
இதுவரை
உன்னை முந்திப்போக
நினைத்ததில்லை!
இப்போதெல்லாம்
மூன்றுகால் போட்டியிலும்
நீயேதான் முதலிடம் பிடிக்கிறாய்!
எண்பது வயதிலும்
எனக்கு எதுவும்
தெரியாதென்றே நம்புகிறாய்
நீ இல்லா விட்டால்
எனக்கு வாழத் தெரியாது
என்றும் புலம்புகிறாய்.
உண்மைதான்...
நான் கட்டியிருக்கும்
கந்தல் வேட்டியைக் கூட
நீதான் கசக்கி பிழிகிறாய்
நான் குடிக்கும் கஞ்சிக்கு கூட
உப்பு போதுமா போதா தா
என்று நீதான் முடிவு செய்கிறாய்.
எனக்கு எதுவும் தெரியாதென
சொல்லுவதில் தான்
உனக்கு மகிழ்ச்சி.
அதுவும் எனக்குத் தெரியும்.
அதனால்தான் நான்
எதுவும் தெரியாதவனாகவே
இருக்க விரும்புகிறேன்!
ஆனாலும்...
முதுமையில்
உறவுகளோடு ஒன்றி வாழ
கிழவிகளால் முடியும்.
கிழவர்களால் முடியாது என்கிறார்களே...
அது உண்மையாய் தெரிவதால்.
இப்போதெல்லாம்
எப்படியும் உன்னை
முந்திவிட வேண்டும்
என்றே நினைக்கிறேன்.
நீ இருந்து நான் போனால்
எனக்கு அது சொர்க்கம்!
நீ போய் நான் இருந்தால்
அதுதான் எனக்கு நரகம்!
அதனால்
நான் முந்திப் போக
தாயே அனுமதி கொடு.
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு