

இன்று காலை மீனாட்சி மாமி தெளிவான ஒரு முடிவோடு வந்தாள், அனுஷா வீட்டிற்கு. அங்கு தான் மீனாட்சி மாமி சமையல் வேலை செய்கிறாள். மீனாட்சி மாமியின் கணவர் ஒரு கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்றவர். வீட்டிலேயே சின்ன குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கிறார். ஏதோ வருகின்றது.மாமி நன்றாக சமைப்பாள். வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அதிர்ந்தும், அனாவசியமாகவும் பேச மாட்டாள். வேலையில் அவ்வளவு சுத்தம். பொருட்களை வீணடிக்க மாட்டாள்.
அனுஷாவும், அவள் கணவன் கிருஷ்ணகுமாரும் மாமியை மரியாதையோடு கவனித்துக் கொள்வார்கள்.கிருஷ்ணகுமார் ஒரு பாக்டரியின் ஓனர். நேற்று வீட்டிற்கு கிளம்பும் பொழுது மாமி காதில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது விழுந்தது. ஒட்டுக் கேட்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. தன் வேலையில் கருமமே கண்ணகி இருப்பாள். முன் தினம் அவர்கள் இருவரும் சற்று உரக்க பேசிக் கொண்டிருந்ததாலும், மாமி சமையல் ரூமில் இருந்ததாலும் காதில் விழுந்ததை தவிர்க்க முடியவில்லை.
அவர்கள் உரையாடிய விஷயம் பற்றி கேட்டதும் திக்கென்று இருந்தது மாமிக்கு.ஒரு மாதிரி வீடு திரும்பினாள். வழியெல்லாம் சிந்தித்த படியே சென்றாள். மனம் குழம்பி விட்டது. நிலைமை சரியில்லை. என்ன செய்வது, நடப்பவையெல்லாம் அட்வான்ஸ் நோட்டீஸ் கொடுத்து விட்டா நடக்கின்றன. சென்றதும், கணவனிடம் ஒன்று விடாமல் கூறி விட்டாள். இருவரும் ஆலோசித்தனர். முடிவு எடுக்கப்பட்டது. தெளிவு பிறந்தது.
மறு தினம், (அதாவது இன்று) காலை அனுஷா வீட்டில் மாமி, டிபன் ரெடி செய்து எடுத்துக் கொண்டு வந்தாள் டைனிங் டேபிளுக்கு. கிருஷ்ணகுமார், அனுஷா இருவர் முகங்களும் காட்டி கொடுத்தன அவர்கள் முந்தைய இரவு சரிவர தூங்கவில்லை என்று. சோர்வு தெரிந்தது.புரிந்துக் கொண்ட மாமி, " உங்கள் இருவரிடமும் கொஞ்சம் பேச வேண்டும்..!", என்றாள்.
இருவருக்கும் இது புது அனுபவம். மாமி அப்படி கேட்டதே இல்லை."நீங்கள், கேட்க வேண்டுமா.. தாராளமாக..!", என்றனர் இருவரும். அவர் அப்படி என்ன தான் கூறப் போகிறார் என்ற ஆவல் இருவருக்கும்.. "என் சம்பளம்..", என்று ஆரம்பித்து நிறுத்தினாள் மாமி. உடனே இருவருக்கும் புரிந்தது. வருடா வருடம், இந்த மாதத்தில் சிறிது உயர்த்தி கொடுப்பார்கள். மாமியும் எதுவும் கூறாமல் வாங்கிக் கொள்வாள். இந்த தடவை கொஞ்சம் அதிகம் கேட்கப் போகிறாள். நியாயம் தானே, என்று இருவரும் நினைத்துக் கொண்டனர்.
