

காலை 5.15 மணியளவில், பால்காரர் ஒவ்வொரு வீடாகப் பால் ஊற்றிக்கொண்டே வருகிறார். பூர்ணத்தின் வீட்டிற்கும் வருகிறார்.
பாலை வாங்க வந்த பூர்ணம், “என்னையா... ஒரு வாரமா வரக் காணோம்...?”
“ஓ...! அதுவா, பூர்ணம்... மாடுகளுக்கு முடியல..! மருந்து வாங்க திருநெல்வேலி வரை ஒரு சோலியா போயிருந்தேன். அதான்...”
“சரிங்கையா... மாட நல்லாப் பார்த்துக்கங்க... நீங்க கொடுக்கற பால்தான் நல்லாருக்கு. இந்தப் பாக்கெட் பாலெல்லாம் மொட்ட தண்ணியா இருக்கு... சுத்தமா நல்லா இல்லே” என்று செம்பில் பாலை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைகிறாள் பூர்ணம்.
சூரியன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க, சேவல் ‘கொக்கரக்கோ...கோ’ என்று கூவுகிறது . முருகன் கோயிலில், 'சஷ்டியை நோக்க சரவண பவனா… சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்..!' - கந்த சஷ்டி கவசம் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு பெண்களும் தங்களின் வீட்டின் முற்றத்தைக் கூட்டித் தெளித்து கோலம் போடுகிறார்கள்.
“என்னடி இவ்வளவு நேரமா? இங்கப் பாரு... மந்தக்காட்டுக்கு வெளியிருக்க போனியா? இல்ல... படுத்துத் தூங்கப் போனியா...? சொல்லு... இப்ப தண்ணி வேற வந்துரும் தெரியும்ல...”
“எம்மா… நிலைமை தெரியாமக் கத்தாதே... எனக்கு இங்க அரிப்பு உசுரு போகுது...!”
“என்னாச்சுடி..?” என்ற பதற்றத்தில் பூர்ணம்.