அக்னி சிறகுகளை விரிப்போம்! மகளிருக்கு மகளிர் துணை நிற்போம்!

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 08, 2024
அக்னி சிறகுகளை விரிப்போம்! மகளிருக்கு மகளிர் துணை நிற்போம்!
pixabay.com

ப்பக்கடை வைத்திருக்கும் ஆயா முதல் அரசியல் ஆளுமையில் இருக்கும் உயர் அதிகாரப் பெண்கள் வரையில், (ஒரு பெண் எந்த நிலையில் முழுமையான வெற்றி அடைகிறாள் தெரியுமா?)

ஒரு பெண், அடிமட்டத்திலிருந்து கால் ஊன்றி எழுந்து ஒவ்வொரு தடைகளாகக் கடந்து இறுதியாக தன் இலக்கை அடைகிறாள் என்றாலுமே, அவளுடைய வெற்றி இந்தச் சமுதாயத்தில் முழுமையாகக் கொண்டாடப் படுவதில்லை.

ஒரு பெண் அவளுடைய தொழில்துறையில் வளர்ந்து வெற்றி பெற்றாலுமே அவள் கையில் கரண்டியைக் கொடுத்து குடும்பத்தைப் பார்த்துகொள்ள சொல்பவர்கள் பல பேர் உண்டு. ‘அதுவே உனக்கு அழகு’ என்பது போன்ற மூளை சலவைகளும் நடக்கும். ஒரு பெண் எத்தகைய ஆளுமையுடையவளாக இருந்தாலும் எத்தகைய உயரத்தை அடைந்தாலுமே கடைசியில் அவளை அடுப்படியில் கொண்டு வந்து சேர்த்து விடுவதில் திருப்தி அடைகிறது இந்தச் சமூகம்.

ஒரு ஆண் தன்னுடைய லட்சியத்தை நோக்கி ஓடும்போது குடும்பத்தை மறந்து அவனுடைய வேலையிலேயே மும்முரமாக இருக்கலாம். அது தப்பில்லை. மற்றதை பெண் கவனித்துக்கொள்வாள். இதுவே பெண் தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கையில் ஆண்களின் உதவி அரிதாகவே கிடைக்கும்.

எந்த இடத்தில் ஒரு பெண், ஆணை மிஞ்சி வெற்றியை தழுவுகிறாளோ, அங்கே அவளை இழிவுப்படுத்த எடுக்கப்படும் ஆயுதம் அவளுடைய நடத்தையைப் பற்றிய விமர்சனம்தான்.

எத்தகைய வெற்றியை அடைந்திருந்தாலும் இதுபோன்ற செயல்கள் ஒரு பெண்ணைக் கலங்கச் செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசுவது அதிகமாக இன்னொரு பெண்ணாகவேயிருக்கும். இதற்கு ஒருவகையில் இன்றைய சினிமாவும், தொலைக்காட்சி தொடர்களும் பெண்களை வில்லிகள் போன்று சித்தரிப்பதுகூட காரணமாக இருக்கலாம். அதுவே, பெண்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

pixabay.com

இப்படிப்பட்டப் பேச்சுகளை எதிர்கொள்ளும் பெண்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? தன்னுடைய துறையில் வெற்றி பெற்றவர்களாகவும், நன்றாக சம்பாதிக்கக் கூடியவர்களாகவும், பேரும் புகழும் அடைந்தவர்களுமாக இருப்பார்கள்.

ஒரு பெண்ணைப் பற்றி சுலபமாக பேசிவிட்டு கடந்தும் சென்றுவிடுகிறார்கள். அதனால் அப்பெண்ணிற்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இந்தச் சமுதாயம் கவலைப்படுவதில்லை.

பெண்களுக்குப் பிரச்னை என்பது எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். அவளுடைய வீடு, வேலை செய்யும் இடம், சமூகம் போன்று அவள் எதிர்கொள்ள கூடிய இன்னல்கள் எங்கிருந்து வந்தாலும், தன்மீது தானே வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவளுக்கான ஆயுதமாகும். யாருடைய துணையும் இல்லாதபோதிலும், ஒரு பெண் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவளை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் துடுப்பாக அமையும்.

பெண்களைப் பற்றி சிந்திக்கையில், பீனிக்ஸ் பறவையின் அக்னி சிறகுகள் நினைவுக்கு வருவதுண்டு. எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் உயிர்த்தெழுந்து தன்னுடைய அக்னி சிறகுகளை விரித்து பறக்கக் கூடிய தைரியம் பெண்ணுக்கே உரித்தானது.

இத்தனை நாட்களாக பெண்கள் பெற்ற வெற்றி அனைத்துமே இந்தச் சமுதாயம் அவளுக்குக் கொடுத்த எல்லா இடர்களையும் உடைத்து எறிந்துவிட்டு அவளாகவே, அவளுடைய தன்னம்பிக்கையைக் கொண்டு பெற்றதேயாகும். அப்படியானால் இந்தச் சமூகம் அவளை ஆதரித்தால், அவளுக்கு நம்பிக்கை அளித்தால், அவளுக்கு பக்கபலமாக இருந்தால் அவள்  இன்னும் எத்தனை எத்தனை வெற்றிகளை அடைந்திருக்கக்கூடும். கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.

இதையும் படியுங்கள்:
மஞ்சுமெல் பாய்ஸ் குணா குகைக்குப் பின் இவ்வளவு ரகசியங்கள் உள்ளனவா?
அக்னி சிறகுகளை விரிப்போம்! மகளிருக்கு மகளிர் துணை நிற்போம்!

கடல்போன்ற தடைகளைத் தகர்த்தெறிய முடியும் பெண்ணால்.

நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கின் சிறு ஒளி கிடைக்குமாயின்!!

அப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொடுப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்களாகவோ நானாகவோயிருக்கலாம்.

ஏனெனில், ஒரு பெண்ணின்  திறமைகளை, அவள் உணர்ச்சிகளை, அவளது போராட்டங்களை, அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நன்றாகப் புரிந்துக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பது இன்னொரு பெண்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com