ஹைதராபாதில் நாங்கள் வசிக்கும் பகுதியில் முன்பெல்லாம் தமிழ் பத்திரிகைகள் கிடைக்காது. ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஒரு கடையில்தான் கிடைக்கும். மங்கையர் மலர் வரும் நாளில் காலையில் அலுவலகத்துக்கு சீக்கிரமே கிளம்பி வழியில் மலரை வாங்கிக் கொண்டு பஸ் பயணத்திலேயே படித்து முடித்து விடுவேன். அலுவலகத் தெலுங்கு சிநேகிதிகளுக்கும் மலரில் வரும் பயனுள்ள மருத்துவ, மற்றும் சமையல் குறிப்புகளை மொழி பெயர்த்துச் சொல்வேன்.
பணி ௐய்வு பெற்ற பின் பொழுதைப் போக்க, மங்கையர் மலரில் வந்த சமையல் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட எனக்கு சௌபாக்யா கிச்சன் செட் பரிசாகக் கிடைத்த வுடன் உற்சாகமாகி தொடர்ந்து மலரில் என் படைப்புகளை அனுப்பத் தொடங்கினேன். அவை பிரசுரமாகி மங்கையர் மலரிடமிருந்து புடவை, பணம், புத்தகங்கள் என பரிசுகளைப் பெற்றேன். பெற்றும் வருகிறேன்.
வாசகியாக இருந்த என்னை எழுதத் தூண்டி, எனக்குள்ளே இருந்த திறமையை வெளிக் கொணர்ந்தவள் மங்கையர் மலர்தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். மேலும், பிற மாநில மற்றும் பிற நாட்டு வாசகர்களின் படைப்புகளுக்கும் மதிப்பளித்து ஊக்குவித்து வருபவள் மங்கையர் மலர் மட்டும்தான். உலக்கெங்கும் உள்ள வாசகர்கள் மத்தியில் அவளுக் கென்று ஒரு இடம் உண்டு.
வாசகிளுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் மங்கையர் மலர் நீண்ட காலம் தன் சேவையைத் தொடர வாழ்த்துகள்.