

அபி, சாமிநாதனின் ஒரே மகள். அபி செல்லமாய் வளர்ந்தாள். அகிலாவுக்கு கவலை எல்லாம் அவளை பற்றி தான். செல்லமாய் வளர்ந்ததால், தான் சொல்வதைக் எல்லாரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள். அடுத்தவங்களை அனுசரிக்கும் பழக்கம் இல்லாமலே வளர்ந்து விட்டாள் என்று கணவனிடம் எப்பொழுதும் இதைக் கூறிக் கொண்டே இருப்பாள் அகிலா.
சாமியும், “கவலைப்படாதே! அவள் புத்திசாலி எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு விடுவாள். அகிலா, நாம் தினமும் காக்கைக்கு உணவு படைக்கிறோமே அப்பொழுது கவனித்திருக்கிறாயா? அந்த காகம் தனது குழந்தைக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து அப்புறம் சாப்பிடுகிறது. காகத்துக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள். அதுதானே பார்த்துதானே கற்றுக் கொண்டது. அதேபோல் தான் அபியும் நம்மை பார்த்துதானே வளர்ந்து இருக்கிறாள். கண்டிப்பாக அவள் அனுசரித்துப் போவாள்,” என்று ஆறுதல் கூறுவான்.
மூன்று பேரும் பெங்களூரில் ஒரு திருமணத்திற்கு சென்றனர். அங்கே அவர்களின் தூரத்து சொந்தம் குமரேசன், ஹேமா, அவர்களது மகன் மனோ மூவரையும் சந்தித்தனர்.