குமுறல்

சிறுகதை
குமுறல்
Published on

ஓவியம் ; தமிழ்

 சாரதா மீன் அலசிக் கொண்டிருந்தபோது அவ்வழியே வண்டியில் போன சொக்கன், "ஏக்கோவ்... உம்புருசன் சரக்கடிச்சிட்டு நம்ம பெருமாளு கடயில்ல... அதாண்ட விழுந்து கெடக்கார்...' என்று கத்திக் கொண்டு போனான்.

'சனியம் புடிச்சவனுக்கு வேற வேல... சரக்கடிச்சிட்டு விழுவுற நாயி நடுரோட்டுல கீட்டுல விழுந்தா காருக்காரனோ... லாரிக்காரனோ அடிச்சித் தூக்கிப் போட்டுட்டு போவானுல்ல... இதுவும் போயி சேந்திரும்.. நாங்களும் நிம்மதியா இருப்போம்... கெடந்து எந்திரிச்சி வரட்டும்...' மனசுக்குள் அவனைத் திட்டியபடி வேக வேகமாக மீனை நறுக்க, கையில் நறுக்கிக் கொண்டாள்.

"ஆஆஆ.... ஸ்ஸ்ஸ்ஸ்.... எழவெடுத்த அருவாமன... இன்னும் பழவாமக் கெடந்துக்கிட்டு..." என அருவாமனையை தூக்கி வீசினாள். அது 'நங்'கென தூரத்தில் போய் விழுந்தது. கையை தண்ணீரில் கழுவி வாயில் வைத்துக் கொண்டாள்.

சாரதா 'ஆ' என்று அலறியதையும் அருவாமனை 'நங்' என்று விழுந்ததையும் கேட்ட பெரியவள் கனகா வீட்டுக்குள் இருந்து ஓடிவந்தாள்.

"என்னம்மா ஆச்சு...?"

"ம்.... கையில வெட்டிருச்சு..."

"பாத்துப் பண்ணமாட்டியா...? யாரு மேலயோ உள்ள கோவத்தை அருவாமனக்கிட்ட காட்டினா... நாந்தான் மீனலசித்தாறேன்னு சொன்னேனுல்ல... அதுக்குள்ள உனக்கென்ன அவசரம்...? போ.. போயி... மொளகாத்தூளாச்சும் காபித்தூளாச்சும் வச்சிக்கட்டு..." என்றபடி அருவாமனையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

சாராத ஒன்றும் பேசாமல் வாய்க்குள் விரலை வைத்தபடி நகர, "அம்மோவ்... முத்த போயி அப்பாவை கூட்டியாரச் சொல்லு... அவரு அங்கன விழுந்து கெடக்கது யாருக்கு கேவலம்...? நமக்குத்தானே..." என்றாள் மெல்ல.

வாயிலிருந்து கையை எடுத்து சேலைத் தலைப்பால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, "நமக்கென்னடி கேவலம்... தெனந்தென விழுந்து கெடக்குற அந்த மனுசனுக்குத்தான் கேவலம்... போயி கூட்டியாந்துட்டாப்புல தொர சாயந்தரம் குடிக்க போகம இருக்கப் போவுதா...? அதெல்லாம் அதுலயே சாகப் பொறந்ததுக... என்ன பண்றது காக்க வேண்டிய அரசு ஊத்திக் கொடுக்குது... வாழவேண்டிய நாம செத்துக்கிட்டு இருக்கோம்..." என்றாள்.

"காசு வாங்கிட்டுத்தானே ஓட்டுப் போட்டிய... நல்ல அரசைத் தேர்ந்தெடுக்காத நாமளுந்தான் குத்தவாளி... அதை தெரிஞ்சிக்க.. சும்மா அரசியல் பேசிக்கிட்டு... நீ மொதல்ல கட்டுப் போடு... அவனப் போயி அப்பாவை தூக்கிட்டு வரச்சொல்லு..."

"ஆமா... அவந்தானே... அவனெல்லம் எளந்தாரிப் பயடி... குடிச்சிப்புட்டு கெடக்க மனுசன போயி தூக்குவானா... அவனுக்கும் மானம், மருவாத இருக்கும்ல்ல... என்னது பிரா...பிராசு.. அது என்ன எழவுடி அது வருதுல்ல... நீங்கள்லாம் அடிக்கடி சொல்லுவியலே..."

"அம்மா அது பிரஸ்டீஸ்....?"

"ஆமா அதுதான்... அது அவனுக்கும் இருக்குமுல்ல... கட்டிக்கிட்ட பாவத்துக்கு நானே போய்த் தொலயிறேன்..."

