
- வி.மணி, இராசிபுரம்
மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. சமீபகாலமாக தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, பேதி, சுவாச பிரச்னை, தலைவலி, மயக்கம் எல்லாம் வருகிறது. காரணம் மாம்பழத்தை செயற்கையாக கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு பழுக்க வைப்பதுதான். வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு, தடை செய்யப்பட்ட கெமிக்கல்.
மாங்காய்களை குவியல் குவியலாக வைத்து, அதற்குள் சின்னத் துளையிட்ட பிளாஸ்டிக் கவர்களில் கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள். கால்சியம் கார்பைடில் ஆர்சனிக், பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும். இது நச்சுத் தன்மை உடையது.
இதிலிருந்து வெளி வருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி, பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். ஆனால், உண்மையில் உள்ளுக்குள் பழுத்திருக்காது. நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு போதுமானது.
மாம்பழம் மட்டுமல்லாது பப்பாளி, தக்காளி, வாழை என்று பலதையும் கல்போட்டு பழுக்க வைக்கிறார்கள். எனவே, மாம்பழத்திலோ பப்பாளியிலோ கரும் புள்ளிகள் இருந்தால் நிச்சயம் வாங்காதீர்கள். கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும். இதனால் முதுமைத் தோற்றம், இதய நோய்,புற்று நோய்கூL வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாங்காய்களை வாங்கி வைக்கோல் போட்டு, வீட்டிலேயே பழுக்கவிட்டு சாப்பிடுங்கள். அல்லது நம்பிக்கையான பழக்கடைகளில் சோதித்து வாங்குங்கள். கல் போட்டு பழுக்க வைப்பது தெரிந்தால் தயங்காமல் காவல் துறையில் புகார் கொடுங்கள். சென்ற வருடம், இரண்டு குழந்தைகள் இந்த மாம்பழங்களைச் சாப்பிட்டு இறந்தது நினைவிருக்கலாம். ஜாக்கிரதை!
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் மே 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்