கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!

கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!

"டமடமடமன்னு... எப்ப பாரு இந்த மோட்டார் சத்தம். ராத்திரி இல்ல பகல்னு இல்ல ... எப்பப் பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்கு இதனால ஒரே தொந்தரவுதான். என்னிக்கு அல்ப ஆயுசுல அது போகப் போகுதோ " நான் சொல்லி வாயை மூடலை "டப் " என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று விட்டது.

"போச்சு போங்க... வாயை வச்சுட்டு சும்மா இருக்க கூடாதா... காலையில வர்ற தண்ணியும் வராது, " என்றாள் மாலா என் தர்மபத்தினி.

"ஆமா.... இல்லைன்னா நயாகரா பால்ஸ் மாதிரி கொட்டிடும். பைப்புக்கு அடியில பக்கெட்ட வச்சுட்டு ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு வந்தாலும் ரொம்பி இருக்காது. இதுக்கு கரண்டு பில்லு ஒரு தெண்டம்."

"நாம என்ன பண்றது? புரோக்கர் கருணாகரன்  பணத்துக்கு ஆசைப்பட்டு நம்மளை ஏமாத்தி இந்த ஃப்ளாட்டை நம்ம தலையில கட்டிட்டான். தண்ணி சும்மா அருவி மாதிரி கொட்டும்ன்னான். குருவி குளிக்கற அளவு கூட தண்ணி வரல" என்றாள்.

"பழச பேசி என்ன ஆகப் போவுது. இப்போ மோட்டார் நின்னதுக்கு என்ன பண்ணலாம் அத சொல்லு. சுந்தருக்கு போன் பண்ணி மோட்டர் நின்னு போன விஷயத்த சொல்லவா?" என்றேன்.

"உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல? ஏற்கனவே இந்த ஃப்ளாட்ட எல்லோரும் ஒத்துமையா இருந்து நம்மள மட்டும் கட்டம் கட்டி வச்சுருக்காங்க. இதுல நீங்க போன் பண்ணி மோட்டார் ரிப்பேர்ன்னு சொன்னா ரிப்பேருக்கு  காரணம் பாலு தான்னு அனாவசியமா உங்க பேர்  அடிபடும். பேசாமா படுத்துத் தூங்குங்க . இன்னிக்காவது மோட்டார் சத்தம் இல்லாம நிம்மதியா தூங்கலாம்"

-சொல்லிவிட்டு மாலா தூங்கி விட்டாள். எனக்குத் தான் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். " ராத்திரி ஆனா மோட்டர் சத்தம் காலைல ஆனா தண்ணி ப்ராப்ளம் ச்சே.i பொழுது விடிஞ்சதும் ஆபீஸ் போகணுமே தண்ணி வரலைனா எப்படி ஆபிஸ் போறது? கொஞ்சம் கவலை தொற்றி கொண்டது. ஏன் மோட்டார் பாதியிலேயே நின்னுடுச்சு? மோட்டார் காயில் எரிஞ்சு இருக்குமா?  அப்படியே காயில் எரிஞ்சு வயர்ல தீ பிடித்து ஃபயர் ஆனா   முதல்ல இங்கதான் பத்திக்கும். என்ன பண்றது? எழுந்து போய் பார்க்கலாமா?  ஈ.பி. போர்டுல ஏகப்பட்ட கனெக்ஷன் இருக்குமே எதுன்னு எனக்கு தெரியாதே." இப்படி பல குழப்பத்தில் இருந்தேன்.

திடீர்னு ஏதோ புகைவது போல் வாசனை. எழுந்து உட்காந்தேன். மணியை பார்த்தேன்.மணி பனிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது. மாலாவின் குரட்டை ஒலி  பியானோ வாசிப்பது போல் இருந்தது. இவளை எழுப்பலாமா? யோசித்தேன். வேண்டாம், ஏதாவது சொல்லுவாள்..