சாரதா பெருமாள் கடைக்கிட்ட போனபோது "வா சாரதா... உம்புருஷன் கெடக்கதைப் பாரு... நாங்கூட சோடா வெல்லாம் ஒடச்சி ஊத்திப் பாத்தேன்... ம்ஹூம்.... ஒண்ணும் முடியல... நம்ம சாதி சனம் வர்ற இடத்துல இப்புடிக் கெடந்தான்னா... ரெண்டு பொட்டப் புள்ளயவும் கட்டிக்கிட்டுப் போக எவன் வருவான்... கண்டிச்சி வய்யித்தா... பொண்டாட்டியால கண்டிக்க முடியாத புருசனுமா இருக்கான்..." என்றார்.

"எங்கண்ணே... குடிச்சிப்புட்டு ரோட்டுல விழுகாம வீட்டுல வந்து விழுந்து கெடன்னு கூட சொல்லிட்டேன்.... ரெண்டு புள்ளக வெளஞ்சி நிக்கிதுகன்னு இந்தாளுக்குத் தெரியாதா..? பயலுகளும் இப்ப கர்புர்ன்னு நிக்கிறானுங்க... இது காலையிலயே தொடங்கிருது.... முடியலண்ணே... ஒருநா இல்லாடி ஒருநா நானும் எம்புள்ளைகளும் மருந்தக்குடிச்சிட்டு சாகப் போறோம்... அதுதான் நடக்கப் போவுது பாருங்க" சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"ஏய் கழுத... என்ன பேசுறே...? பேசாம நம்ம ராமசாமி அண்ணனுக்கிட்ட சொன்னா நாலு தட்டு தட்டிவிடும்..."

"அட ஏண்ணே நீ வேற... அதெல்லாம் தட்டி... கேக்குற ஆளா இந்தாளு... இது மண்ட மண்ணுக்குள்ள போற வரக்கிம் திருந்தாது... சரி சோடாவுக்கு எவ்வளவு...?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... போ...."

"அட புடிண்ணே.... ஆனவெலயோ பூனவெலயோ உனக்கும் குடும்பம் இருக்குல்ல... இந்தா பிடி" என பத்துரூபாயை நீட்டினாள். சில சில்லறைக் காசை அவள் கையில் கொடுக்க, வாங்கிக் கொண்டு கணவனருகில் சென்றாள்.

வேஷ்டி விலகியிருக்க, உள்ளே போட்டிருந்த ஜட்டி தெரிந்தது... வாந்தி எடுத்து முகமெல்லாம் அப்பியிருக்க, அருகில் சென்றவளுக்கு அந்த நாற்றம் குடலைப் பிடிங்கியது. கடந்து சென்றோரெல்லாம் அவனை திட்டிக் கொண்டே சென்றனர். அவளுக்கு அழுகை பீரிட்டது.

'நல்லவேளை மச்சான்.. இந்தாளு ஜட்டி போட்டுக்கிட்டு வந்து விழுந்து கிடக்கான்... இல்லேன்னா அன்னைக்கு கிருஷ்ணர் தெருவுல ஒருத்தன் படங்காட்டிக்கிட்டு கிடந்தானே... அது மாதிரி ரோட்டுல போறவுகளுக்கு இலவச படம் காட்டியிருப்பான்..' என்று பேசிச் சிரித்தபடி இருவர் சைக்கிளில் கடக்க, வேகமாக அவனின் வேஷ்டியை சரி செய்தாள்.

'பாவம்... இந்தப் புண்ணியவதி... இவனக்கட்டி நடுத்தெருவுல நிக்கிறா...' என்றபடி கடந்தனர் இரண்டு பெண்கள். சாரதாவுக்கு பொங்கிக் கொண்டு அழுகை வந்தது. தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்தாள்... ஆனால் அவளையும் மீறி கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.

அவனை மல்லுக்கட்டி தூக்கி, வேஷ்டியை இழுத்துச் சொருகி கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு நடக்கலானாள். அவனை இழுத்து நடப்பது பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஒரு வேகத்தோடு நடக்கலானாள். அவளின் நடை தள்ளாடியது... 'இப்ப குடிச்சிருக்கது... இந்தாளா... நானா...?' அந்த நேரத்திலும் அவளுக்குள் இப்படித் தோன்ற அழுகையினூடே அவளுக்கு சிரிப்பு வருவது விரியும் உதட்டில் தெரிந்தது.

