
அஃறினண அறிவு
சண்டை போட்டு
எங்களிடம் பேச மறுக்கும்
பக்கத்து வீட்டுக்காரரின்
மரம் எங்கள் வீட்டில்
பூக்கள் தூவுகிறது.
அறியாமை
கோயில் மரங்களில்
ஆடும் சிறு மரத் தொட்டில்கள்
அறிவதில்லை!
குழந்தையுடன் ஆடும்
அனாதை ஆசிரம
தொட்டில்களை!
முன்பே
ஞாயிறு
முழு ஊரடங்கால்
சனிக்கிழமையே
மரணம்
வந்துவிடுகிறது!
பிராய்லர் கோழிக்கு
பிரசாதம்
குழந்தைகள்
சாப்பிடும்போது
சிந்தும் பால்சோற்று
பருக்கைகள்
பிரசாதமாகிவிடுகிறது
எறும்புகளுக்கு!
சூதாட்டம்
நவீன சகுனிகள்
தன்னைத் தானே
தோற்கடித்துக் கொள்கிறார்கள்
ஆன் லைன்
ரம்மி விளையாடி...!
குழந்தை
ஒரு கரை அன்னையாக
மறுக் கரை தந்தையாக
நடுவில் நடை போடுகிறது
நதிக்குழந்தை!
- நிலா,