

மடக்கு கட்டிலில் தலைக்கு இரு தலையணைகளுடன் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்த சம்பந்தம், மின்விளக்கைப் பார்த்தபடியே இருந்தார். மணி இரவு பதினொன்று ஆகியும் அவர் தூங்கவில்லை.
தண்ணீர் எடுக்க அடுப்படிக்கு வந்த கௌரி, அப்பாவின் அறையில் ஏன் இன்னும் வெளிச்சமாக இருக்கு எனப் பார்த்தாள். அப்பத்தான் அவர் இன்னும் தூங்கல எனத் தெரியவந்தது.
“அப்பா, ஏம்பா இன்னும் தூங்காம இருக்கீங்க? மணி எவ்வளவு தெரியுமா?” என்றாள்.
பதில் ஏதும் வரவில்லை சம்பந்தத்திடமிருந்து.
“ஏம்பா, நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்ல! காதுல விழலையா? அப்பா?” என்றாள்.
மெதுவாகத் தன் தலையைத் திருப்பினார் சம்பந்தம். “யாரு, கௌரியா?” என்றார்.
“ஆமாம்ப்பா, ஏன் இன்னும் முழிச்சிருக்கீங்க? தூக்கம் வரலையா?”
“இல்லம்மா, தூக்கம் வர மாட்டேங்குது. என்ன செய்யச் சொல்லுற?”
“ஏம்பா, விளக்கை அணைச்சாதானே தூக்கம் வரும்? நீங்க ராத்திரி முழுக்க விளக்கை எரியவிட்டா எப்படித் தூக்கம் வரும்?நான் வேணும்னா விளக்கை அணைச்சிடட்டும்மா?”
"இல்லம்மா கௌரி, இருக்கட்டும். நான் தேவைப்படும்போது விளக்கை அணைச்சுக்கிறேன்.”
“சரிப்பா, எனக்கு நாளைக்குக் கொஞ்சம் சீக்கிரமே கம்பெனிக்குப் போக வேண்டும். அங்கே முக்கியமான மீட்டிங் இருக்கு.”