'வீட்டுல பொம்பளங்க சரியா இருக்கமாட்டாளுங்க... அதுதான் ஆம்பளங்க குடிச்சிட்டு தெருவுல கிடக்கானுக...' ஏதோ தத்துவத்தைப் பேசியது போல ஒரு பெருசு சத்தமாய்ப் பேச, இன்னொரு பெருசு அதை அமோதிப்பது போல ஆமாம் போட்டது. சாரதாவுக்கு சுள்ளென்று வந்தது.

நடையை நிறுத்தி தோளில் சாய்ந்திருக்கும் புருஷனை நறுக்கென பிடித்துக் கொண்டு அந்தப் பெருசைப் பார்த்து 'யோவ் என்ன சொன்னே... வீட்ல பொம்பள சரியில்லயா.. வர்றீயா ஏ வீட்டுக்கு... பொம்பள சரியில்லயாமே பொம்பள... நீங்க குடிச்சிட்டு விழுந்து கெடப்பீக... உங்கள கட்டுன பாவத்துக்கு நாங்க நடுரோட்டுல நின்னு நாயிம் பேயிம் பேசுறதக் கேக்கணும்... இன்னைக்கி நேத்தில்ல இருபத்தஞ்சு வருசமா இந்தாள இப்படிச் சுமக்குறேன்... அக்கா மவன் கல்யாணமான சரியாயிருவான்னு எங்கப்பன் கட்டி வச்சிட்டுப் பொயிட்டான்... வயசு காலத்துல குடிச்சுட்டு வந்து அடிப்பான்... உதைப்பான்... குடி வெறியோட என்ன இழுத்துப் போட்டு.... அதையும் தாங்கித்தான் நாலு புள்ளப் பெத்தேன்... ஒவ்வொரு புள்ள பொறக்கும் போதும் இனி திருந்துவான்... இனி திருந்துவான்னு நெனச்சி நெனச்சி... நாந்தாய்யா தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கேன்... ரெண்டு பொட்டப்புள்ளக கல்யாண வயசுல... அதுகளுக்கு அப்பன் ரோட்டுல கெடந்தா அசிங்கம்ன்னு போயி கூட்டிக்கிட்டு வான்னு அழுவுதுக... அதெல்லாம் தெரிஞ்சா இவன் குடிப்பானா..?" என்ற வினாவோடு பேச்சை நிறுத்தி அவர்களைப் பார்க்க பெருசுகள் தலை குனிந்து நின்றனர்.

"சாரதா நீ போ... வெறும்பயலுக என்ன வேணுமின்னாலும் பேசுவானுங்க..." என்று பெருமாள் அதட்ட "இருங்கண்ணே... இன்னும் பேச வேண்டியது பாக்கியிருக்கு..." என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்...

"நீங்க குடிக்க எதாவது ஒரு காரணம் வேணும்... அதுக்கு வீட்ல பொம்பள சரியில்ல... புள்ள சரியில்ல... அப்படின்னு ஏதாச்சும் சொல்லிக்க வேண்டியது... அதுவுமில்லன்னா மனசு சரியில்லன்னு சொல்லி குடிக்க வேண்டியது... அறிவுகெட்டவனுங்களா குடிச்சே சாவுங்கடான்னுதானே அரசாங்கம் வீதிக்கு ஒரு கட தெறந்திருக்கு... அதுல வாழ்க்கய தொலச்சிட்டு விதிய நொந்துக்கிட்டு வீதியில நிக்கிற பொம்பளங்க எம்புட்டுப் பேருன்னு உங்க அரசுக்கு தெரியுமாய்யா... ஒரு பிரியாணிக்கும் சாராயப் பாட்டிலுக்குந்தானே வேவாத வெயில்ல கெடந்து செத்தானுக... வாயிக்கி வந்ததெல்லாம் பேசாதீக... குடிகாரனோட பொண்டாட்டிகளுக்கும் சொல்லிமாளாது... புரிஞ்சிக்கங்க... நல்லநா... கெட்டநா... எதுவுமில்ல எங்களுக்கு... சந்தோசமா கோயிலுக்குப் போக... தல நெறய பூ வச்சிக்கிட்டு எல்லாரு மாதிரியும் புருசங் கூட சினிமாவுக்குப் போக... எதுவுமே எங்களுக்கு கொடுப்பின இல்ல... சாயங்காலமான சின்ன வயசுல மாட்டை தேடி அலஞ்ச மாதிரி எங்க விழுந்து கெடக்கானுங்கன்னு தேடி அலயிறதுதான் எங்க பொழப்பு... ஐயா பெரியவுகளே... நீங்க பெரிய மனுசங்க... மத்தவங்களை வாயார புகழாட்டியும் நெஞ்சுல குத்தாதீக..." என்றவள் மீண்டும் கணவனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com