

திரை நடுவில் இடைவேளை என்று எழுத்துக்கள் மின்னின. அடுத்த நொடி திரையரங்கினுள் இருந்த மைய விளக்கு எரிய, பால்கனியில் அமர்ந்திருந்த காசிநாதன் ‘ப்ச்...’ என சலித்தபடியே எழுந்தான்.
கசங்கியிருந்த சட்டையினை கைகளால் இழுத்துவிட்டபடி வெளியே வந்தான். திரையரங்கின் உணவு விடுதி கண்ணில் பட்டது. சுமாரான கூட்டம் அதன் மூக்கில் ஒண்டியிருந்தது. ஓரத்தில் இருந்த சின்ன கண்ணாடிக் கூண்டிற்குள் மக்காச்சோளம் வெப்பம் தாளாமல் வெடித்துக் கொண்டிருந்தது. ஐஸ்க்ரீம் மெசினின் சன்னமான ‘ர்ரூம்..’ ஓசை.
காசிநாதன் அனைத்தையும் சில நொடிகள் வேடிக்கை பார்த்தான்.
ஒரு திரைப்படத்தின் காலைக் காட்சிக்கு இத்தனை கூட்டமா! அப்படியென்ன இந்தப் படத்தில் இருக்கிறது. ஒன்றும் இல்லை. அதே வழக்கமான உப்பு, புளி, கார மசாலாக் கலவை. உணர்ச்சிகரமான சில காட்சிகள், வசனங்கள்... அத்தனை தான்!
ஒரு வேளை என்னைப் போலவே அத்தனை பேரும் அகச் சூழலிருந்து தப்பிக்க வந்திருப்பார்களோ? ஒரு தற்காலிக போதை, நிகழ்கால நிஜவாழ்வு தரும் கசந்த வெறுப்புகளை மறக்க விரும்பி... இங்கே அடைக்கலமாகி இருப்பார்களோ!