மாமி கூறியதை கேட்டதும் அதிர்ந்து விட்டனர் இருவரும். ஆடிப் போய் விட்டனர். மாமி கூறியதையும், அதற்கான காரணத்தை சொன்னதும் இருவருக்கும் ஒன்றும் சொல்ல தெரியவில்லை.மாமி கூறினாள், " எங்க வீட்டு மாமாவுடன் கலந்து ஆலோசித்தும் விட்டேன். அவருக்கும் இதில் பூரண சம்மதம். தயவு செய்து மறுக்க வேண்டாம்..!", என்று கூறி விட்டு சமையலறைக்கு சென்றாள் தனது வேலையை கவனிக்க.ஏற்பட்ட ஷாக்கிலிருந்து மீண்ட கிருஷ்ணகுமார், அனுஷா தம்பதியினர் இருவரும் தங்கள் ரூமிற்குள் சென்று டிஸ்கஸ் செய்து, முடிவுக்கு வந்தனர். மாமியை அழைத்து உட்கார சொன்னார்கள். "நின்று கொண்டே கேட்கிறேன்..!", என்றாள்.
அனுஷா,ஒரு வழியாக மாமியை சோபாவில் அமர செய்தாள். பக்கத்தில் அவள் அமர்ந்துக் கொண்டாள். எதிர் சோபாவில் கிருஷ்ணகுமார் உட்கார்ந்துக் கொண்டான். மாமியிடம், "ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தீர்கள்..!", என்று கேட்கப்பட்டது. சூது, வாது தெரியாத மாமி நடந்தவற்றை அப்படியே கூறினாள், ஒன்று விடாமல்.கூடவே, "நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்டர் சரியில்லாததால் பாக்டரியில் ஆள் குறைக்க வேண்டி இருக்குமோ என்று கூறிக் கொண்டு இருந்தீர்கள்.
உங்களுக்கு என்னால் பாரம் அதிகரிக்க கூடாது என்றுதான் இந்த முடிவுக்கு நானும், அவரும் வந்தோம். தயவு செய்து மறுக்காதீர்கள்..!", என்றாள் மீனாட்சி மாமி. இதைக் கேட்டதும் இருவரும் பிடி கொடுக்காமல், இப்பொழுது போய் வேலையை கவனியுங்கள், என்றனர்.மதிய உணவு தயார் செய்தாள் மாமி. இருவருக்கும் பரிமாறினாள். வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்.
அனுஷா, மாமியிடம் ஒரு கவரை கொடுத்தாள்.மாமி, "என்ன இது..!", என்றாள். "உங்களுக்கு தான் பிரித்துப் பாருங்கள்..!", என்றாள் அனுஷா.பிரித்து பார்த்த மாமிக்கு தூக்கி வாரிப் போட்டது. உள்ளே கணிசமான ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. மாமி எடுத்துக் கொள்ள மறுத்தாள். அனுஷா,'தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். நேற்று நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது இருந்த நிலைமை வேறு. நீங்கள் சென்றதும் வந்த போன்கால் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. வராது என்ற நிலையில் இருந்த பெரிய ஆர்டர் முடிவு செய்யப்பட்டு, ஐம்பது சதவீதம் அட்வான்ஸ் பணமும் வங்கி கணக்கில் வந்து விட்டது.
இரவு முழுவதும் இருவரும் வேலையில் ஈடுபட்டிருந்ததால் சரியாக தூங்க வில்லை..!", என்று விளக்கி கூறினாள்.கண்களில் நீருடன், அனுஷா கூறினாள், " மாமி! உங்களை போன்ற நல்ல உள்ளங்களுடன் பழக வழி வகுத்த அந்த ஆண்டவனுக்கு எங்கள் நன்றி. உங்கள் பெண் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா. தாய், தந்தை, மாமியார், மாமனார் இல்லாத எங்களுக்கு நீங்களும், மாமாவும் பெற்றோர் போல் காட்சி அளிக்கிறீர்கள்..!", என்று சென்டி மெண்டலாக டச் செய்தாள்.
'என் சம்பளத்திலிருந்து ரூ 400 குறைத்து கொடுங்கள்' என்று நீங்கள் சொன்னது எங்கள் மனதை உறுக்கிவிட்டது. இது போன்ற தியாக உள்ளம் கொண்டவர்களை பார்ப்பதே அரிது..!", என்று மனம் உருகி சொன்னாள் அனுஷா.வேறு வழியில்லாமல் அவர்கள் அன்புடன் கொடுத்த பணத்துடன் வீடு நோக்கி சென்றாள் மீனாட்சி மாமி.