வஞ்சகம் இல்லா உலகம் கேட்டேன்,
வறுமை தொலைந்திட, வழியைக்கேட்டேன்,
கலப்படமில்லா உணவிணைக் கேட்டேன்!
நச்சுப்பாம்பாய், நகரும் மனிதன்
மனமும் உடனே மாறிடக்கேட்டேன்!
சகோதர உணர்வு மலர்ந்திடக் கேட்டேன் !
சத்தியம் தவறா மனிதம் கேட்டேன்!
மனித நேயமே மரித்திடா உலகை
விழிமேல் வைத்து வருமெனக் கேட்டேன்!
பாலியல் தொல்லை விலகிடக் கேட்டேன் !
ஏழை பணக்காரன் மாற்றம் கேட்டேன்,
ஜாதி துவேஷம் அழிந்திடக் கேட்டேன்
மாமியாா்- மருமகள் ஒற்றுமை கேட்டேன்
லஞ்ச லாவண்யம் ஒழித்திடக் கேட்டேன்,
வரதட்சணை விலகிடக் கேட்டேன்
கணவன் மனைவி ஒற்றுமை கேட்டேன்!
சகோதர உணர்வு மேலோங்கக் கேட்டேன்!
கிராமங்கள் தோறும் முன்னேற்றம் கேட்டேன்!
இலவச மாயை அழித்திடக் கேட்டேன்!
ஓட்டுக்கு துட்டு விலக்கிடக் கேட்டேன்
நீதி தவறா ஆட்சியைக் கேட்டேன்!
நோ்மை தவறா மன்னவன் கேட்டேன்!
ஆண்டான் அடிமை அழித்திடக்கேட்டேன் !
அச்சம் இல்லா வாழ்வினைக்கேட்டேன்!
ஆரோக்கியமான உடல் வளம் கேட்டேன்!
நெஞ்சில் உரமாய் வாழ்ந்திடக் கேட்டேன்!
நஞ்சு கலவாத நண்பன் கேட்டேன்!
மூடநம்பிக்கை அகற்றிடக் கேட்டேன்!
ஆன்மிக பூமி அமைந்திடக் கேட்டேன்!
பெண்ணின் விடுதலை பேசிடக் கேட்டேன்,
பேசியபடியே அமைந்திடக் கேட்டேன்!
முதியோா் இல்லம் குறைந்திடக் கேட்டேன்!
பெற்றோா் நலனை பேணிடக் கேட்டேன்!
வரவுக்கேற்ற செலவினம் கேட்டேன் !
போட்டி பொறாமை விலகிடக் கேட்டேன்!
அன்பாய் அனைவரும் வாழ்ந்திடக் கேட்டேன் !
வறுமை போக்கிட வேலை கேட்டேன் !
எட்டு திக்கிலும் நோ்மறை கேட்டேன்!
அன்பே அகலாய் மனைவியைக் கேட்டேன்!
தோளுக்குயர்ந்த பிள்ளையை கேட்டேன்
என் சுமை நீக்கிட உதவி கேட்டேன்!
கடனே இல்லா வாழ்வினைக் கேட்டேன் !
சமூக ஒற்றுமை மலர்ந்திடக் கேட்டேன்!
சந்தர்ப்பவாதம் தொலைந்திடக் கேட்டேன் !
விலைவாசிதனை குறைத்திடக் கேட்டேன்!
அரசியல் பாதையில் ஒற்றுமை கேட்டேன்!
படிப்புக்கேற்ற வேலை கேட்டேன்
நலிந்தோா் நலனில் அக்கறை கேட்டேன்,
மாதா, பிதாவை மதித்திடக்கேட்டேன்!
குருவின் மேன்மை உணரவே கேட்டேன்!
தெய்வத்திடமே நன்மை கேட்டேன்!
தர்ம தேவதை செயலைக் கேட்டேன்!
ஏற்றம் தந்திடும் வாழ்வே கேட்டேன்!
இப்படி இப்படி நிறையவே கேட்டேன்!
எதுவும் இங்கே கிடைக்கவில்லை,
எப்போது கிடைக்கும் தெரியவில்லை!
வெறுத்த நிலையில் ம....ர....ண....ம்....கேட்டேன்
அதுவும் இல்லை மௌனம் காத்தேன்!