அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
80 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கல்கி குழுமம் கடந்த 2021 செப்டம்பரில் இருந்து இணையதளம் வாயிலாக கல்கி ஆன்லைன் என்ற பெயரில் இயங்கி வருகிறது. நமது கல்கி ஆன்லைன் தளம் செயல்பட வேராக இருக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் நமது கல்கி குழுமம் சார்பாக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுக்கு வேண்டிய வாழ்வியல் கருத்துகளை எழுத்து மூலம் வழங்கி வரும் நமது எழுத்தாளர்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது… அதிலும் இந்த மங்கையர் தினத்தன்று (மார்ச் 2025) நமது 'மங்கையர்' எழுத்தாளர்களை போற்ற தவறக்கூடாது.
கல்கி குழும வளர்ச்சிக்கு பணியாற்றும் மங்கையர்களே!
உங்கள் படைப்புகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்தும் அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
********
இந்த மகளிர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக, கடந்த வருடம் (2024) நமது கல்கி ஆன்லைன் தளத்தில் 500 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதி பெருமை சேர்த்த 6 படைப்பாளிகளுடன் ஒரு சந்திப்பு... அதன் விளைவாக இந்த சிறப்பு அறிமுகம்...
"வணக்கம்... நான் கவி பாரதி. VISCOM படித்திருக்கிறேன். பாரதி என்ற பெயரில் உள்ளடக்க எழுத்தாளராக பணிபுரிகிறேன். எழுத்து மற்றும் சமூக ஊடக கையாளுதலில் அனுபவம் உள்ளவள். பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் புத்தகங்கள் எனது எழுத்தின் ஆர்வத்தை ஊக்குவித்தது. எனது கல்லூரி நாட்களில் அனைத்து கல்லூரிகளுக்கும் கல்கி குழுமம் நடத்திய 'பொன்னியின் செல்வன் வினாடி வினா' போட்டியில் நான் கலந்துக்கொண்டு டாப் 4ல் இடம் பிடித்து பரிசு வென்றேன். அப்போதுதான் முதன்முதலாக கல்கி பதிப்பகம் குறித்து எனக்கு தெரிந்தது. மறக்க முடியாத தருணம். எனது கல்லூரி நாட்களை முடித்தபின் கல்கியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டேன். எனது எழுத்து திறமை அதிகரிக்க கல்கிதான் முக்கிய காரணமாக இருந்தது. முதலில் செய்திகள் எழுத கற்றுக்கொண்டேன். பின் விளையாட்டு செய்திகள், சினிமா செய்திகள், கலை/கலாச்சாரம், அழகு/ஃபேஷன் போன்ற துறைகளில் எழுத தொடங்கினேன். கதைகள், கவிதைகள் எழுதவும் கற்றுக்கொண்டேன். சமீபத்தில் 'என் கனா' என்ற தலைப்பில் கவிதைப் புத்தகத்தை இணைய தளத்தில் E-புத்தகமாக வெளியிட்டுள்ளேன். எனது உள்ளடக்கங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். முக்கியமாக எனது வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் கல்கி குழுமத்திற்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்."
“வணக்கம். என் பெயர் நான்சி மலர். நான் B.E. Computer Science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறு வயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. என்னுடைய சிறுவயது முதலே கல்கி இதழ் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். வாங்கியும் படித்திருக்கிறேன். தற்போது, கல்கி ஆன்லைனில் மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற பிரிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன்."
“வணக்கம், என்னுடைய பெயர் கே.எஸ். கிருஷ்ணவேணி. நான் BA பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய வீட்டிலேயே ஒரு குட்டி நூலகம் இருக்கும். முதலில் வாசகராக இருந்துதான் எழுதுத்தாளரானேன். என்னுடைய அப்பா காலம் முதலே கல்கி இதழ் குறித்து எனக்கு தெரியும். மங்கையர் மலர் இதழுக்கு 1992ல் இருந்து எழுதத் தொடங்கினேன். அந்த சமயத்தில் குட்டி துணுக்குகள் எழுதி பரிசு பெற்றுள்ளேன். மேலும், கல்கி குழுமம் தொடர்ந்து எழுதுவதற்கு என்னை உற்சாகமாளித்தது. அதனைத் தொடர்ந்து பெட்டிக்கதைகளில் ஆரம்பித்து ஜோக்ஸ், சமையல் குறிப்புகள் என அதிகமாக எழுதாத ஆரம்பித்தேன்.
