இனிய தமிழ்ப் புத்தாண்டு: நம்பிக்கையும் நன்மைகளும் பெருகட்டும்!

tamil-new-year-greetings-
tamil-new-year-greetings-
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on
MM strip
MM strip

மலரவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று, மங்கலமும், நம்பிக்கையும் பொங்கும் கவிதை வரிகள்…

வீட்டுக்கு வீடு வாசற்படியாய்

வருக தமிழ்ப் புத்தாண்டே!

சித்திரை மகளே சீரோடு வா!

முத்திரை பதிக்கவே முறைப்படி வா!

வேப்பம் பூவின் கசப்போடு வா!

வெல்லப் பாகின் இனிப்போடு வா!

மாங்கனித் துண்டின் புளிப்போடு வா!

வாழ்வின் சுவைகளை வழங்கிட வா!

கனி காணும் காலையில் ஒளியாய் வா!

கவலைகள் போக்கும் மழையாய் வா!

அறுசுவை உணவாய் அகத்தில் வா!

புதுயுகப் புரட்சி முகத்தில் வா!

மங்கல இசை முழங்கிட வா!

எங்கும் இன்பம் வழங்கிட வா!

உழவன் சிரிப்பில் உயிர்ப்பாய் வா!

உழைக்கும் கைகளின் வியர்வையாய் வா!

வறுமை போக்கும் வரமாய் வா!

பொறுமை காக்கும் அறமாய் வா!

தமிழ்மொழி பேசும் அமுதாய் வா!

தரணி போற்றும் புகழாய் வா!

இல்லங்கள் தோறும் விளக்காய் வா!

உள்ளங்கள் தோறும் உணர்வாய் வா!

வாசல் தெளித்த கோலமாய் வா!

வசந்தம் பாடும் ராகமாய் வா!

பழையன கழித்த திமிரோடு வா!

புதியன புகுத்திய கனிவோடு வா!

பிணிகள் போக்கும் மருந்தாய் வா!

பணிகள் சிறக்கும் துணையாய் வா!

ஒற்றுமை என்னும் கயிறாய் வா!

உற்றார் மெச்சும் உறவாய் வா!

சிறுவர் ஆடும் சிரிப்பாய் வா!

பெரியோர் காட்டும் நெறியாய் வா!

கல்விச் செல்வம் பெருகிட வா!

கவிதை வெள்ளம் பெருகிட வா!

பஞ்சாங்கம் சொல்லும் பலனாய் வா!

நெஞ்சார்ந்த அன்பின் உருவாய் வா!

தடைகள் உடைக்கும் பலமாய் வா!

விடை தெரியாப் புதிருக்கு ஒளியாய் வா!

இனிய தமிழ்ப் புத்தாண்டு மலரட்டும்!

இடர்கள் எல்லாம் தொலையட்டும்!

வையகம் வாழ்த்த வருகவே வருக!

பராபவ ஆண்டே வருக!

பரவசத்தை அள்ளித் தருக!

logo
Kalki Online
kalkionline.com