

எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு இரவு 9.30 மணி அளவில், பூர்ணம் தன் பிள்ளைகளோடு தூங்க ஆரம்பிக்கிறாள்....
சரஸ்வதி சைரன் வைத்தக் காரில் கலெக்டராக வீட்டின்முன் இறங்கும்போது, பூர்ணம் மகிழ்ச்சி பொங்கும் ஆனந்தக் கண்ணீரோடு மகளையே உற்றுப் பார்க்கிறார். சரஸ்வதி தனது அப்பா-அம்மா காலில் விழுகிறாள். பூர்ணமும் மதியழகனும் சரஸ்வதியை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள்.
சற்று நேரத்தில், பூர்ணத்தின் வீட்டைச் சுற்றி ஊரே கூடுகிறது. “சரஸ்வதி கலெக்டர் சரஸ்வதி கலெக்டர், எங்க ஊர் ஐஏஎஸ்” என்று ஒரு சிலர் மகிழ்ச்சியில் கூப்பாடுப் போடுகிறார்கள். அக்கம் பக்கத்தினர்கள் சரஸ்வதியின் கையைப் பிடித்தும், கட்டிப் பிடித்தும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள்.
“நம்ம ஊரோட பெருமைய தூக்கி நிறுத்திட்ட பாரு! நீ நூறு வருஷம் நோய்நொடி இல்லாம நல்லா இருக்கணும் தாயி” என்று ஒரு சில கிழவிகள் சரஸ்வதியைப் பார்த்து சொல்கிறார்கள். தம் மகளை பிறர் பாராட்டுவதை பார்த்து, பூர்ணத்திற்கும் மதியழகனுக்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்ட வார்த்தைகளே இல்லை….!