பெண்களே, முதியோரே வலதுசாரிகளாக மாறுங்கள்!

Chain snatching
Chain snatching

என் உறவினர் பெண்ணிடமிருந்து வந்த தொலைபேசித் தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவளுடைய தங்கத் தாலிக்கொடி பறித்துச் செல்லப்பட்டதாம்!

அநேகமாக தினமும் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகள் வருகின்றன என்றாலும், நமக்கு ரொம்பவும் வேண்டியவர்களுக்கு நடக்கும்போது மனசு ஏகமாய் வலிக்கத்தான் செய்கிறது.

மருத்துவர் யோசனைப்படி தினமும் வாக்கிங் போகிற வழக்கத்தை சுமார் ஒரு மாத காலமாக மேற்கொண்டிருந்தாள் அவள். அப்படி தினமும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தெருக்கள் வழியாக அவள் வாக்கிங் போவதை எவனோ கவனித்திருக்கிறான். கூடவே அவளுடைய கழுத்தையும்! குறிப்பிட்ட நாளன்று தன் டூ வீலரில் அவளைப் பின்தொடர்ந்த அவன், தெரு திருப்பத்தில் கச்சிதமாக அவளை நெருங்கி, இடது கையால் அவளுடைய தாலிக்கொடியைப் பற்றி, அதே நேரம் வலது கையால் ஆக்ஸிலேட்டரைத் திருக, அவள் தடுமாறி கீழே விழுந்திருக்கிறாள். அவனுடைய இழு பலத்துக்கும், கீழே விழுந்த இவளுடைய உடல் எடைக்கும் ஈடு கொடுக்க முடியாத தாலிக்கொடி, அறுந்து, பறித்தவனின் கையோடு போய்விட்டது.

அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள், அந்தப் பெண். மலங்க, மலங்க சுற்று முற்றும் பார்த்தாள், வெற்றுக் கழுத்தை கை சோகமாக வருடிக் கொடுத்தது. சற்றுத் தொலைவில் இந்த சம்பவத்தைக் கண்ட ஓரிருவர் அந்த டூ வீலர்க்காரனைத் துரத்திப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அவன் ஏற்கெனவே திட்டமிட்டதுபோல, தன் வாகனத்தின் வேகத்தைக் குறைக்காமல் பக்கத்து சந்துகளில் புகுந்து எங்கோ போய்விட்டான்.

இதற்குள்  அவளை எழுப்பி உட்கார வைத்த சில பெண்மணிகள், ‘எப்பவும் புடவைத் தலைப்பினால் கழுத்தை மூடிக் கொண்டு போகணும் அம்மா,‘

‘காலம் கெடக்கற காலத்திலே இத்தனை காஸ்ட்லியான தாலிக்கொடியை மாட்டிக்கொண்டு சம்பிரதாயத்தை அனுசரிக்கத்தான் வேண்டுமா? மஞ்சள் கயிறு போதாதா?‘

‘காலை ஏழு மணிதான்னாலும் தனியா வராதீங்கம்மா. யாரையாவது கூட அழைச்சுக்கோங்க.‘

‘ராத்திரில ஒரு பெண் நிறைய நகைகள் அணிந்துகொண்டு தனியே போற நாள்தான் இந்தியா பூரண சுதந்திரம் அடைஞ்ச நாள் அப்டீன்னு காந்திஜி சொன்னார். இப்ப பகல்லயே நடமாட முடியலியே!‘

‘உடனே போலிஸ்ல கம்ப்ளயின்ட் கொடுங்க. இதுமாதிரியான திருட்டுப் பசங்களைச் சும்மா விடக்கூடாது,‘

-இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவள் கடைசி யோசனையை உடனே செயல்படுத்தினாள். போலிஸார் வந்தார்கள், விசாரித்தார்கள். அந்தப் பகுதி வீடுகளில் இருக்கக்கூடிய ccடிவி காமிராக்களை ஆராய்ந்து இந்தச் சம்பவம் பதிவான காட்சிகளை நகல் எடுத்துக் கொண்டார்கள். ‘‘வழிப்பறித் திருடனை விரைவில் அடையாளம் கண்டு பிடிச்சு கைது பண்ணி, நகையையும் மீட்டுடலாம், கவலைப்படாதீங்க,‘‘ என்று ஆறுதலும் சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நகை விரைவில் கிடைப்பதற்கும், அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்வுபூர்வமான பாதிப்பிலிருந்து அவள் விடுபடவும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதாகச் சொன்னேன்.

ஆனால், அதற்கு பதிலாக அவள் எனக்குச் சொன்ன யோசனைதான் என்னை வியப்பிலாழ்த்தியது. என்ன அது?

ஒரு பெண் தனியே சாலையில் நடந்து போகிறாள் என்றால், அவள் வலதுசாரியாக இருந்தால் இதுபோன்ற இழப்பு, வருத்தங்களிலிருந்து தப்பிக்கலாமாம். அது எப்படி?

பொதுவாகவே இப்போது நடைபாதைகள் எல்லாம் பாதசாரிகளின் பயன்பட்டுக்கு அல்ல; வரம்பு மீறி நீட்சி பெற்ற கடைகளுக்கும், பலவகை வாகன நிறுத்தங்களுக்கும், வியாபாரிகளுக்கும்தான் என்றாகிவிட்டதால், பாத(வ)சாரிகள் சாலையில் இறங்கித்தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்லும்போது வலது ஓரத்தைப் பயன்படுத்திக் கொண்டால், பின்னாலிருந்து வாகனத்தில் வந்து நகைப்பறி செய்யவே முடியாது. ஏனென்றால் எல்லா வாகனங்களும் இடதுசாரிகளே! ஆகவே அவளுக்குப் பின்னாலிருந்து வரும் வாகனம் வலது பக்கம் செல்லும் பெண்ணிடமிருந்து நகையைப் பறித்து வேகமாகச் செல்லுமானால் எதிரே வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும். இந்த ரிஸ்க்கை வழிப்பறியான் எடுக்க மாட்டான்!

அட, நல்ல யோசனையாக இருக்கிறதே என்று வியந்தேன். அவள் கூடுதல் யோசனையும் தந்தாள்: ‘வயதானவர்கள், தனித்து சாலையில் செல்ல வேண்டியிருந்தால் அவர்களும் வலது ஓரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இவர்கள் உடல்நலக் கோளாறால் தடுமாறினார்களென்றால் எதிரே வரும் வாகனம் தன் வேகத்தைக் குறைத்து அவர் மீது மோதாமல் இருக்கும். அதே அவர் இடது பக்கமாகச் சென்றாரானால் பின்னாலிருந்து (என்ன வேகத்தில் வருமோ!) வரும் வாகனத்தால் உடனே கட்டுப்பட முடியாமல் அவர் மீது மோதிவிடும்.

ஆகவே தனித்துச் செல்லும் பெண்களும், முதிய ஆண்-பெண்களும் சாலையின் வலது பக்கத்தில் செல்வதே அவர்களுக்கும், அவர்களுடைய உடைமைக்கும் பாதுகாப்பு என்றாள் அவள்.

இதுவும் சரிதானோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com