்டி தூக்கிலிட்டார்கள் என்பதற்காக, அந்த மரங்களையே வெட்டி வீழ்த்தினார்.
இதேபோன்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர்தான் வங்கத்தைச் சேர்ந்த சிங்கப்பெண் மாதங்கினி ஹஸ்ரா. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, 70 ஆயிரம் பேரைக் கொண்டு, கொல்கத்தாவில் தலைமை தாங்கி நடத்தினார். அங்குள்ள காவல் நிலையத்தில், தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது, ஆங்கிலேயர்களின் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியானார். துப்பாக்கி தோட்டா துளைத்த இறுதி நொடியிலும் ‘வந்தே மாதரம்…’ என முழங்கியவாரே உயிரை விட்டார் மாதங்கினி.
அசாமில் பீர்பலா என்றழைக்கப்படும் கனக்லாடா பாருவா (Kanaklata Barua), கோஹ்பூர் காவல் நிலையத்தில் (Gohpur Police Station), தேசிய கொடியை ஏற்றி, ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளே திரும்பிச் செல்லுங்கள்’ என வீர முழக்கமிட்டார். 18 வயதே நிரம்பிய பீர்பலாவை ஆங்கிலேயேர்கள் சுட்டுக்கொன்றனர். அவரின் நினைவைப் போற்றும் வகையில், இன்றளவும் கோஹ்பூரில் கையில் தேசிய கொடி ஏந்திய படி பீர்பலாவின் சிலை கம்பீரமாக நிற்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் ஜான்சி ராணி படை பிரிவுக்கு, தலைமை தாங்கி வழிநடத்தினார் கேப்டன் லட்சுமி சாகல். 500-க்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்டி, ஆங்கிலேயேர் ஆட்சிக்கு முடிவுக்கட்ட பர்மாவிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின்னர் குடியரசுத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார் லட்சுமி சாகல். ஆனால் வெற்றிபெறவில்லை. இவர் குறித்து Capt. Laxmi Sahgal எனும் படமும் வெளியாகியுள்ளது.
எதிரிகளை எதிர்க்க வயதோ, பாலினமோ எதுவும் தடையே இல்லை என்று தம் வாழ்வின் மூலம் முன் உதாரணமாகத் திகழ்ந்தவர் தில்லையாடி வள்ளியம்மை. தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சட்டங்களை கண்டித்து காந்தி போராடிய போது களத்தில் நின்றார் 16 வயதே ஆன வள்ளியம்மை. போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வள்ளியம்மை, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
நாட்டின் விடுதலைக்காக போராடச் செல்லும் ஆண்களுக்கு வெற்றி திலகமிட்டு வழியனுப்புவதில் தொடங்கி, நாட்டின் விடுதலையை ஒற்றை இலக்காக கொண்டு வீதியில் இறங்கி போராடிய மகத்தான இந்த பெண் ஆளுமைகள் வரை வீரத்தின் சிகரங்களைப் போற்றி 77-வது சுதந்திர தினத்தில் பெருமைக் கொள்வோம்.