- அசோக் ராஜா, அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
காளான்
காளான்களை உணவில் சேர்த்துக்கொள்வதால் எந்தவிதமான நன்மைகள் கிடைக்கின்றன? மனிதனுக்கு இயற்கை அளித்த ஆரோக்கியமான உணவு வகைகளில் காளானும் ஒன்று. இதனை உட்கொள்வதால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
(1) காய்கறிகள் மற்றும் பழங்களைவிட காளானில் அதிகப் புரதச் சத்து உள்ளது.
(2) காளானில் நார்ச்சத்து அதிகம் உண்டு. அதனால் மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும்.
(3) எர்கோதியோனின் (Ergothioneine) எனும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants) காளானில் இருப்பதால், இது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
(4) போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இதில் அதிகமிருப்பதால் ரத்த சோகைக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
(5) காளானில் உள்ள லென்டிசைன் மற்றும் எரிடாடின் ஆகிய வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள கெட்டக் கொழுப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தமாக்குகின்றது.
(6) காளானில் உயர் ரகக் கால்சியம் சத்து இருப்பதால் நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்கப் பெருமளவு உதவுகிறது.
(7) மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றையும் காளான் சரிப்படுத்துகிறது.
(8) தினந்தோறும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாகக் காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
(9) உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் காளானில் உள்ளதால், இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உணவாக விளங்குகிறது.
(10) உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இறைச்சிக்கு மாற்றாகக் காளானால் செய்யப்பட்ட உணவு வகைகளைக் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
***********************************************************
கற்றாழை
கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்குப் பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்துச் சருமத்தைப் பாதுகாக்கின்றது. மேலும், சருமத்தின் ஈரத்தன்மையைக் காத்து, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமாகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாகச் சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும். தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும்.
வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.
ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும். கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும்.
கற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ, உதடு வறண்டு போகாமல் இருக்கும். முகத்துக்குப் பூசும் கிரீம்கள், நகத்துக்குப் பூசும் நகப்பூச்சு போன்றவை இந்தக் கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது. முகத்திலுள்ள கரும் புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறைத் தினமும் தடவி வர, நல்ல குணம் கிடைக்கும். சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன.
இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியைக் கற்றாழை வழங்குகிறது. நீடித்த மலச்சிக்கலைப் போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டைத் தடுக்கவும், தீராத வயிற்றுப் புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
வறட்சியான சருமம் இருந்தால், அதற்குக் கற்றாழையின் ஜெல்லை முகத்திற்குத் தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மை யாக்கும். குறிப்பாகப் பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்குத் தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும்.