பாரதியார்!
ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனை
தமிழ்ப் பாவால்
மிரட்டி வெளுத்த
கருப்பு மீசைக்காரன்!
-------------------------------------------------------------------------
புது கல்வி ஆண்டு!
எல்லா குழந்தைகளும்
தேர்ச்சி பெற்றனர்
கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!
-------------------------------------------------------------------------
திவசம்!
பத்தி புகையும்
அப்பாவின் புகைப்படத்தின் முன்
உணவு படைக்கப்பட்டது!
தினமும் விரட்டப்படும்
பிச்சைக்காரனுக்கு
இன்று சிவப்பு கம்பள வரவேற்பு!
-------------------------------------------------------------------------
சுழற்சி!
சூரியனின் காந்த பார்வையில்
மோகம் கொண்டு மயங்கியது கடல்!
கருமேகக் குழந்தை உருவாகிறது!
கடல் பால் கொண்ட
காதல் தோல்வியால்
கோபமானது பெருங்காற்று!
மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!
மிரண்டு போன கார்மேகம்
அழுது தீர்க்க நதி உருவாகிறது!
தன் குழந்தையை
அணைத்து
அடைக்கலம் கொடுக்கிறது கடல்!
-------------------------------------------------------------------------
விவசாயி குடும்பம்!
விதை நெல்லை மட்டும்
விட்டு சென்ற அப்பாவுக்கு
வாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!
வங்கியால் வீடு பூட்டி
சீல் வைக்கப்பட்டு
நடுத்தெருவில் நிற்கிற
விவசாயி குடும்பம்!