கட்டிலை விட்டு மெல்ல கீழிறங்கி வெளியே வந்தேன். ஈ.பி ஜங்ஷன் போர்ட் அருகில் வந்து அதன் கதவை திறந்து எல்லா கனெக்ஷனையும் பார்த்தேன். மினுக்மினுக் என்று பச்சை நிறத்தில் மினுக்கி கொண்டிருந்த அனைத்து மீட்டர் பாக்ஸையும் பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தது போல தோன்றியது. ஒவ்வொரு மீட்டர் பாக்ஸின் அடியிலும் AI, A2 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  A4 எங்க வீட்டு மீட்டரை பார்த்தேன். 4195 என்று காட்டியது. அந்த அர்த்த ராத்திரியில் ஒரு நிமிடம் நெஞ்சு "பக்"  என்று ஆனது. பழைய படி கதவை மூடிவிட்டு திரும்பி வந்து பெட்டில் படுத்து ஏசியை ஆப் பண்ணி ஃபேனை போட்ட விநாடி மாலா தூக்கம் கலைந்து திரும்பி படுத்தாள்.

"தூங்குங்க மெயிண்டனன்ஸ் ல பாத்துப்பாங்க." தூக்கத்திலும் தெளிவாக பேசினாள்.

இப்போ எனக்கு மோட்டார் கவலை போய்  ஈ.பி. பில் கவலை வந்தது.

"இன்னும் எண்ணி பதினைந்து நாள் கூட ஆகலை. அதற்குள் இவ்வளவு ரூபாய் ஆகி இருக்கே? பணத்துக்கு எங்கே போறது? என்ன பண்ணலாம்? யோசித்து கொண்டு எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

------------

மறுபடியும் "டுர்ர்....." என்று மோட்டார் சத்தம் கேட்டதும் தான் கண் விழித்தேன்.

"என்ன மாலா .. மோட்டர் ஓடுது. அதுக்குள்ள ரிப்பேர் பண்ணியாச்சா? என்றேன்.

" ரிப்பேர் ஆனா தானே பாக்குறதுக்கு , இனிமே நைட்ல மோட்டார் ஓட்ட வேண்டாம்ன்னு மெயின்டனன்ஸ் ல முடிவு பண்ணி சுந்தர் தான் நேத்து ராத்திரி  மோட்டாரை அணைச்சுட்டு போயிருக்காரு. "

"ஏன் நம்மகிட்ட சொல்லல?"

"சொன்னாரு நான்தான் மறந்துட்டேன். ஹி... ஹி " என்றாள்.

அவளை  முறைத்தேன். அவ்வளவுதான் என் எதிர்ப்பை காட்ட முடியும். "ஏம்மா.... சொல்ல கூடாதா? சரி இப்போ  ஒரு ப்ராப்ளம் ஓவர்.  ரெண்டாவது ஒன்னு இருக்கே" என்றேன்.

"ரெண்டாவது என்ன?"

"நம்ம மீட்டர் பாக்ஸ் 4195 ரூபாய்னு காட்டுது அதுக்குள்ளேயா இவ்வளவு வரும்?"

"நல்லா பாத்திங்களா அது நம்ம மீட்டர் பாக்ஸா "

"நம்பலைன்னா நீயே பாரு .. " எழுந்து சென்று  A4 மீட்டர் பாக்ஸை காட்டினேன்.

"A4 அதுதான் ஆனா மீட்டர் பாக்ஸ் அது இல்லை இது "என்று கீழே உள்ள பாக்ஸை காட்டினாள் .

கொஞ்சம் அசடு வழிந்தபடி "எல்லாம் தலையில எழுதியிருக்கா..." என்றபடி உள்ளே வந்தேன்.  டீ.வி ஓடிக் கொண்டிருந்தது.  "மீன ராசி நேயர்களே ... உங்களுக்கு மலைபோல் வந்த கவலை எல்லாம் பனிபோல் விலகிடும்" என்று சொல்லி கொண்டிருந்தான்.

சில சமயம் ஜோஸியம் பொய்க்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com