
- நிவேதிதா
பட்டிணம்தான் வந்து நானும் பத்து
வருஷம் ஆகிப்போச்சே!_ ஆனா
பாழாப்போன மனசு மட்டும்
பட்டிக்காட்ட தேடிப் போச்சே!
கேப்பங்கூழு ருசிக்கு ஏங்கி என்
நாக்கு செத்துப் போச்சே!_ திண்ண
கத நூறு கேக்க பலமைலு
தூரம் இதோ பயணமாச்சே!
வயக்காடு கடக்கையிலே ஏறு
மாடும் காணலையே!_ டிராக்டர்
வண்டி பாக்கையில சீவனில்லா
தொழிற்சால போல தோணுதலே!
ஆத்தோரம் போகையில தம்பட்டம்
தண்ணிகுடமும் காணலையே!_ குப்பகுளம்
பன்னிக்கூட்டம் பாக்கையில
உசுரே நின்னு போகுதலே!
மஞ்சதாவணி மல்லி மணமும்
மனச விட்டு நீங்கலேயே!_ சுடிதாரு
நயிட்டி பண்ணும் அட்டகாசம்
ரத்த கொதிப்பு கூடுதலே !
வீரனாரு கதசொல்ல அப்பத்தா
திண்ண பக்கம் காணலயே!_ அவுகக்கூட
மர்மதேசம் தேடி அந்த பெட்டி
முன்ன தவமா கெடக்குதலே!
எதஎதயோ தேடி நானும்
ஊருபக்கம் வந்தேனலே! கொட்டிகிடந்த
அம்புட்டு அழகயும் பாழாப்போன
நாகரீகம் களவாடி போனதுலே!
இக்கவிதை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்