கவிதை: பெண் பூக்கள்!

Lifestyle Kavithai...
kavithai...Image credit - pixabay
Published on

செயற்கை வனமான

சிறுவர் பூங்காவில்...

தாய்மையின் உருவாக

பசுமை படர்ந்த

பன்முக செடிகளில்  

பூக்களின் பிரசவம்.!

 

பூங்காவெங்கும்

வண்ணப்பூக்கள்

வெள்ளந்தியாக

புன்னகைக்கின்றன.!

 

பூக்கள் பருவம் எய்திய

செய்தியறிந்து...

பரபரப்பாக முற்றுகையிடும்

பட்டுடுத்திய பட்டாம் பூச்சிகள்.!

 

திட்டமிட்டு சுற்றி வளைத்து

தேனைக் குடிக்க வட்டமிடுகிறது

விடலை தேனீ கூட்டம்.!

 

செடிகளெனும் தாய் வீட்டினில்

சூடான வெயிலோடு விளையாடி,

சில்லென்ற மழையினில் குளித்து,

மேனி வருடி செல்லும்

காற்றோடு கதைத்து,

சுகித்திருகின்ற 

சந்தோஷ காலங்கள்...

 

வாழ்வின் விதிப்படி

வயது வந்த பின்னே

வேறிடதில் வாழச் செல்லும் 

இளம் பெண்கள் போல...

இனி இந்த பூக்களுக்கும்

வாய்த்திடாதோ!?

 

பருவம் வந்த பெண்டிருக்கும்

பறித்த பூக்களுக்கும்

பன்னெடுங்காலமாக

ஆசிர்வதிக்கப்பட்ட

வாழ்க்கை முறை அதுதானே!

 

பூக்களும் பெண்களைப்போல

யார் கழுத்துக்கு

மாலையாகுமோ.?!

யார் வீட்டுக்கு

வாக்கப்படுமோ.?!     

யாரறிவாரோ?!

யார் பறித்தாலும்,

பார்த்து ரசித்தாலும்

வாழும் காலம் வரையிலும்,

வாடிப்போகும் வரையிலும்

அவை (அவர்கள்)

புன்னகை மாறாமல்

வாசனையுடன்

வாழ்ந்து விட

வாய்ப்பு கொடுங்கள்.!

 

அன்போடு அரவணைத்து

அணிந்து மகிழுங்கள்.

ஆனந்தம் சேரட்டும் 

அவர்தம் வாழ்வினில்.!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com