தற்போது, கல்கி ஆன்லைனுக்காக மோட்டிவேஷன், வீடு மற்றும் குடும்பம், உணவு மற்றும் சமையல், ஆரோக்கியம் போன்ற பிரிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, மோட்டிவேஷன் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.”
“என் பெயர் விஜி. நான் இதழியல் துறை படித்துள்ளேன். எனது கல்லூரி நாட்களிலே எனக்கு எழுத்து மீது அதீத ஆர்வம் இருந்தது. வார இதழில் எனது கட்டுரை வர வேண்டும் என ஆசைக்கொண்டேன். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதை படமாக வெளிவந்த பின்பு, கல்கி பத்திரிக்கை குறித்து அறிந்தேன். கடந்த வருடம்தான் கல்கியில் எனது எழுத்து பயணத்தை தொடங்கினேன். சினிமா எனக்கு மிக பிடித்த ஒன்று. அதனால் சினிமா குறித்து எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டேன். தற்போது ஆன்மிகம், சினிமா, வாழ்வியல் பிரிவில் எழுதி வருகிறேன். எனது எழுத்துக்கள் கல்கி மூலமாக மக்களை சென்றடைவது அதீத மகிழ்ச்சியை அளிக்கிறது. கல்கிக்கு நன்றி...”
“வணக்கம், என் பெயர் எஸ்.விஜயலட்சுமி. நான் M.A M.Phil ஆங்கில இலக்கியம் படித்த்துள்ளேன். சில வருடங்கள் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளேன். தற்போது பகுதி நேர பேராசியராக பணிபுரிந்துவருகிறேன். மற்றபடி, எழுதுவதுதான் என்னுடைய முழுநேரத் தொழிலாக உள்ளது. மேலும், நான் ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், புத்தக விமசகர்கரும் கூட. மேலும் பல்வேறு மாத மற்றும் வார இதழ்கள், இணைய இதழ்கள் நடத்திய சிறுகதை போட்டிகளில் பங்குபெற்று நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். என்னுடைய 12 சிறுகதை அடங்கிய தொகுப்பு புத்தகத்திற்கு 'திருப்பூர் பெண் சக்தி' விருது கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனது அப்பா மற்றும் அம்மா இருவருமே கல்கி மற்றும் மங்கையர்மலர் இதழ்களின் வாசர்களாக இருந்தவர்கள். நான் என்னுடைய 12 வயதிலேயே கல்கி குழுமத்தில் மங்கையர்மலர் மற்றும் கோகுலம் இதழ்களின் வாசகரானேன்.
கல்கி ஆன்லைன் ஆரம்பித்த பிறகுதான், முழுமூச்சாக எழுதத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக, ஒரு மாதத்திற்கு 60 கட்டுரைகள் வரை கல்கி ஆன்லைனுக்காக எழுத ஆரம்பித்தேன்.
தற்போது என்னுடைய கணவர் முதல் குழந்தைகள் வரை கல்கி ஆன்லைன் இணையதளத்திலும் கல்கி இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னை மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தியது கல்கி இதழ் தான். மேலும், மோட்டிவேஷன், அழகு மற்றும் பேஷன், வீடு மற்றும் குடும்பம், பசுமை, காலை மற்றும் கலாச்சாரம் போன்ற பலவித தலைப்புகளில் எழுவதற்கு கல்கி ஆன்லைன் வாய்ப்புகளை வழங்கி, எங்கள் சிறகுகளை மேலும் விரித்து பறக்க உதவியது.
"சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன். நான் முதன்முதலில் எழுதிய கதை என்றால் அது மாயாஜால கதைதான். சிறுவயதில் என்னிடம் 'என்ன ஆக வேண்டும்?' என்று கேட்டால் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் கூறுவேன். அதையே நிறைவேற்றி இருப்பது மிக்க மகிழ்ச்சி. 15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக மக்களுக்கு எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. மங்கையர் மலர் புத்தகங்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். சமையல், சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் அதிக ஆர்வம். என்னுடைய ஸ்பெஷல் என்றால் அது நேர்காணல்தான். 'உறவுச்சங்கிலி' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. என்னுடைய எழுத்து மூலம் ஒருவராவது பயன்பெற வேண்டும். எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். என்னுடைய பெயரோடு எனது ஊர் பேரையும் பதிக்க வேண்டும் என ஆசைக்கொண்டு சேலம் சுபாவாக பயணிக்கிறேன். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்."