கோவிலில் பிரதக்ஷிணம் செய்வதன் பின் உள்ள ரகசியம் என்ன?

கோவிலில் பிரதக்ஷிணம் செய்வதன் பின் உள்ள ரகசியம் என்ன?

-ராஜி ரகுநாதன்

வீட்டில் பூஜை முடிந்த பின் ஆத்ம பிரதக்ஷிணம் செய்கிறோம். தன்னைச் தானே வலப் புறமாக சுற்றி வருவது ஆத்ம பிரதக்ஷிணம்.

கோவிலுக்குச் சென்று தெய்வ தரிசனத்திற்கு முன்பாக கோவிலையும் சந்நிதிகளையும் பிரதக்ஷிணம் செய்கிறோம். சாதாரணமாக மூன்று முறை கோவிலில் பிரதக்ஷிணம் செய்வதும் அதன் பிறகு தெய்வ  தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம்.  நமஸ்கார முத்திரையில் கோவிலைச் சுற்றி வருவது பிரதக்ஷிணம் எனப்படுகிறது. 

பிரதக்ஷணம் என்று கூறுவது தவறு. பிரதக்ஷிணம் என்றே கூற வேண்டும். 

 'தக்ஷிண ஹஸ்தம்' என்றால் வலதுகை  என்று பொருள். 'ப்ரதக்ஷிணம்' என்றால் வலது பக்கமாக நகர்வது என்று பொருள். நேராகச் செல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே நகர்ந்தால் அது வட்டமாக அமைகிறது. வலது பக்கம் மட்டுமே நகர்ந்தால் அதுவே பிரதக்ஷிணமாகிறது.

இதன் பின்னல் உள்ள ரகசியம் என்ன? இவ்வாறு செய்ய வேண்டிய தேவை என்ன?

நிலையாக உள்ள பொருளில் சக்தி உள்ளூர உறங்கிக் கொண்டிருக்கும். அசைவதால் அது சலன சக்தியாக வெளிப்படும். வட்டமாகச்  சுற்றி வருவதால் அந்தப் பொருள் சக்தி மிகுந்ததாகிறது.. 

குழந்தைகள் விளையாடும் பம்பரத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அது அசையாமல் கிடந்தால் அதற்கு சக்தி இருப்பதாகவே தெரியாது. அதனை வட்டமாக சுற்றி விட்டால்  அந்த வேகத்தில் தரையில் சுற்றிச்சுற்றி ஓட்டை இடுகிறது.  வட்டமாகச் சுற்றுவதால் பம்பரம் காந்த சக்தியைப் பெறுகிறது.

இந்தச் செயலுக்கு பூமியும் கிரகங்களுமே எடுத்துக் காட்டுகள். இவ்வாறு சுற்றுவது இரண்டு வகையாகும். ஒன்று தன்னைத்தானே சுற்றுவது. இரண்டாவது சூரியனைச் சுற்றி வருவது. இவற்றில் இரண்டு விதமான காந்த சக்திகள் வெளிப்படுகின்றன. சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையில் பரஸ்பரம் ஈர்ப்பு சக்தி காரணமாக அவை வானில் சிதறிவிடாமல் தம்மைத் தாம்  நிலைநிறுத்திக் கொண்டு  தமக்காக வகுக்கப்பட்ட பாதையிலேயே சுற்றி வருகின்றன. அவற்றுக்கு அந்த ஈர்ப்பு சக்தி வருவதற்கு அவை தம்மைத்  தாமே சுற்றி வருவதும் சூரியனைச் சுற்றி வருவதுமே காரணம்.

சூரியனைச் சுற்றி வருவதால் சூரியனியில் இருந்து வெளிப்படும் சக்தி காரணமாக கிரகங்களும் சக்தி பெறுகின்றன. தம்மைத்தாமே சுற்றி  வருவதால் தம்மில் உள்ள சக்தியை வெளிப்படுத்துகின்றன.  அதாவது அவற்றில் மறைந்துள்ள சக்தி தூண்டப்படுகிறது.    

பூமி தன்னைத்தான் சுற்றி வருவதை ‘ப்ரமணம்’ (Rotation) என்றும் சூரியனைச்  சுற்றி வருவதை பரிப்ரமணம் (Revolution)  என்றும் கூறுவர். பூமி தன்னைத்தானே சுற்றிவருவதாலும் சூரியனைச் சுற்றி வருதாலும் எவ்வாறு சக்தியைப்  பெறுகிறதோ, அதே போல் மனிதனும் தன்னைத்தானே சுற்றி ஆத்ம பிரதட்ஷணம் செய்வதாலும் கோவிலைச் சுற்றிவருவதாலும் சக்தி நிறைந்த வனாகிறான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீக சக்தி மறைந்து உள்ளூடாக இருக்கிறது. அது ஆத்ம ஸ்வரூபமாக இருக்கிறது. அதனை மையப் புள்ளியாகக் கொண்டு திரும்பத் திரும்ப சுற்றி வருவதன் மூலம் காந்த சக்தி ஏற்படுகிறது.

