இது சரிதானா?

இது சரிதானா?
Published on

பொதுவாக திருமண வைபவங்களிலோ அல்லது வேறு வைபவங்களிலோ விருந்து அளிக்கப்படுகிறது. சில வீடுகளில், முதலில் இலைபோட்டுப் பரிமாறிய பிறகு, சாப்பிட அழைப்பார்கள். இன்னும் சில வீடுகளில், சாப்பிடுபவர்கள் உட்கார்ந்த பிறகு இலை போட்டுப் பரிமாறுவார்கள்.

விருந்தினர்கள், பலசமயங்களில் குழந்தைகளோடு வருவதுண்டு. குழந்தையோடு வருபவர்கள் பரிமாறியுள்ள இலையில் குழந்தையை உட்கார வைக்கிறார்கள். இலையில் பரிமாறியுள்ளதையெல்லாம் சாப்பிட அக் குழந்தையால் இயலுமா? என்று ஒரு துளியும் யோசிக்காமல், உட்கார்த்தி விடுகிறார்கள். அக்குழந்தை, பரிமாறியதையெல்லாம், கையால் அளைந்து அமர்க்களம் செய்து, பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவரை, நிம்மதியாகச் சாப்பிட விடாமல் தர்ம சங்கடமான நிலையில் ஆழ்த்துகிறது. மேலும்,  இலைக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் நீர் தம்ளர் சாய்ந்து ஓடி, எதிர்ப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரின் இலைக்குப் போய்ச் சேருவதுமுண்டு.

இக்குழந்தையைச் சேர்ந்தவர்கள், வேறு இலையில் கொஞ்சமாக குழந்தை சாப்பிடும் என்று தெரிந்த அயிட்டங்களைக் கொஞ்சமாகத் தம் இலையிலிருந்து போட்டுச் சாப்பிடச் சொல்லக் கூடாதா?

பெரியவர்களும் சரி, பரிமாறிக் கொண்டு வரும்போது தங்களுக்கு வேண்டுமென்பதை மாத்திரம் வாங்கிக் கொள்ள முடியாதா? எடுத்துக்காட்டாக சர்க்கரை நோய் இருப்பவர்கள், தாங்கள் மிக மிகக் குறைத்த அளவிலேயே இனிப்பு சாப்பிடலாம் என்று அறிந்திருந்தாலும், பரிமாறப்பட்டு வரும் பெரிய லட்டையோ மைசூர்ப்பாக்கையோ, இலையில் வாங்கி, அதில் ஓரத்தில் ஒரு துளி விண்டு வாயில் போட்டுக்கொண்டு மீதியை அப்படியே இலையில் எறிந்து விடுகிறார்கள். இதோடல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களைப் பெருமையாக(!) பார்வை பார்த்து, 'எனக்கு சுகர் பிராப்ளம், டாக்டர் ஸ்டிரிக்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்" என்ற பறைசாற்றல் வேறு.

செட்டிநாட்டு விருந்துகளில், தயாரிக்கப்பட்ட எல்லா அயிட்டங்களையும், முதலில் துளித் துளியாக பரிமாறுவார்கள். இது. அன்றைய விருந்துக்காக எத்தனை அயிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை விருந்தினருக்கு உணர்த்தும் ஒரு வழி. விருந்தினர், சாப்பிட உட்கார்ந்த பிறகு, இவை, அதிக அளவில் பரிமாறப்படும். விருந்தினர் முதலில், தங்கள் இலையில் துளி பரிமாறப்பட்டிருக்கும் அயிட்டங்களை ருசி பார்த்து. தமக்கு வேண்டியதை, வாங்கிக் கொள்ள முடியும். இந்த முறையை எல்லோரும் பின்பற்றினால் உணவு வீணாவதைத் தடுக்கலாமே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com