கவிதை - விடையைத் தேடி?

கவிதை...
கவிதை...mangaloretoday.com

விடியல் பொழுது
கடுகு தாளிப்பிலும்
அடுக்களை
சப்தங்களிலும்
முடிந்து விடுகின்றது

பூக்களை ரசிக்க
பறவைகளை பார்க்க நேரம் எங்கே?

அடித்துப் பிடித்து
காலை கடன்கள் முடித்து
கணவரின்
காதல் முகம் பார்க்க
குழந்தையின்
பிஞ்சு விரல்
பிடித்து கொஞ்ச
நேரம் எங்கே ?

அள்ளித் தெளித்த
கோலமும்
அவசர கதியுமாய்
கண்ணாடி அற்ற
அலங்காரம்
தன் அழகை ரசிக்க
நேரம் எங்கே?

சிந்தித்து முடிப்பதற்குள்
சில்லறை நினைவுகள்
சிந்தை விட்டு
செல்கின்றன
மறதியை தொலைக்கும்
நேரம் எங்கே?

பேருந்து பயணத்தில்
ஒலி நாடா இசைக்கும்...
மனம் லயிக்கும்
பொழுதுகளில்
அடுப்பங்கரை
இத்யாதிகள்
வந்து செல்லும்
ரசிக்கின்ற
மனம் எங்கே?

ஒரு வழியாய்
பள்ளி வந்து
சேர்ந்த பின்பு
பிஞ்சுகளின்
எண்ணம் கொன்று
அகர வரிசையில்
ஆழ்ந்து விடும்
நிலமையிலே
நிதர்சன வாழ்வு
எங்கே?

மீண்டும் வாடி
விட்ட மலராய்
வீடு வந்து சேர்ந்த
பின்பும்
தேனீர் கோப்பையுடன்
ஆழ்ந்த நினைவுகளில்
புதுமை எங்கே?

இதையும் படியுங்கள்:
அணிவதற்கு சுகமான மொடால் ரக ஆடைகள் பற்றித் தெரியுமா?
கவிதை...

மீண்டும் மீண்டும்
அதே அடுக்களை
நினைவுகளும்
பாத்திர சப்தங்களும்
இரைச்சல் ஆக..
விடுதலை எங்கே?

நமக்கென ஒரு
ரசனை
நமக்கென ஒரு
காதல்
நமக்கென ஒரு
தேனீர்
நமக்கென ஒரு
இசை
நமக்கென ஒரு
தருணம்

பெண்மை போற்றும்
சமூகம் எங்கே?
தேடித்தான் பார்க்கின்றேன்...
சில காலமாய்
நானும்.


--நவீன பெண்
ம. காயத்ரி அன்னபூரணி -

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com