தன்னைத் தானே சுற்றி வந்தால் பழக்கமில்லாதவர் களுக்கு அதிலிருந்து கிடைக்கும் சக்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் தலை சுற்றுவதைப் பார்க்கிறோம். பிரதக்ஷிணத்தில் தன்னைவிட அதிக சக்தி உள்ளவற்றை சுற்றி வருவதன் மூலம் அதிக சக்தி பெற்றவர்களாக ஆகிறோம்.

கிரகங்கள் எல்லாச் சக்திக்கு மூலாதாரமான சூரியனைச் சுற்றி வந்து சக்தியை பெறுகின்றன. அதேபோல் மனிதன் கடவுளைச் சுற்றி பிரதக்ஷிணம் செய்து   தன்னில் உள்ள தெய்வீக சக்தியை மேம்படுத்திக் கொள்கிறான். கோவில்களில் கருவறை, கொடிமரம் போன்றவற்றைச் சுற்றி வருவதன் ரகசியமும் இதுவே.

அருணாச்சலம் போன்ற க்ஷேத்திரங்களில் மலை முழுவதையுமே சுற்றி வருகிறோம். இதனை கிரி பிரதக்ஷிணம் என்கிறோம். இதனை முதலில் ஆரம்பித்தது ஸ்ரீகிருஷ்ணன் என்று கூறலாம். இந்திர யாகம் செய்வதை  நிறுத்திவிட்டு கோவர்தன பர்வதத்திற்கு பிரதக்ஷிணம் செய்யச் சொல்லி கூறினான். அதனால் எத்தனை நல்ல பலன் கிடைத்தது என்பது அனைவருக்கும் தெளிவு.

அதேபோல் பெரியவர்களுக்கு பிரதகக்ஷிணம் செய்வது கூட மேன்மை அளிக்கும். தாய் தந்தையரை பிரதக்ஷிணம் செய்தால் எத்தகைய மிகச்சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை பிள்ளையாரின் கதை நமக்குத் தெரிவிக்கிறது.

சாதாரணமாக மூன்று முறை பிரதட்சிணம் செய்வது சம்பிரதாயம். மூன்று என்ற எண்ணிக்கை சத்துவ குணம், ராஜஸகுணம் தாமச குணம் என்ற மூன்றிற்கும், பூ, புவர், சுவர் என்ற மூவுலகங்களுக்கும், ஸ்தூலம் சூட்சுமம் காரணம் என்ற மூன்று   சரீரங்களுக்கும் குறியீடு.

சாதாரணமாக பிரதக்ஷிணம் செய்யும்போது கைகள் இரண்டையும் குவித்து நமஸ்கார முத்திரையில் செய்வார்கள். கிடு கிடுவென்று நடக்காமல் தங்களுடைய ஒரு பாதத்தோடு இன்னொரு பாதம் தொடும் விதமாக பார்த்துப் பார்த்து அடியெடுத்து வைத்து பிரதக்ஷிணம் செய்வார்கள். இதற்கு ‘அடிப் பிரதக்ஷிணம்’ என்று பெயர். இவ்வாறு செய்வதாக வேண்டிக் கொண்டு காரியம் நிறைவேறியதும் அடிப் பிரதட்சிணம் செய்வார்கள்.

பிரதக்ஷிணம் செய்யும்போது மனதை தெய்வத்தின் மீது நிலை நிறுத்தி தியானம் செய்து கொண்டு செல்வது சிறந்தது. அத்தகைய தியானம் நிலையாக இருப்பதற்காக ஜபம், ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டே செய்வார்கள். இது சாதாரணமாக அனைவரும் செய்வது.

திருப்பதி போன்ற புண்ணியத் தலங்களில் காணப்படும் சிறப்பான பிரதட்சிணம் அங்கப் பிரதட்சிணம் எனப்படும். ஈர உடையோடு தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டு உருளுவது. இது தம்மைத்தான் சுற்றுவதோடு கருவறையையும் சுற்றுவது. இதனைத் தாமாகவே செய்வது கடினம். ஒருவர் பூமியில் சாஷ்டாங்கமாக நமஸ்கார முத்திரையில் இருந்தால் மற்றொருவர் அவரை உருட்டிக்கொண்டே செல்வார். இது ஒரு பரிகாரம். இந்த கடினமான அங்கப் பிரதக்ஷிணத்தை பக்தர் செய்கிறார் என்றால் அதை விட எத்தனை கடினமான துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பாரோ!

ஆத்ம பிரதக்ஷிணம் செய்யும் போது இந்த மந்திரத்தைச் சொல்வது வழக்கம்.

“யானி கானிச பாபானி ஜென்மாந்த்ர கிருதானிச !

தானி தானி ப்ரணஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே !

இதன் பொருள்: ஜென்மாந்திரத்தில் செய்த சகல பாவங்களும் பிரதக்ஷிணத்தால்  அழியட்டும்.

பிறப்பு இறப்பு என்று ஜன்மச் சக்கரத்தில் சுற்றிவரும் ஜீவன் இந்த பிறவிச் சுற்றில் இருந்து மீள வேண்டுமானால் இறைவனைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வதை விடச் சிறந்த பரிகாரம் வேறு என்ன இருக்கப் போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com