பொதுவாகவே குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதும் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சுவதும் சகஜமாகவே அனைவரும் செய்வதுதான். ஆனால் அப்படி செய்வது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில நபர்கள் தன்னுடைய குழந்தையை யாரிடமும் கொடுக்க மாட்டார்கள். யாராவது தூக்க வந்தால்கூட கைகளை கழுவி விட்டு தூக்குங்கள் என்று கூறுவார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையிலேயே குழந்தைகளை கொஞ்சுவதாலும் முத்தமிடுவதாலும் ஆரோக்கியக் கேடு ஏற்படுமா? என்ற கேள்வி நம் அனைவரது மனதிலும் எழுகிறது.
அனைவரிடமும் சுத்தமாக இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால் எல்லா நேரமும் எல்லா விஷயத்திலும் அதீத சுத்தம் பார்ப்பதற்கு ஓர் எல்லை உண்டு. இது ஒருவரிடம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர் மனரீதியாக பாதிக்கப்படலாம். இதனை ஆப்சசிவ் கம்பெல்சிவ் டிசார்டர் என்று கூறுவார்கள். இப்படி குழந்தைகளிடம் அதிகமாக சுத்தம் பார்த்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்படி எல்லா சூழ்நிலைகளிலும் பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் தாக்கும் அபாயம் இருக்கிறதாம்.
அனைவருமே வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது கை கால்களை கழுவுவது அவசியமாகிறது. இப்படி கை கால்களை கழுவாமல் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதேசமயம் குழந்தைகளுக்கு முத்தமிடும் போது உதடுகளில் முத்தமிடுவது தவறானது. மற்றபடி குழந்தைகளைத் தொடவே கூடாது முத்தமிடக்கூடாது என்பதெல்லாம் சரியல்ல.
குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க, அவர்களின் அருகில் புகைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு வாரங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எனவே அச்சமயங்களில் குழந்தைகளிடம் கவனமாக இருப்பது நல்லது. கையில் அழுக்குடன் குழந்தையைத் தூக்குவது, சதா குழந்தைக்கு முத்தமிட்டு கொண்டே இருப்பதை அனைவருமே தவிர்க்க வேண்டும்.
ஓரளவு வளர்ந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது முத்தமிடுவது தவறில்லை. ஆனால் தாய்ப்பால் மட்டுமே குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.