‘கழிவுகளைத் தர்மமாக்குவோம்!’ – எப்படி?

உரங்களாக...
உரங்களாக...
Published on

-நா.பா.மீரா

'கழிவு' என்பது சொல்லளவில் தரம் குறைந்ததாகத் தெரிந்தாலும், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற நிலைகளில் இருந்து பார்க்கும்போது, "கழிவு' வாழ்வாதாரத்தின் முக்கிய அங்கம் தாங்கிய ஒன்று என்பது புலப்படும்.

தனக்கென்று பிரத்யேகமான மணம் இல்லாத நார், அதில் தொடுக்கப்பட்ட பூக்களுடன் பிணைந்து நறுமணம் பெறுகிறதே அதுபோலத்தான்... 'மேலாண்மை' என்ற சொல்லுடன் இணையும்போது 'கழிவு' என்ற சொல்லும் தனித்துவம் பெறுகிறது.

கழிவுநீர் குடிநீராகவும், கழிவுப்பொருட்கள் உரங்களாகவும் சிறந்த மேலாண்மையால் உருமாற்றம் அடைகின்றன.

சரியாகப் பயன்பட வேண்டிய பொருள் வீணடிக்கப் படாமல், காக்கப்படுவதும் கழிவு மேலாண்மையின் அடித்தளம்தான்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...' தேவைக்கு அதிகமாகப் பொருட்களைச் சேர்ப்பதும், காலாவதியான வுடன் அவற்றைக் குப்பைத்தொட்டியில் எறிவதும் பொழுதுபோக்காகவே மாறிவிட்ட சுற்றுச்சூழலில் நாம் வாழ்கிறோம் என்ற நினைப்பே மனத்தை அரிக்கிறது.

காலாவதியான பொருட்களைச் சரியாகக் கண்டெடுத்து அப்புறப்படுத்தத் தெரிந்த நமக்கு, உரிய காலத்திற்குள் அதை உபயோகித்து முடிப்பது மட்டும் ஏன் தெரியவில்லை?

பொருட்களைத் தேவைக்கு என்ற உணர்வுடன் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்... ஆசைக்கு வாங்கிக் குவித்தால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற கதைதான்.

கழிவு மேலாண்மை ' என்ற பன்முக நோக்கம்கொண்ட சொல் உண்மையில் வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பெரிய வாழ்வாதார வசதிகள் இல்லாத சூழ்நிலையில் தேவைக்கு மட்டுமே பொருட்கள் வாங்கும் நிலை, சமையல் பண்டங்களில் வண்டு, புழு, பூச்சி இருந்தால் சலித்துக் காயவைத்து அவற்றை அகற்றி உபயோகிப்பர். ஊறுகாய் போன்ற பண்டங்களில் சளித்த வாடை வந்தால் வெயிலில் பரத்திக் காய வைத்துச் சாப்படுவர்.

ஆனால் இன்றோ... வாங்கி வைத்த புதிதில் சரியாகத் தேவையறிந்து உபயோகிப்பதில்லை. சிறு மாறுபாடுகள் தோன்றினாலும் தீர்வுகள் தேடாமல் குப்பைத்தொட்டியில் கொட்டி விடுவது...

உரங்களாக...
உரங்களாக...Image credit - hindu

பொருளாதாரச் சூழ்நிலையும், பாதுகாப்பு வசதிகளும் குறைவாக இருந்த காலக்கட்டத்தில் தெரிந்த பண்டங்களின் மகத்துவம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறதே ஏன்?

பணவீக்கம் காரணமா? இல்லை அதன் மதிப்பிழப்பா...?

தொழில்நுட்பப்புரட்சி என்னவோ நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது... ஆனால், நுகர்வோர் சிலரின் அலட்சியப் போக்கும், பொருட்களைப் பதப்படுத்தும் சிறு அறிவியல்கூட உணராத தன்மையுமே முக்கியக் காரணிகள்...

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், காற்றடைத்த பையிலிருந்த, பிரித்த நிலையில் உள்ள சில பொருட்களில் வண்டும்,  சில மட்கிப்போகும் சூழ்நிலையும் வரலாம்.

எப்படித் தடுப்பது?

சலித்துக் காயவைத்து உடனே உபயோகப்படுத்தலாம். அளவு அதிகம் இருந்து சற்றே அதிக நாட்களுக்கு வருமெனின் குளிரூட்டியில் பத்திரப்படுத்தலாம்...

இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் சிலர் வீணடித்தாவது பொருட்களைத் தூரக் கொட்டுவரே தவிர அதை உரிய காலநேரத்தில் அடுத்தவருக்குக் கொடுக்க விரும்பமாட்டார்கள்.

இன்றும் அநியாயத்துக்குச் சிலர், வீணாகிய நிலையில் பொருட்களை அடுத்தவருக்குத் தரும் அவலமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

தேவையின் சரியான இலக்கணம் என்ன தெரியுமா? நாம் தேவையில்லை என்று கருதும் பொருள் மற்றொருவரின் அத்தியாவசியத் தேவையாயிருக்கும் என்ற நிலையில் அப்பொருட்கள் உரிய நேரத்தில் தேவையானவரைச் சென்றடைந்தால் அதுவல்லவோ வாழ்வின் பொன்னான தருணம்.

ஆக, உணவுப்பொருட்கள் தொடங்கி, உடுத்தும் உடை வரை அடுத்தவர் தேவையறிந்துப் பகிரப்பட்டால் அதுவும் சிறந்த கழிவு மேலாண்மைதானே!

உரிய முறையில் சேமிக்கப்படாமல் வீணே அழியு வாழ்வாதாரங்களான நீர், பணம் மற்றும் குப்பைத் தொட்டியில் தூக்கிக் கொட்டும் உணவுப்பொருட்கள், இவற்றின் அருமை அவற்றை மொத்தமாக இழந்து ஏங்கித் தவிக்கும்போதுதான் தெரியுமோ? அதனால் யாதொரு பலனுமில்லை.

நித்தமொரு கோயில்

நாடி வேண்டும்

வாழ்வின் அட்சயம்

யாவும் தன்னிடமே

பக்தன் உணர்ந்தால்

ஒளிமயமான வாழ்வு

நிச்சயமே!

உங்கள் தேவை போக எஞ்சும் யாவும் கழிவுதான். ஆனால், அக்கழிவுகளை உரிய வகையில் பகிர்ந்து தர்மமாக்குங்கள். கழிவுகள் தர்மமாகும்போது கிடைக்கும் மனநிறைவுக்கும், களிப்புக்கும் ஈடு இணையே கிடையாது.

பொருட்கள் வீணாவது குறையும் கிரகங்களிலும், கிரகத்தில் வாழும் மனிதர்களின் மனங்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பதில் ஐயமே இல்லை.

அங்கே எல்லா நாட்களுமே அட்சய திருதியைதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com