

ஒரு நாள் மாலை ஆறு மணி அளவில் எனது கிளினிக்குக்கு தாயும் பாட்டியும் ஒரு மாதக் குழந்தையை பதட்டத்தோடு தூக்கிக் கொண்டு வந்தனர். நானும் உடனே "குழந்தையை மேஜை மேல் படுக்க வையுங்கள்" என்று கூறி, “என்ன ஆச்சு” என்று கேட்டேன்.
உடனே குழந்தையின் தாய் "ஓ" என்று அழ ஆரம்பித்து விட்டார்.
பாட்டி சொன்னார் “டாக்டர் குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது...”.
“எப்படி விழுந்தது?” என்று கேட்க
“ஒரு பாட்டி குழந்தையை போட்டு விட்டார்..” என்று கூறி மேலும் அழத்தொடங்கினார் அந்த தாய்.
அந்த பாட்டியை நான் பார்க்க பாட்டி சொன்னார் “நானில்லை டாக்டர். குழந்தை காலையிலிருந்து விடாமல் அழுது கொண்டே இருந்தது. உறம் விழுந்துடுச்சி என்று சொல்லி எங்கள் தெருவில் உள்ள பாட்டியை அழைத்து வந்து உறம் எடுக்கச் சொன்னோம். அந்த பாட்டி அதில் நல்ல அனுபவம் உள்ளவர்தான். குழந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு தலை கீழாக ஆட்டினார். அப்போது கை தவறி குழந்தை விழுந்து விட்டது டாக்டர்,” என்று முடித்தார்!
“ஏம்மா பிரசவம் நடந்தவுடனே டாக்டர்களும், நர்சுகளும் இதெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லி தானே அனுப்புறாங்க?” என்று சொல்லிக் கொண்டே குழந்தையை சோதித்துப் பார்த்தேன்.
தலைப்பகுதியில் தொட்டதும் குழந்தை அதிகமாக அழத்தொடங்கியது. சரி ஒரு எக்ஸ்-ரே படம் எடுத்து விடலாம் என்று சொல்லி எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தேன். தலை எலும்பில் ஒரு விரிசல் தெரிந்தது. ஆனால் குழந்தை பால் குடித்தது, வாந்தி, மயக்கம், வலிப்பு ஏதும் ஏற்படவில்லை.
“பயப்பட ஒன்றுமில்லை ஆனால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி சென்னை குழந்தைகள் மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்பினேன்.
அங்கே ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சற்றே ரத்தக் கசிவு இருப்பதால் பத்து நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். குழந்தை நலமாக உள்ளது என்று அறிந்தேன்.
பொதுவாக சிறு குழந்தைகள் குறிப்பாக பிறந்து நான்கு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றில் வாயு சேர்வது, அழும்போது காற்று விழுங்கி விடுவது, செரிமான பிரச்னைகள் போன்றவை ஏற்படும். இது பிறகு தானாகவே சரியாகிவிடும். இதை “காலிக் பெய்ன்” என்று சொல்லலாம். இதற்கு பயப்பட வேண்டியதில்லை. குழந்தையை தோள் மீது வைத்து மெதுவாக தட்டிக் கொடுத்தால் போதும். மேலும் காது வலி, காய்ச்சல், மூக்கடைப்பு போன்ற பல காரணங்களால் சிறு குழந்தைகள் அழக் கூடும். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
நமது மக்கள் தொக்கு அல்லது தொக்கம், உறம் என்று சொல்லி அதற்கென வயதான பாட்டிகள் தான் நிபுணர்கள் என நினைத்து அவர்களிடம் அழைத்துச் செல்லுவார்கள். முன்பே சொன்னது போல் பாட்டிகள் குழந்தையை தலை கீழாக தொங்க விட்டு ஆட்டுவார்கள், கழுத்து, தலைப் பகுதியில் எண்ணெய் தடவி உருவி விடுவார்கள். அல்லது புடவைகளில் குழந்தையை படுக்க வைத்து இருபக்கம் பிடித்துக் கொண்டு உருட்டுவார்கள். இப்படி செய்யும் போது பல விபரீதங்கள் ஏற்படும். குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடிவதுண்டு.
எனவே தொக்கம் அல்லது உறம் எடுத்தலை அறவே தவிர்க்க வேண்டும். அறிவியல் பூர்வமாக சிகிச்சை அளிப்பதே சிறந்தது.